Homeசெய்திகள்மாணவன் இறப்புக்கு பிரபல ஆசிரியை காரணமா?

மாணவன் இறப்புக்கு பிரபல ஆசிரியை காரணமா?

மாணவன் இறப்புக்கு பிரபல ஆசிரியை காரணமா?

பழங்குடியின மாணவன் இறப்புக்கு பிரபல ஆசிரியை மகாலட்சுமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை அவர் மறுத்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் மலை பகுதியான ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் அரசவெளி என்ற கிராமத்தில் அரசு பழங்குடியினர் பள்ளி இயங்கி வருகிறது. உண்டு உறைவிட பள்ளியான இங்கு மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். நம்மியம்பட்டை சேர்ந்த சேவத்தான் மகன் சிவகாசி (15) என்பவர் இங்கு தங்கி 10ம் வகுப்பு படித்து வந்தார். 

கடந்த 28ந் தேதி முகம் வீங்கிய நிலையில் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட மாணவன் சிவகாசிக்கு நம்மியம்பட்டு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பிறகு நிலைமை மோசமாகவே வேலூர் பாகாயம் மருத்துவமனையிலும்¸ அதன் பிறகு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவகாசி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதையடுத்து மாணவனின் தந்தை சேவத்தான்¸ ஜமுனாமரத்தூர் போலீசில் புகார் செய்தார். அதில் முகத்தில் இருந்த முகப்பருவை ஆசிரியை மகாலட்சுமி¸ ஊசியால் குத்தியதால் முகம் வீங்கி விட்டதாக சிவகாசி எங்களிடம் கூறினான். எனவே எனது மகனின் இறப்புக்கு காரணமான ஆசிரியை மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதன் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து மாணவனின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. 

மாணவன் இறப்புக்கு பிரபல ஆசிரியை காரணமா?
ஆசிரியை மகாலட்சுமி

குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியை மகாலட்சுமி¸ செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர். குழந்தை தொழிலாளர் அதிகம் உள்ள ஜமுனாமரத்தூரில் கிராமம்¸ கிராமமாக சென்று கல்வியின் மகத்துவத்தை எடுத்துரைத்த காரணத்தால் உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவ- மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நண்பர்களிடம் நிதி உதவி பெற்றும்¸ தனது சம்பளத்தை கொண்டும் அந்த பள்ளியின் தரத்தை மகாலட்சுமி உயர்த்தினார். மேலும் கொரோனா காலத்தில் மாணவ- மாணவியர்களிடத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தால் அவர்களின் வீட்டிற்கே சென்று பாடம் நடத்தினார். மாணவர்களுக்கு அவர் முடி வெட்டுவது¸ தலைவாரி விடுவது போன்ற படங்களும்¸ சேலைக்கு பதில் சீருடை அணிந்து அவர் பாடம் சொல்லி தருவதும் இணையத்தில் பரவி ஆசிரியை மகாலட்சுமிக்கு  பாராட்டை பெற்றுத் தந்தன. இவரது சேவையை மையமாக வைத்துதான் ஜோதிகா நடித்த ராட்சஷி படம் வெளியானதாக சொல்லப்படுகிறது. 

மாணவன் இறப்புக்கு பிரபல ஆசிரியை காரணமா?
இணையத்தில் வைரலான படம் 

அதே சமயம் மகாலட்சுமிக்கு எதிர்ப்புகள் இல்லாமல் இல்லை. 16 வருடங்கள் ஒரே பள்ளியில் பணியாற்றி வரும் மகாலட்சுமி  கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிதால் மாலையில் அவரது நீக்கம் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு அதிமுகவினரால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ஆசிரியை மகாலட்சுமி வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்த குரல் பதிவால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் மாணவனின் மரணத்தில் அவர் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். 

இது குறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்ட போது¸ பள்ளியை இடித்து காட்டுகிறேன் என அதிமுகவினர் விட்ட சபதத்தின் காரணமாகத்தான் இந்த குற்றச்சாட்டு. 28ந் தேதி மாணவன் சிவகாசி முகத்தில் இருந்த கட்டியை அவன் கிள்ளி இருந்ததால் ரத்தம் வடிந்தது. அழுத்தி பார்த்தேன். சீழ் வந்தது. துடைத்து விட்டேன். முளைப்பு வெளியே தெரிந்ததால் சரியாகி விடும் என அவனை தேற்றினேன். நடுவில் ஒரு வருடம் அவன் பள்ளிக்கு வரவில்லை. 20ந் தேதிதான் பள்ளிக்கு வந்தான். பாடத்தை நன்றாகத்தான் கவனித்தான். அவன்தான் என்னுடைய போனை வாங்கி யாருக்கோ போன் செய்தான். ஆனால் போனை எடுக்காததால் போனை கொடுத்து விட்டான். பிறகு நான் வீட்டிற்கு வந்ததும் சிவகாசி தொடர்பு கொண்ட எண்ணில் இருந்து எனக்கு போன் வந்தது. சிவகாசி அழுகிறான். வந்து அழைத்துச் செல்லுங்கள் என்று தகவல் கொடுத்தேன். 

கட்டிதானே சரியாகி விடும் என்று நினைத்து விட்டு விட்டேன். அதன்பிறகு மருத்துவமனையில் சீரியசாக இருப்பதாக கேள்விப்பட்டேன். வீக்கம் கண் வரையில் இருந்ததால்தான் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி என்பவர் பள்ளிக்கு வந்து மிரட்டியதாக கேள்விப்பட்டேன். அதன் பிறகு மாணவன் சிவகாசி இறந்தததை அறிந்து ஒன்றுமே புரியவில்லை. 

இதையடுத்து பள்ளிக்கு முன் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் கிடைத்ததையடுத்து போலீசுக்கு தகவல் சொன்னேன். அவர்கள் வந்து என்னிடத்திலும்¸ மாணவர்களிடத்திலும் விசாரித்தார்கள் நான் ஊசியால் குத்தவில்லை என அவர்களிடத்தில் கூறினேன். மாணவனை அனுப்பும் போது அந்த அளவிற்கு வீக்கம் இல்லை எனவும்¸ ஒரு நாள் முழுக்க சிவகாசியை அவர்கள் வைத்திருந்து விட்டு என் மீது குற்றம் சாட்டுவதை பற்றியும் தெரிவித்தேன். அரசியலுக்காகவும்¸ என்னை அந்த பள்ளியிலிருந்து அப்புறப்படுத்துவதற்காகவும் பொய்யான குற்றச்சாட்டு சொல்வது அசிங்கமாக உள்ளது. 

குழந்தை தொழிலாளர் பற்றியும்¸ குழந்தை திருமணம் பற்றியும் பேச ஆரம்பித்துள்ளேன். செம்மரம் வெட்டிதால் தங்களது தந்தை ஜெயிலில் இருப்பதாக குழந்தைகள் என்னிடத்தில் வந்து அழுகிறார்கள். அதனால் செம்மரம் குறித்தும் பேசுகிறேன். குழந்தை தொழிலாளர்களை புரோக்கர்கள் வந்து அழைத்துச் சென்றால் தடுப்பேன். போன வாரம் குழந்தை தொழிலாளர்களாக பொள்ளாச்சிக்கு சென்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகள் பள்ளிக்கு வந்து விட்டனர். ஒரு குழந்தையும் 10ம் வகுப்பு தேர்வு எழுத வீட்டிலேயே இருந்து விட்டது. கல்வி மட்டும்தான் சமூக மாற்றத்தை தரும் என்பதால் எனக்கு உள்ள சில தொடர்புகளை குழந்தைகளுக்காக பயன்படுத்துகிறேன். இவர்களுக்கு கல்வி கொடுக்க¸ கொடுக்க அரசியல்வாதிகளுக்கு பயம் அதிகரிப்பதாக நினைக்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

ஆசிரியை ஊசியால் குத்தியதால்தான் மகன் இறந்தான் என தந்தை புகார் கூறியிருப்பதாலும்¸ இந்த குற்றச்சாட்டை ஆசிரியை மறுத்திருப்பதாலும் போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்பார்த்துள்ளனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!