திருவண்ணாமலை அருகே மசூதிக்கு வருகை தந்து இஸ்லாமிய மக்களின் குறை கேட்ட அமைச்சர் மஸ்தானிடம் பென்ஷன் வராதது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், போளுர் ஆகிய பகுதிகளில் உள்ள மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று ஆய்வு மேற்கொண்டார். மசூதியில் உள்ள ஜமாத்துகளை சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், கட்டிடங்கள் பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதேபோல் தேவாலயங்களுக்கு சென்று பாதிரியார்களை சந்தித்து அவர்களுடைய அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
அதன்பிறகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களை நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுத்து வருகிறேன். இந்த ஆண்டு பள்ளிவாசல்கள் மற்றும் மசூதிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பழுது பார்த்துக் கொள்ளவும் பராமரிப்பு செய்து கொள்ளவும் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் சுமார் ரூ. 5 கோடி அளவிற்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் மசூதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. தேவாலயங்களை பழுது பார்க்கவும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் அடுத்தாண்டு இந்த நிதியினை ரூ.10 கோடியாக உயர்த்தி தருவதாக உறுதியளித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலத்தில் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த வக்பு வாரியத்திற்கு சொந்தமான ரூ.750 கோடி மதிப்பிலான சொத்துக்களை சட்டப் போராட்டங்கள் நடத்தி மீட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கேட்டவரம்பாளையம் மசூதியில் ஆய்வு செய்து விட்டு வெளியே வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை, ஊர் பொதுமக்கள் சந்தித்து தங்களின் பலபேருக்கு முதியோர் உதவித் தொகை வரவில்லை என்றும், மாடி வீடு உள்ளவர்கள், நிலம் வைத்திருப்பவர்கள் என தகுதியற்றவர்களுக்கெல்லாம் முதியோர் உதவித் தொகை முறைகேடாக வழங்கப்பட்டு வருவதாகவும், தகுதிகள் இருந்தும் ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை என்றும் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
இதனால் திகைப்படைந்த அமைச்சர், யார்,யாருக்கெல்லாம் முதியோர் உதவித் தொகை வரவில்லை என்பதை கணக்கெடுத்து தகுதியானவர்களுக்கு வழங்குங்கள் என்றும், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும கணவனால் கைவிடப்பட்டோர் என்ற நிலை இருந்தால் கட்டாயம் அவர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் இதுசம்மந்தமாக மனுக்களை பெற்று பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏவிடம் அளிக்குமாறும் பஞ்சாயத்து தலைவரை கேட்டுக் கொண்டார்.
ஆய்வின் போது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.