திருவண்ணாமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எஸ்.டி சான்றிதழ் கேட்டு தலையில் தேங்காய் உடைத்து குருமன்ஸ் இன மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை¸ தண்டராம்பட்டு¸ செங்கம்¸ புதுப்பாளையம் போன்ற பகுதிகளில் குருமன்ஸ் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களது தாய் மொழி கன்னடம் ஆகும். விவசாயம்¸ ஆடு மேய்ப்பது¸ ஆடு ரோமங்களை கொண்டு கம்பளி நெய்வதும் இவர்களது தொழிலாகும். திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் இந்த சமுதாயத்திற்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது.
குருமன்ஸ் இன மக்களான இவர்களுக்கு தமிழ்நாட்டில் குரும்பா என்ற பெயரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) சான்று வழங்கப்படுகிறது. இதனால் கல்வி¸ வேலை வாய்ப்பில் உரிமைகள் பாதிக்கப்பட்டு வருவதால் தங்களுக்கு எஸ்.டி என (பழங்குடி) சாதி சான்று வழங்க வேண்டும் என போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இன்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒரு கட்டத்தில் 1000த்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் அந்த அலுவலக பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. ஏராளமான பள்ளி மாணவ-மாணவியர்களும் வந்திருந்தனர். தாங்கள் பயன்படுத்தும் கருவிகளையும் அவர்கள் எடுத்து வந்திருந்தனர். ஆர்.டி.ஓ. வெற்றிவேல் அவர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது குருமன்ஸ் இன மக்கள் தங்களின் பாரம்பரிய வழக்கப்படி தலையில் தேங்காய் உடைத்தும்¸ கன்னட மொழியில் ராகம் பாடியும்¸ கம்பளிக்காக ரோமங்களை நெய்தும் காட்டினர்.
பிறகு குருமன்ஸ் இன பிரதிநிதிகளை அலுவலகத்திற்கு வரவழைத்து ஆர்.டி.ஓ. பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் தாசில்தார்கள்¸ போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 1 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதிகாரிகள் தரப்பில் ஒரு வார காலம் அவகாசம் கேட்கப்பட்டதை ஏற்காத நிர்வாகிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி மு.பிரியதர்ஷினி¸ அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் குருமன்ஸ் இன மக்களின் போராட்டம் இரவு வரை தொடர்ந்தது.
இது குறித்து போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் ஸ்ரீவீரபத்திர சுவாமி குருமன்ஸ் பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.முருகேசன் கூறியதாவது¸
எஸ்.டி சான்று கேட்டு¸ குருமன்ஸ் பழங்குடியின மக்கள் பல வருடங்களாக பலகட்ட போராட்டத்தை நடத்தினோம். போராட்டத்தின்போது மாவட்ட ஆட்சியர்¸ வருவாய் கோட்டாட்சியர்¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இவர்கள் அனைவரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தையின் மூலம் குருமன்ஸ் பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தை ஆய்வறிக்கை செய்து சாதி சான்று வழங்குவதாக தெரிவித்தனர். அதன்பின்னர் பழங்குடியின ஆய்வு மைய குழு தலைவர் பாலடா தலைமையில் கலாச்சார் ஆய்வு செய்யப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இயக்குனரகத்தில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது.
அந்த ஆய்வறிக்கையின்படி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்¸ மண்டல துணை வட்டாட்சியர்¸ வட்டாட்சியர் இவர்களின் முன்னிலையில் எங்களின் கலாச்சாரத்தை காண்பித்தோம். அதன்பிறகு கணினி மூலம் குருமன்ஸ் பழங்குடியினர் சாதி சான்று வேண்டி விண்ணப்பித்துள்ளோம். ஆனால் இன்றுவரை பழங்குடியினர் சாதி சான்று குருமன்ஸ் கலாச்சார ஆய்வறிக்கையின் படி வழங்கவில்லை. மேலும் புதியதாக குருமன்ஸ் பழங்குடியின மக்களுக்கு இ-சேவை மையத்தில் பதிவு செய்து சான்று பெற உத்தரவு இருந்தும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து இ- சேவை மையத்தில் குருமன்ஸ் பழங்குடியினர் சாதி மட்டும் பதிவு செய்யக்கூடாது என அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
எனவே எஸ்.டி என சாதி சான்று வழங்கும் வரை எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சஞ்சீவி பழனி¸ குருமன்ஸ் மடத்தின் தலைவர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சி.மனோகரன் அனைவரையும் வரவேற்றார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்¸ 8ந் தேதி திருவண்ணாமலைக்கு வர உள்ள நிலையில் குருமன்ஸ் இன மக்களின் போராட்டம் அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.