அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கான பேனர்களை அகற்றுமாறு கூறிய அதிகாரிகளிடம் ஆர்ப்பாட்டம் மறியலாக மாறி விடும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலை சுற்றி அதிமுகவினர் பேனர்களை கட்டியிருந்தனர். மொத்தம் 23 பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு போலீசாருடன் வந்த தாசில்தார் மற்றும் அலுவலர்கள் நுழைவு வாயில் முன்பு இருக்கும் பேனர்களை அகற்றும்படி சொன்னார்களாம். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு அதிமுகவினர் தகவல் தெரிவித்தனர். மற்ற கட்சியினர் பேனர் வைத்த போது எங்கே சென்றீர்கள்? சட்ட விரோதமாக வைக்கப்படிருக்கும் பேனர்களையெல்லாம் அகற்றினீர்களா? என அதிகாரிகளிடம் எகிறிய அக்ரி.கிருஷ்ணமூர்த்தி பேனர்கள் மீது கை வைத்தால் ஆர்ப்பாட்டம், மறியலாக மாறி விடும் என எச்சரித்தாராம். இதனால் செய்வதறியாமல் திகைத்த அதிகாரிகள், தங்களுடைய மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அக்ரி. கிருஷ்ணமூர்த்தியும், மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ்சை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இதனால் பேனர்களை அகற்றாமல் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கில் அதிமுகவினர் பங்கேற்றனர். அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றதாகவும், அதிமுகவினரை பழிவாங்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளை காவல்துறையின் மூலம் போடுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்து வரி, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரங்கநாதன், ஜெயசுதா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வன ரோஜா உள்பட அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட ஒன்றிய, நகர,பேரூர் கிளைகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் 3 ஆயிரம் பேர் பங்கேற்றதாக உளவுதுறை, அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பி உள்ளது. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற கலெக்டர் அலுவலகம் முன்பு அதிக அளவு தொண்டர்கள் திரண்டிருந்ததால் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களும், அரசு ஊழியர்களும் மாற்று வழியில் திருப்பி அனுப்பப்பட்டனர்.