திருவண்ணாமலை அருகே முதியோர் உதவித் தொகை பெற லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளரை விஜிலென்ஸ் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா. கணவர் பெயர் புதுரான். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இரண்டு மகன்கள், இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. 100 நாள் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த சுலோச்சனாவுக்கு கடந்த 2019ம் ஆண்டு முதல் விதவை உதவித்தொகை தரப்பட்டு வந்தது.
இந்நிலையில் திடீரென்று இந்த உதவித் தொகை கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்பட்டு விட்டது. இதே போல் அதே கிராமத்தைச் சேர்ந்த கனகா, குப்பு ஆகியோருக்கும் முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கடந்த மே மாதம் 30ந் தேதி மனு அளித்தனர்.
இதன் மீது விசாரணை நடத்திய புது மல்லவாடி வருவாய் அதிகாரி ஷாயாஜி பேகம், 3 பேரிடமும் முதியோர் உதவித் தொகை மீண்டும் தர வேண்டுமானால் தலா ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் முதல் தவணையாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.15 ஆயிரம் வாங்கிக் கொண்டாராம். மீதி பணத்தை தரும்படி ஷாயாஜி பேகம் கேட்டு வந்தாராம். கூலி வேலை செய்து வந்த அவர்களால் மீதி பணத்தை தர முடியவில்லை.
இதையடுத்து சுலோச்சனா, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இன்று காலை அவர்கள் ரூபாய் நோட்டுகளில் ரசாயன பவுடரை தடவி ரூ.5 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். இந்த பணத்தை சுலோச்சனா, புது மல்லவாடியில் தனது அலுவலகத்தில் இருந்த ஷாயாஜி பேகத்திடம் தந்தார்.
அப்போது மறைந்திருந்த விஜிலன்ஸ் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் அவரை கையுங்களவுமாக பிடித்து கைது செய்தனர். பிறகு அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது ஷாயாஜி பேகத்தின் பையில் ரூ.40 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு கருந்துவாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி கலைவாணனை பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் விஜிலன்ஸ் போலீசார் கைது செய்தனர். அப்போது அங்கு வருவாய் அதிகாரியாக இருந்த ஷாயாஜி பேகத்திடம் விசாரணை நடத்தப்பட்டதும், ஷாயாஜி பேகத்தின் பணியை பாராட்டி குடியரசு தின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.