திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை போன்று தமிழ்நாட்டில் வேறு எந்த பள்ளியும் இல்லை என பாராட்டு
மாணவிகள் வசதிக்காக புதியதாக மேம்பாலம் கட்ட அரசுக்கு பரிந்துரை
அடுக்கு மாடி கார் பார்க்கிங் வர அனுமதிக்க மாட்டோம் என பேட்டி
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளி பிரமிக்க வைப்பதாக பாராட்டு தெரிவித்த சட்டமன்ற கணக்கு குழு அந்த பள்ளியின் 2 கட்டிடங்களுக்கு குறுக்காக ரோடுகள் செல்வதால் புதியதாக மேம்பாலம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யும் என கூறியுள்ளது.
நகராட்சி பழைய அலுவலக கட்டிட இடத்தில் பள்ளிதான் இயங்க வேண்டும், அடுக்குமாடி கார் பார்க்கிங் வர அனுமதிக்க மாட்டோம் என குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழுவினர் அதன் தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் இன்று திருவண்ணாமலைக்கு வந்தனர். திருவண்ணாமலை தேரடித் தெருவில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டனர்.
அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறை குறித்தும், உணவுப் பொருட்கள் இருப்புவிவரம், இருப்பு பதிவேட்டின் விவரம், வருகை பதிவேட்டின் படி மாணவர்களின் எண்ணிக்கை, மாணவியர்களின் கல்வித் தரம் பற்றியும், மாணவியர்களிடம் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் விளக்குகள், மின்விசிறிகள், மின்சார சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளதா என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.
விதைப்பண்ணையில் ஆய்வு
இதனைத் தொடர்ந்து அத்தியந்தல் கிராமத்தில் உள்ள மாநில விதைப்பண்ணை, கீழ்பென்னாத்தூர் மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆதிதிராவிடர் நலன் அரசினர் மாணவர் விடுதி, கழிக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பிறகு வள்ளிவாகை கிராமத்தில் வட்டார நாற்றாங்கால் உற்பத்தி செய்யப்படுவதை பார்வையிட்டனர்.
மாலையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பொதுக் கணக்கு குழு கூட்டம் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், பொதுக் கணக்கு குழுவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தி.வேல்முருகன் (பண்ரூட்டி), ஈ.ராஜா (சங்கரன்கோயில்), ஒய்.பிரகாஷ் (தளி), மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), ஓ.ஜோதி (செய்யார்), ஊரக வளர்ச்சி இணைச்செயலாளர் தேன்மொழி, துணை செயலாளர் ரேவதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், மாவட்ட வன அலுவலர் அருண்லால், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருவண்ணாமலை பகுதியில் 7 இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். கடந்த ஆட்சி காலத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றாமல் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதில் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பள்ளிகளை தரம் உயர்த்தும் போது வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை நிதி ஒதுக்கீடு செய்தும் சரியாக பராமரிக்காமல் இருந்துள்ளனர் அவைகள் களையப்பட வேண்டும். சிறு விவசாயிகளுக்கு மானிய தொகையில் வழங்கப்படும் டிராக்டர்களை குறைந்தது 4 ஆண்டுகள் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் 2ஆண்டில் அதை விற்று விடுகின்றனர். எனவே மானிய தொகையை திரும்ப வசூல் செய்ய சொல்லி இருக்கிறோம். இல்லையெனில் கிரிமினல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்குக்கு செல்வோம்.
காமராஜருக்கு பெருமை
திருவண்ணாமலையில் உள்ள மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது தமிழ்நாட்டில் இல்லாத அளவு பிரமிக்கின்ற வகையில் 6,7 ஆண்டுகளாக 100 சதவீதம் மாணவிகளை சேர்த்துள்ளனர்.
கல்விக் கண் திறந்த காமராஜருக்கு பெருமை சேர்த்திடும் மாவட்டமாக திருவண்ணாமலை உள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் திருவண்ணாமலை மாவட்டம் சிறப்பாக உள்ளது என்பதற்கு இந்த பள்ளி ஒரு எடுத்துக் காட்டாகும். இதற்காக பள்ளி தலைமை ஆசிரியை யை அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளோம்.
இதேபோல் கல்வித்துறை செயலாளருக்கும் பாராட்டு தெரிவித்திருக்கிறோம்.
இன்னும் நிறைய மாணவர்கள் இந்த பள்ளியில் சேர தயாராக இருக்கின்றனர். ஆனால் கட்டிடம் தான் இல்லை. எனவே பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட சிறப்பு நிதி ஒதுக்கி தரவும், அப்பள்ளியில் இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் செல்லும் சாலைக்கு குறுக்கே மேம்பாலம் அமைக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம்.
துரிதமாக நடவடிக்கை எடுத்து இப்பள்ளியை சிறப்பு பள்ளியாக மாற்றுவோம். பழைய நகராட்சி அலுவலக கட்டிட இடத்தில் பள்ளி தான் வர வேண்டும் அடுக்குமாடி கார் பார்க்கிங் வர அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று திருவண்ணாமலைக்கு வந்த அமைச்சர் நேருவிடம், பாழடைந்திருக்கும் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு அடுக்குமாடி கார் பார்க்கிங் அமைத்திட வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதற்கு நேர்மாறாக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
43 வகுப்பறை – 4144 மாணவிகள்
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேநிலைப்பள்ளி 1948 ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக துவக்கப்பட்டு 1951-ல் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 1978 ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 43 வகுப்பறைகள் உள்ளது.
1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளின் எண்ணிக்கை 248, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளின் எண்ணிக்கை 1250, 9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளின் எண்ணிக்கை 1,177 மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளின் எண்ணிக்கை 1,469 ஆக மொத்தம் 4,144 மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 90 ஆசிரியர்கள் மற்றும் 2 அலுவலகப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 10ஆம் வகுப்பு 95.27சதவீதம், 11 ஆம் வகுப்பு 96.76சதவீதம், 12 வகுப்பு 96.90 சதவீதமாக உள்ளது.