திருவண்ணாமலை பஜாரில் அடுக்குமாடி கார் பார்க்கிங் அமைக்க வேண்டும் என அமைச்சர் நேருவிடம், எ.வ.வேலு கோரிக்கை வைத்தார்.
வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைத்தாலும் குறைப்போம் அல்லது கூடுதலாக்க வேண்டும் என்றால் கூடுதலாக்குவோம் என அமைச்சர் நேரு கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (24.08.2022) திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது,
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1000 கோடி, நமக்கு நாமே திட்டத்தில் ரூ.100 கோடி, நகர்ப்புற மேம்பாடு திட்டத்தில் ரூ.400 கோடி, நிதியினை தமிழக முதலமைச்சர் வழங்கியிருக்கிறார். மக்களுக்கு அடிப்படை தேவை என்னென்ன தேவை இருக்கிறது என்று அறிந்து கொண்டு வாருங்கள் என முதலமைச்சர் அறிவுறுத்தியதன் பேரில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
பிரச்சனை எதுவும் இல்லை
750 சதுர அடிக்கு 25 சதவீதம், 1200 சதுர அடிக்கு 50 சதவீதம், 1500 சதுர அடிக்கு 100 சதவீதம் இப்படிதான் சொத்து வரி ஏற்றப்பட்டிருக்கிறது. ஏதாவது மாறுபாடு இருக்குமானால் மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் பேசி சீர் செய்து கொள்ளலாம். இதில் பிரச்சனை எதுவும் இல்லை.
பொதுவாக நகராட்சி துறையில் கடைகள் வைத்திருக்கும் வியாபார பொது மக்கள் தங்கள் பகுதியில் மூன்றாண்டுக்கு ஒரு முறை வரியாக 15 சதவீதம் சேர்த்து 10 ஆண்டு, 15 ஆண்டு என வாடகை கட்டாத காரணத்தால் ஒரே நேரத்தில் 50 சதவீதம் 100 சதவீதம், 200 சதவீதம் கட்ட வேண்டிய நிலைமை வந்திருக்காது. எனவே நகராட்சி ஆணையாளர் இங்கே வந்திருக்கும் அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு தனியாரிடம் எப்படி இருக்கிறதோ அதை போலவே ஒவ்வொரு மூன்றாண்டுக்கு ஒரு முறை வரியை மறுசீரமைப்பு செய்தீர்களேயானால் எந்த பிரச்சனையும் இருக்காது.
திருவண்ணாமலையை பொருத்தவரை வரி கூடுதலாக இருக்குமேயானால் அதை கலந்து பேசி குறைக்க வேண்டுமானால் குறைப்போம், கூடுதலாக்க வேண்டும் என்றால் கூடுதலாக்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,
எண்ணிக்கை கூடுதலாகிறது
திருவண்ணாமலை ஆன்மீக நகரம். இதை நீங்கள் (நேரு) நன்றாக அறிவீர்கள். ஆன்மீகத்தில் நான் ஜீரோ என்றால் நீங்கள் 100 மார்க் வாங்குவீர்கள். திருவண்ணாமலைக்கு வெளிநாட்டிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து சென்று கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கூடி வருகிறது. வாக்காளர்கள் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். இந்த ஊரில் வாழ்கிற மக்கள் எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால் இங்கு தினமும் வந்து போகிறவர்களின் எண்ணிக்கை கூடுதலாகி கொண்டே போகிறது.
எனவே இந் நகரின் வளர்ச்சிக்கு தேவையானவற்றை நிறைவேற்றித் தருமாறு துறை செயலாளரிடம் சொல்லி நிறைவேற்றி தருகிறேன் என அமைச்சர் சொல்லியிருக்கிறார். குறிப்பாக திருவண்ணாமலை காந்தி நகரில் புதியதாக மார்க்கெட்டும், அரசு நிகழ்ச்சிகளை நடத்திட ஏதுவாக கூட்ட அரங்கமும் கட்டித் தர சம்மதம் தெரிவித்துள்ளார். அதே போல் சமுத்திரம் காலனியில் சமுதாய கூடமும் கட்டித் தர வேண்டும்.
இன்னொரு புதிய கோரிக்கை என்னவென்றால் திருவண்ணாமலை கோயிலின் எதிரில் உள்ள பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் பாழடைந்து பழைய கட்டிடமாக இருக்கிறது. அந்த கட்டிடத்தை அகற்றி விட்டு அடுக்குமாடி கார் பார்க்கிங் கட்டினால் ஆன்மீக மக்களுக்கு உதவியாக இருக்கும், நகராட்சிக்கு வருமானமும் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சட்டமன்ற துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்; வழங்கல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, நகராட்சி நி;ர்வாக இயக்குநர், பொன்னையா. குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சி ஆணையர் சு.செல்வராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பா.முருகேஷ், (திருவண்ணாமலை), அமர்குஷ்வாஹா (திருப்பத்தூர்) ஷ்ரவன் குமார் ஜடாவத் (கள்ளக்குறிச்சி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி மறறும் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக அமைச்சர்கள் நேரு,வேலு ஆகியோர் திருவண்ணாமலை காந்திநகர் மைதானத்தில் புதியதாக பூ மார்கெட் மற்றும் காய்கறி சந்தை அமைவதற்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.