சொத்தை மகன் ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டதாக கூறி தாயும், தந்தையும் தீக்குளிக்க முயன்றதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மனுதாரர்கள் சிலர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்திலும் 4 பேர் தீக்குளிக்க முயன்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் சேர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் டி.சுப்புராயன்(வயது 85). விவசாயி. இவரது மனைவி தும்பா. இவர்களுக்கு ரமேஷ், பன்னீர்செல்வம் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சுப்பராயன், அவரது மனைவி தும்பா, 2வது மகன் பன்னீர்செல்வம் ஆகிய 3 பேரும் கலெக்டர் அலுவலகம் வந்து கேனில் இருந்த மண்ணெண்ணெயை தங்களது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றனர். இதைப்பார்த்தும் அங்கிருந்த போலீசார் ஓடி வந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
சுப்பராயன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
என்னுடைய மூத்த மகன் ரமேஷின் மனைவி சரிதா என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு மாதம் இறந்து விட்டார். அவர்களது 2 மகன்களுக்கும் சொத்து ஆதரவு செய்து தர வேண்டும் என்று பஞ்சாயத்தாரும் உறவினர்களும் கோரிக்கை வைத்ததால் தான செட்டில்மெண்ட் எழுதி தர முடிவு செய்தேன். பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று கையொப்பமிட்டேன்.
பின்னர் பத்திர பதிவு ஆவணங்களின் நகல் வாங்கி சரிபார்த்த போது 2வது மகன் பன்னீர் செல்வத்திற்கு சேர வேண்டிய வீடு, நிலம், பொதுவில் உள்ள வண்டி பாதை, போர்வெல், நெற்களம் என அனைத்தையும் ரமேஷ்,அவருடைய இரு மகன்களான தமிழரசு மீற்றும் குணா ஆகியோர்களின் பெயரில் என்னை ஏமாற்றி கிரையமாக பத்திர பதிவு செய்துள்ளார்.
தான செட்டில்மெண்ட் எழுதி தருவதாக சென்ற என்னை ஏமாற்றி கிரையம் பெற்றதாக கூறி மோசடியாக கிரைய பத்திரம் எழுதியுள்ளனர். என்னுடைய மருமகள் சரிதா இறந்து விட்டதால் அந்த சூழ்நிலையை வைத்து எங்களை நிர்பந்தப்படுத்தி எழுதி வாங்கி விட்டார்கள்.
என்னையும், எனது மனைவியையும் உணவு, உடை, உறைவிடம் ஆகிய எவ்வித பராமரிப்பும் மகன் ரமேஷ் செய்யவில்லை. பெற்ற மகன் என்று அவன் சொன்னதை நம்பி பத்திர பதிவு செய்ய ஒப்புக்கொண்டேன். ஆனால் அவன் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டான். எனவே பத்திர பதிவுகளின் ஆவணங்களை ரத்து செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதே போல் கலசப்பாக்கத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளிக்க முயற்சித்தார். போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்ததில் பழங்கோயில் வி.ஏ.ஓ பட்டா மாறுதலுக்கு பணம் கேட்டதாகவும், 2 முறை தலா ரூ.5ஆயிரம் தந்ததாகவும், மேலும் அவர் பணம் கேட்டதால் மன உளைச்சல் அடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
தற்கொலைக்கு முயன்ற 4 பேரையும் போலீசார் விசாரணைக்காக கிழக்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.