திருவண்ணாமலை நகரமன்ற கூட்டத்தில் வார்டுகளில் எந்த வேலையும் நடக்காதது குறித்து திமுக கவுன்சிலர்களே புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை நகராட்சி கூட்ட அரங்கில் நகரமன்ற கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திவேல்மாறன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் டாக்டர் பழனி பேசும் போது திருமலை நகர் 10வது தெருவில் போடப்பட்ட கால்வாய் இடிந்து விட்டது. 12தட்டு மண், 12தட்டு ஜல்லியோடு 1 மூட்டை சிமெண்ட்டை கலந்து கால்வாய் கட்டப்பட்டுள்ளது. பணத்திற்கு ஆசைப்பட்டு ஒப்பந்ததாரர்கள் தரமற்ற வேலைகளை செய்கின்றனர். இதனால் நகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. டெண்டர் விடும்போது கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
நகரமன்ற கூட்டத்தில் ஒப்பந்தத்திற்கான பொருள் வைக்கப்படுவது குறித்து முன்கூட்டியே கவுன்சிலர்களை அழைத்து விவாதியுங்கள்.வார்டுகளில் வெளிஆட்கள் டெண்டர் வேலையை செய்ய அனுமதிக்க கூடாது. ஏனென்றால் அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லபோவதில்லை. கவுன்சிலர்களைத்தான் மக்கள் கேட்கின்றனர். எனவே வார்டுகளில் நடக்கும் வேலைகளை அந்தந்த கவுன்சிலர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
திமுக கவுன்சிலர் மண்டி பிரகாஷ் பேசும் போது டெண்டர் விடப்படும் போது கவுன்சிலர்களுடன் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர் பிரகாஷ் பேசும் போது தனது வார்டில் ஜனவரி மாதம் விடப்பட்ட டெண்டருக்கான பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை என்றும், பழுதான குடிநீர் டேங்க்கை சரிசெய்ய சொன்னேன். இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
திமுக கவுன்சிலர் செந்தில் பேசுகையில் பேகோபுரத்தெருவிலிருந்து பச்சையம்மன் கோயிலை இணைக்கும் ரோடு கடந்த 10 வருடங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. எனவே ரோடு போட்டு தர கேட்டேன். ஆனால் பணம் இல்லை என கூறிவிட்டனர். கவுன்சிலராகி 6 மாதம் ஆகிறது. இதுவரை எனது வார்டில் ஒரு செங்கலை கூட நகர்த்தி வைக்க முடியவில்லை என ஆதங்கப்பட்டார்.
திமுகவின் மூத்த நகரமன்ற உறுப்பினர் சீனிவாசன் பேசுகையில் எனது வார்டில் கழிப்பறை கட்டித் தர கோரிக்கை வைத்தேன். ஆனால் இந்த கோரிக்கை மன்ற பொருளில் வைக்கப்படவில்லை. கழிப்பிடம் என்பது அத்தியாவசிய தேவையாகும். இதனால் எனது வார்டுக்குள் நுழைய முடியாமல் ஓடிவிடக் கூடிய நிலை உள்ளது. எனவே மும்மூர்த்திகள் (தலைவர், துணைத்தலைவர், ஆணையாளர்) எனது வார்டுக்கு நேரில் வந்து மக்களை சந்திக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
திமுக கூட்டணியைச் சேர்ந்த கவுன்சிலர் அப்பாஸ் பேசுகையில், எனது வார்டில் சாலை, கால்வாய் போடப்பட்டும் பயனில்லை. கால்வாயில் கழிவு நீர் செல்லாமல் மழை வந்தால் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றார்.
இதற்கு பதிலளித்த துணைத் தலைவர் ராஜாங்கம், அனைத்து வார்டுகளிலும் ஆய்வு நடத்த உள்ளோம். அப்போது மோசமான நிலையில் உள்ள வார்டுகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்கி தரப்படும் என்றார்.
அதிமுக கவுன்சிலர் சிவில் சீனிவாசன் பேசுகையில் கட்டண கழிப்பிடங்களை மீண்டும் இலவச கழிப்பிடங்களாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார்.
கழிப்பறை குறித்த முந்தைய செய்திகளை காண…
சிறுநீர் கழிக்க ரூ.10 வசூல்- பக்தர்கள், பொதுமக்கள் அவதி
கட்டண கழிப்பிடத்திற்கு கடும் எதிர்ப்பு-பின் வாங்கிய நகராட்சி
அதிமுக ஆட்சி காலத்தில் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் உள்பட நகரில் உள்ள நகராட்சி கழிப்பிடங்கள் இலவசமாக மாற்றப்பட்டன. இந்நிலையில் இவை சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் திமுக ஆட்சியில் கட்டண கழிப்பிடங்களாக மாற்றப்பட்டன. இதற்கு பக்தர்கள் தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பவே மீண்டும் இலவச கழிப்பிடமாக மாற்ற நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இலவச கழிப்பிட திட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் முருகேசன் உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்
அதிமுக ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இலவச கழிப்பிட திட்டம் நகராட்சியில் மீண்டும் அமுல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏன்? என்று கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிமுக கவுன்சிலர் சிவில் சீனிவாசனிடம் கேட்ட போது இலவச கழிப்பிடங்கள், சரியான பராமரிப்பில்லாமல் சுகாதார சீர்கேடோடு விளங்கியது. இதன் காரணமாகத்தான் கட்டண கழிப்பிடங்களாக மாற்றம் செய்யப்பட்டது. இப்போது மீண்டும் இலவசமாக மாற்றப்பட்டால் பராமரிப்பு இருக்காது, இதனால்தான் எதிர்ப்பு தெரிவித்தேன் என்றார்.