திருவண்ணாமலை தேரடி தெருவில் 4 மணி நேரமாக சுய நினைவின்றி கிடந்தவருக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
தேரடி தெரு, திருவண்ணாமலை நகரத்தின் முக்கிய வீதியாக விளங்கி வருகிறது. இங்கு நகைக்கடைகள், துணிக்கடைகள், உணவகங்கள் போன்ற முக்கிய நிறுவனங்கள் இருப்பதால் எப்போதும் கூட்டம் மிகுந்து காணப்படும். ஆடி பவுர்ணமியான நேற்று காலை முதல் திருவண்ணாமலையில் கோயிலுக்கும், கிரிவலம் செல்லவும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் தேரடித் தெரு முழுவதும் பக்தர்களின் தலையாகவே காணப்பட்டது.
இந்நிலையில் தேரடித் தெரு, அபிராமி ஹோட்டல் அருகில் ரோட்டின் ஓரம் காவி வேட்டி அணிந்த 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நான்கு மணி நேரமாக சுயநினைவு இன்றி கிடந்தார். உடலில் உயிர் இருக்கிறதா? இல்லையா? என தெரியாமல் இருந்தது. கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தாலும் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. மேலும் அந்த வழியாக சென்று அதிகாரிகளும் இதை கண்டு கொள்ளவில்லை.
அப்போது அந்தப் பக்கமாக மோட்டார் சைக்கிளில் ரோந்து வந்த வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் விஜய் என்ற போலீஸ்காரர் ரோட்டில் மயங்கி கிடந்த வரை பார்த்து உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்ப முயற்சித்தார் ஆனால் முடியவில்லை. தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவியாளராக உள்ள முனீஸ் தலைமையில் ஊழியர்கள், உயிர்காக்கும் மருந்து பெட்டியுடன் உள்ள பைக்கில் வந்து சுய நினைவு இன்றி இருந்தவருக்கு ஊசி மருந்து கலந்த குளுக்கோஸ்சை ஏற்றினர்.
இதன் காரணமாக அந்த நபருக்கு சுயநினைவு வந்தது. அவரை போலீஸ்காரர் விஜய்யும் திருவண்ணாமலையின் நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் சுரேஷ் என்ற போலீஸ்காரரும் கைத்தாங்கலாக எழுப்பி நிற்க வைத்தனர். தங்களது சொந்த செலவில் புதிய லுங்கி வாங்கி அவருக்கு அணிவித்து 108 ஆம்புலன்ஸ்சில் ஏற்றி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த நபர் எதற்காக மயங்கி கிடந்தார்? உடல்நிலை குறைவா? அல்லது கஞ்சா போதையா? அவர் யார்? சன்னியாசியா? என்பதெல்லாம் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் மனித நேயத்துடன் ஓடோடி வந்து உதவி செய்த போலீஸ்காரர்களுக்கு அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்தனர். அவர்கள் மட்டும் முதலுதவி செய்யாமல் இருந்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியாது எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். போலீஸ்காரர்கள் அந்த நபருக்கு உதவி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மனித நேயம் மரத்து போகவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் என பல தரப்பினரும் போலீஸ்காரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.