திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் போதை பழக்கத்திலிருந்து மீள விரும்புவர்களுக்கு தனி சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துதல் தடுத்தல் மற்றும் மறு வாழ்விற்கான 24 மணி நேர சேவை மையத்தினையும் அவர் துவக்கி வைத்தார்.
இந்த மையத்தை தொடர்பு கொண்டு போதை பொருள் பயன்பாடு குறித்த விவரங்கள் தெரிவிக்கலாம் என்றும், தகவல் அளிப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போதை பொருட்களை தடை செய்தல், பயன்பாட்டினை தவிர்த்தல் மற்றும் போதை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வினை ஏற்படுத்தி தரும் வகையில் இன்று 8.8.2022 முதல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மருத்துவர்கள், காவல் துறை பணியாளர்கள் உள்ளிட்டவர்;களை கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் போதை தடுப்பு மற்றும் மறுவாழ்விற்கான கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது.
மேலும் போதை பழக்கத்திலிருந்து மீள மறுவாழ்வு தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியாக ஒரு சிகிச்சை பிரிவும் ஏற்படுத்தப்பட உள்ளது.
மாவட்டத்தில் எந்த இடத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இருந்தாலும் அதனை தெரிவிக்கவோ அல்லது போதை மருந்துகளை பயன்படுத்தி அதில் இருந்து மீள மறுவாழ்வு தேவைப்பட்டாலோ 04175-233344, 04175-233345 மற்றும் 9345478828 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம். போதை பொருட்கள் பயன்பாடு குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
போதை பழக்கத்திலிருந்து மீள மறுவாழ்வு தேவைப்படுகிறவர்களுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சையும் அளிக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, இணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் செல்வக்குமார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மனித சங்கிலி
போதை தடுப்பு மற்றும் மறுவாழ்விற்கான கட்டுப்பாட்டு அறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வண்ணம் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட மனித சங்கிலி நிகழ்ச்சியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார். அவரும், வேலூர் டிஐஜி ஆனிவிஜயாவும் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று மனித சங்கிலியை பார்வையிட்டார்.
திருவண்ணாமலை காந்தி சிலையில் தொடங்கிய மனித சங்கிலி அண்ணாமலையார் கோயில் சுற்றியுள்ள மாட வீதி வழியாக சின்ன கடை தெரு, பஸ் நிலையம், ஈசான்யம் வரை மாணவ-மாணவியகள் கைகோர்த்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.