நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி வருகிற 31ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பெரிய சிலைகளிலிருந்து சிறிய சிலைகள் வரை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 601 விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருவண்ணாமலை நகரத்தில் மட்டும் 108 சிலைகள் வைக்கப்பட உள்ளது.
இது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது விநாயகர் சிலை வைக்க நகராட்சி, தீயணைப்பு துறை, மாசு கட்டுப்பாட்டு துறை, காவல்துறை உள்பட 5 துறைகளின் அனுமதி அவசியம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார், கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து அனுமதி பெறும் வகையில் நிபந்தனைகளை தளர்த்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 31.08.2022 அன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழாவினை முன்னிட்டு 09.08.2018 நாளிட்ட பொது துறை அரசாணை (நிலை) எண்.598-ல் தெரிவித்த நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளிக்கப்படும். விநாயகர் சிலை வைக்க உள்ளவர்கள் மேற்தெரிவித்த அரசாணையில் குறிப்பிட்டுள்ள படிவம் 1-ல் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் 23.08.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர்களால் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
நிபந்தனைகள் வருமாறு:-
விநாயகர் சிலையை நிறுவ விரும்பும் எந்த ஓரு அமைப்பாளரும், சம்பந்தபட்ட காவல் ஆணையரங்களில் உள்ள காவல் துறை உதவி ஆணையர்களுக்கும் மற்ற சமயங்களில் ஆர்.டி.ஓ, சார் ஆட்சியரிடம் கீழ்கண்ட அலுவலகங்களிடம் பெறப்பட்ட ஆட்சேபனை இல்லை சான்றிதழுடன் படிவத்தில் (பார்ம் −1) விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பந்நப்பட்ட நில உரிமையாளர், முன்மொழியப்பட்ட நிலம் பொது நிலமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறைகளிடம் இருந்து ஆட்சேபனையின்மை சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
தமிழக மாசுக்கட்டுபாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் அவ்வப்போது விதித்துள்ள விதிகளின் படி சிலைகள் தூய களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். சிலைகளுக்கு பூசப்படும் வர்ணம் ஆனது நீரில் கரையக்கூடிய மற்றும் நச்சுதன்மையற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயங்களை பயன்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பபட்டுள்ளது.
தற்காலிக கட்டமைப்புகள் தீ பாதுகாப்பு தரத்தை கடைப்பிடிக்கும் வகையில் தீ மற்றும் மீட்பு சேவைகள் இருக்க வேண்டும்.
பொது இடங்களில் வழிபடும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் கரைக்க வேண்டும்
போதிய முதலுதவி மற்றும் அவசர மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவதையும் வழிப்பாட்டு பகுதிகளில் தீப்பிடிக்ககூடிய பொருள்கள் எதுவும் சேமித்து வைக்கப்படவில்லை என அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
நிறுவப்பட உச்தேசித்துள்ள சிலையின் உயரம் அடித்தளம் மற்றும் மேடை உட்பட 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மதவழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்களுக்கு அருகில் சிலைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
விநாயகர் வழிபாட்டின் கீழ் அங்கீகரிக்கப்படாத செயல்கள் மற்றும் மின்சாரம் திருடுதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தில் எந்த அரசியல் கட்சி மற்றும் வகுப்புவாத தலைவருக்கு அதரவாக பிளாக்ஸ் போர்டுகள் அமைக்க கூடாது.
மதவெறியை தூண்டம் வகையிலும், பிற மதத்தினரின் உணர்வுகளை பாதிக்கும் வகையிலும் முழக்கங்களை எழுப்புவதை எந்த வகையிலும் அனுமதிக்க கூடாது.
சிலைகளை கொண்டு செல்ல நான்கு சக்கர வாகனம், மினி லாரி, டிராக்டர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாட்டு வண்டி, மீன் வண்டி, மூன்று சக்கர வாகனங்கள் அனுமதிக்க இயலாது.
விநாயகர் சிலை நிறுவும் இடங்களில் மற்றும் கரைக்கும் இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது
இவை உள்பட 21 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.