Homeசெய்திகள்கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்

கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்று அதிரடியாக அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமித்தால் வழக்கு பாயும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை, 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டதாகும். திருவண்ணாமலை தேரடித் தெரு ராஜகோபுரம் அருகில் நகராட்சி பகுதியில் துவங்கி ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடிஅண்ணாமலை, வேங்கிக்கால் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட வழியாக இப்பாதை செல்கிறது.

பக்தர்கள் வெள்ளம்

திருவண்ணாமலையில் சிவனாக கருதப்படும் மலையை சுற்றினால் வாழ்வில் வளங்கள் பலவற்றைப் பெறலாம் என்பது பக்த கோடிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனால் கார்த்திகை தீபம், சித்ரா பவுர்ணமி மற்றும் பவுர்ணமி தினங்களில் கிரிவலப்பாதையே பக்தர்கள் வெள்ளத்தில் காட்சியளிக்கும். மலையை வலம் வருவது ஒவ்வொரு கிழமைகளிலும் ஒரு சிறப்பு என்பதால் தினமும் அண்ணாமலையை வலம் வருபவர்களும் உள்ளனர்.

திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கந்தசாமி, கிரிவலப்பாதை மேம்பாட்டிற்காக தனி கவனம் செலுத்தினார். இதன் காரணமாக டைல்ஸ் நடைபாதை, பக்தர்கள் இளைப்பாற இருக்கை வசதிகளுடன் கூடிய நவீன நிழற்குடை போன்றவை கிரிவலப்பாதையை அலங்கரித்து வருகின்றன.

கண்காணிப்பு குழு

ஆனால் டைல்ஸ் நடைபாதை சில சுயநலவாதிகளினால் ஆக்கிரமிக்கப்படவே இதை தடுக்கவும், தரமற்ற உணவு, தின்பண்டங்கள் விற்கப்படுவதையும், பக்தர்களை ஏமாற்றி அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்திட அதிகாரிகள்- காவல்துறையினர் அடங்கிய குழு ஒன்றை கலெக்டராக இருந்த கந்தசாமி ஏற்படுத்தினார். இந்த குழு ஒவ்வொரு பவுர்ணமி நாட்களிலும் ரோந்து வந்து முறைகேடுகளை தடுத்து வந்தது. கந்தசாமி மாற்றலுக்கு பிறகு இந்த குழு செயல்படவில்லை.

அதிக விலைக்கு விற்பனை

இதன் காரணமாக கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதிக விலைக்கு பொருட்களை விற்பதும் தொடர்ந்தது. உதாரணத்திற்கு நகரத்தில் 1லிட்டர் தண்ணீர் பாட்டல் 20 ரூபாய் என்றால் கிரிவலப்பாதையில் 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மற்ற பொருட்களின் விலையும் தாறுமாறாக எகிறியது. இதோடு நிஜ சாமியார்களோடு சேர்ந்து போலி சாமியார்களும் பெருகினர். இது பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.

See also  திருவண்ணாமலையில் 4 வழிச்சாலை பணிகள் தீவிரம்

இந்நிலையில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்று அதிரடியாக அகற்றப்பட்டன. இதற்கு முன் கலெக்டர் பா.முருகேஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் சுவாமி தரிசனம் செய்திடவும், கிரிவலம் செல்லவும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு மாத பௌர்ணமி, சித்ரா பௌர்ணமி மற்றும் தீபத்திருவிழா போன்ற நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்கள், பொது மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது. குறிப்பாக கிரிவலப்பாதையில் தண்ணீர், பொது சுகாதாரம், மின் விளக்குகள், நடைபாதைகள், சாலைகள், கண்காணிப்பு கேமிரா, பொது அறிவிப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது.

முன்னறிவிப்பு இன்றி…

இந்நிலையில், கிரிவலப்பாதையில் பக்தர்கள், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தற்காலிக கொட்டகைகள், நடை பாதையில் கடைகள், நடைபாதை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து பக்தர்கள் பயன்படுத்த இயலாத நிலையினை ஏற்படுத்தியிருப்பது, கடைகளுக்கு முன்பாக இருக்கைகள் போடுதல், நடைபாதையினை நிரந்தர வாகனம் நிறுத்துமிடமாக பயன்படுத்தல் போன்ற நிகழ்வுகள் தற்போது அதிகரித்து வருகிறது. மேற்தெரிவித்தவாறு ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் அனைவரும் இதனையே அறிவிப்பாக கருதி தாங்களாகவே முன்வந்து 19.08.2022-க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்ற தவறினால், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலை துறை, காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகள் இணைந்து எவ்வித முன்னறவிப்புமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

See also  அம்மணி அம்மன் மடம்-அட்வகேட் கமிஷனர் ஆய்வு

19ந் தேதி கெடு தேதி முடிவடைந்ததால் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. கிரிவலப்பாதையில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவலர்கள், பொறியியல் பிரிவு அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள்,
நில அளவையர்கள், உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், சாலை பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், கிராம உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அதிகாரிகள் அடங்கிய 7 குழுக்கள் அகற்றின.

சூட்கேசில் சிகரெட், பீடி

நிருதிலிங்கம் அருகே பாதையை ஆக்கிரமித்து கடை வைத்திருந்த பெண் ஒருவர், கடைக்கு போடப்பட்டிருந்த மேற்கூரையை பிரித்து அந்த பொருட்களை அருகில் உள்ள வனபகுதியில் பாதுகாப்பாக வைத்திருந்தார். மேலும் கடையில் வியாபாரத்திற்காக இருந்த பொருட்களை எதிரில் இருந்த இடத்தில் மறைத்து வைத்திருந்தார். அதை போலீசார் கண்டுபிடித்து எடுத்து வந்தனர். இதில் பெரிய சூட்கேஸ்சும் ஒன்று. போலீசார் சூட்கேசை எடுத்து வந்த போது அந்த பெண் அதை பறிக்க முயன்றார். ஆனால் போலீசார் விடாமல் எடுத்து வந்து திறந்து பார்த்தனர். அதில் பீடி, சிகரெட்டுகள் கட்டு கட்டாக இருந்தன. கடையோடு சேர்த்து அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்து லாரியில் ஏற்றி எடுத்துச் செல்லப்பட்டன.

ஜவுளிகடைக்கு எச்சரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். திருவூடல் தெருவில் ஒரு ஜவுளிகடை முன்பிருந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டதுடன் அந்த கடையின் முகப்பிற்கு சென்று கடையை பார்வையிட்டார். கடை உரிமையாளரை அழைத்து கடையின் முகப்பில் மேற்கூரைகள் கூடுதலாக அமைக்க கூடாது என எச்சரித்தார். மற்ற கடைக்காரர்களையும் இதே போல் எச்சரித்த கலெக்டர், குப்பைகளை அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில்தான் கொட்ட வேண்டும். மின்விளக்கு கம்பங்கள் சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் விளம்பர பதாகைகளை வைக்க கூடாது என கூறினார். ஜி.ஆர்.டி. நகைக்கடையில் வெளியில் வைத்திருந்த விளம்பர பலகையை அகற்றும்படி உத்தரவிட்டார்.

See also  கொரோனாவால் பாஸ் ஆனவர்களுக்கு சேல்ஸ்மேன் தேர்வில் நிபந்தனை

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது காவல் துறை வாயிலாக வழக்கு பதிவு செய்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ள கலெக்டர் முருகேஷ், ஒவ்வொரு மாதமும் கிரிவலப்பாதையில் சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் ஆக்கிரமிப்புகள் உள்ளனவா? என கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இரவு வரை தொடர்ந்தது. வடவீதி சுப்பிரமணியர் கோயில் தெரு-இரட்டை பிள்ளையார் கோயில் தெரு சந்திப்பில் ராஜகோபுரம் செல்லும் வழியில் ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. உடனடியாக அந்த இடத்தில் வெயில், மழையிலிருந்து பயணிகளை காத்திடவும், வரிசையாக நின்று செல்ல ஏதுவாகவும் கோயில் நிர்வாகம் சார்பில் நிழற்கூரை வைக்கப்பட்டது. பவுர்ணமி போன்ற விசேஷ தினங்களில் திருமஞ்சன கோபுரம் பகுதியில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்ட நிலையில் புதியதாக அம்மணி அம்மன் கோபுரத்திலிருந்து ராஜகோபுரத்தை இணைக்கும் வகையில் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜகோபுரம் முன்பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.

அதிரடிக்கு காரணம்?

திருவண்ணாமலைக்கு கோயிலுக்கு அடிக்கடி வந்து போகும் “பவரான ” குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆன்மீக நகரான திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது, பக்தர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என உயர் அதிகாரி ஒருவரிடம் தெரிவித்தன் விளைவே இந்த அதிரடி நடவடிக்கை என அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!