ஆய்வு கூட்டத்திற்கு சரியான புள்ளி விவரங்களோடு வராத நகராட்சி கமிஷனர்கள் மீது அமைச்சர் கே.என்.நேரு அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அரசுக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என வரி உயர்த்தியும் கோடிக்கணக்கில் பற்றாக்குறையை காட்டுவதா என காட்டம்
கமிஷனர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என கூறிய அவர் ஆம்பூர் கமிஷனரிடம் வேறு ஊருக்கு போக விருப்பமா? என கோபமாக கேட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அனைவரையும் வரவேற்றார். தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர், வழங்கல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர், பொன்னையா. குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சி ஆணையர் சு.செல்வராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பா.முருகேஷ், (திருவண்ணாமலை), அமர்குஷ்வாஹா (திருப்பத்தூர்) ஷ்ரவன் குமார் ஜடாவத் (கள்ளக்குறிச்சி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி மறறும் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு நகராட்சியின் தலைவர், கமிஷனர் மற்றும் பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் ஆகியோரிடம் அமைச்சர் நேரு வளர்ச்சி திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்தும், மேலும் என்னென்ன திட்டங்கள் தேவைப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். ஆம்பூர் நகராட்சி தலைவர் தனது நகராட்சிக்கு என்னென்ன திட்டங்கள் தேவைப்படுகிறது என்பதை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது ஆம்பூர் நகராட்சி கமிஷனர் ஷகிலாவிடம் நகராட்சியின் வரவு-செலவு கணக்கு குறித்து அமைச்சர் நேரு கேட்டார்.
அதற்கு பதிலளித்த கமிஷனர் ஷகிலா, ஆண்டுக்கு ரூ.30 கோடி வரவு வருவதாகவும், ரூ.40 கோடி செலவு ஆவதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்டு டென்ஷனான அமைச்சர் நேரு பொத்தாம் பொதுவாக கணக்கை சொல்வதா? கமிஷனர் இப்படி இருக்கலாமா? என கேட்டார். அதற்கு ஷகிலா சம்பளத்திற்கே ரூ.15 கோடி செலவாகி விடுவதாக கூறினார். இதனால் இன்னும் டென்ஷனான அமைச்சர் எதையாவது சொல்லி அசிங்கப்படாதீங்க, வேறு ஊருக்கு போக ஆசையா? என கேட்டார்.
பிறகு நகராட்சி உயர் அலுவலர்களை அழைத்து ஏதோ தெரிவித்தார்.
இதையடுத்து வாணியம்பாடி நகராட்சியின் நிலவரத்தை கேட்டார். அந்த கமிஷனரும் வரவு ரூ.16 கோடி, செலவு ரூ.18 கோடியே 93 லட்சம் என தெரிவித்தார். அரசுக்கு கெட்ட பெயர் வந்தாலும் வரட்டும் என சொத்து வரியை உயர்த்தியும் ரூ.2 கோடி பற்றாக்குறை என்றால் எப்படி? கமிஷனர்களுக்கு எதுவுமே தெரியவில்லை, முந்திரி பருப்பு சாப்பிட்டு விட்டு செல்வதற்காகவா வந்திருக்கிறோம்? என அமைச்சர் நேரு கடிந்து கொண்டார்.
சொத்து வரியை உயர்வினால் நகராட்சியின் வருமானம் அதிகரித்துள்ள நிலையில் கமிஷனர்கள் பழைய கணக்கை தெரிவித்ததே அமைச்சரின் கோபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. அமைச்சரின் கோபத்திற்கு ஆளான ஆம்பூர் கமிஷனருக்கு விரைவில் மாறுதல் இருக்கும் என கூறப்படுகிறது.