திருவண்ணாமலை சுங்க சாவடியால் சட்டம்-ஒழுங்கு கெட்டு விடுமோ என அச்சம் ஏற்பட்டிருப்பதாக கலெக்டரிடம், துணை சபாநாயகர் பிச்சாண்டி மனு அளித்துள்ளார்.
திருவண்ணாமலை-வேலூர் சாலையில் சிஷ்யா பள்ளி அருகில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சுங்கச் சாவடி அமைக்கும் பணிகள் தொடங்கின. நகரையொட்டி அமைக்கப்படும் இந்த சுங்கச் சாவடிக்கு அப்போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. பணிகள் முடிவடைந்தும் சுங்கசாவடி சில வருடங்களாக திறக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் திடீரென கடந்த 17ந் தேதி முதல் சுங்க சாவடி செயல்பட தொடங்கியது. இதற்கான அறிவிப்பு ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டதால் பெரும்பாலோனருக்கு தெரியவில்லை. இந்த சுங்க சாவடியில் கார், ஜீப், வேன்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.30 மற்றும் ரூ.35ம், சென்று திரும்பி வர ரூ.50ம், வணிக வாகனங்களுக்கு ரூ.50 மற்றும் ரூ.55ம், சென்று திரும்புவதற்கு ரூ.80ம், பஸ், டிரக்களுக்கு ரூ.110ம், சென்று திரும்புவதற்கு ரூ.170ம், கனரக வாகனங்களுக்கு ரூ.175லிருந்து ரூ.215வரையிலும், சென்று திரும்புவதற்கு ரூ.250லிருந்து ரூ.265வரையிலும் வசூலிக்கப்படுகிறது. இது தவிர மாதந்திர கட்டணங்களாக ரூ.1100லிருந்து ரூ.5840வரை பெறப்படுகிறது. உள்ளுர் வாகனங்களுக்கு சலுகை விலையில் கட்டணம் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுர் தனிப்பட்ட வாகனத்திற்கான மாதாந்திர அனுமதிச் சீட்டின் விலை ரூ.315 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல்துறை அலுவலகம், நீதிமன்றங்கள், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை போன்றவைகளுக்கு அருகிலேயே சுங்கசாவடி திறக்கப்பட்டு கட்டணம் வசூலிப்பதால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை உள்ளது. இதன் காரணமாக சுங்கச்சாவடியில் பதட்டம் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த சுங்கச்சாவடியை அகற்ற கோரி துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏக்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி மற்றும் எ.வ.வே.கம்பன் மக்கள் பிரதிநிதிகள், வியாபார சங்கங்களின் நிர்வாகிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று பகல் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்சை சந்தித்து மனுக்களை அளித்தனர்.
பிச்சாண்டி கொடுத்துள்ள மனுவில் திருவண்ணாமலை நகராட்சி எல்லையிலிருந்து 4.4கிலோ மீட்டர் தூரத்தில் இனாம்காரியந்தலில் நான்கு வழிப்பாதைக்குரிய வசதிகள் ஏதுமின்றி உள்ள சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதால் சட்டம்-ஒழங்கு கெட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சி செய்த தவறு
அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை இந்த சுங்கச் சாவடி செயல்படாமல் தடுக்கப்பட்டது என்ற அதிமுகவினரின் விமர்சனத்திற்கு, மாநில நெடுஞ்சாலை வசம் இருந்த சாலைகள், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்டன. முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி திருவண்ணாமலை-வேலூர் சாலையை, தேசிய நெடுஞ்சாலை வசம் கையெழுத்திட்டு ஒப்படைத்ததே சுங்க சாவடி வந்ததற்கு காரணமாகும் என திமுகவினர் பதிலளித்துள்ளனர்.
கலெக்டருக்கு அதிகாரம் உள்ளதா?
மத்திய அரசு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் வரும் சுங்கச்சாவடி குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்க அதிகாரம் உள்ளதா? என திமுக வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டதற்கு பிரச்சனைக்குரிய சுங்கச்சாவடியால் சட்டம்-ஒழங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை காரணம் காட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆட்சேபணை கடிதம் அனுப்பலாம். அதனால்தான் அவரிடம் மனு அளிக்கப்பட்டது என்றார்.
என்ன சொல்கிறது பா.ஜ.க?
திருவண்ணாமலை நகரையொட்டி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்ட போது இது சம்மந்தமாக மாநில தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம் என்றனர்.