Homeசெய்திகள்பலாத்காரம் செய்த ஆசிரியரை அடையாளம் காட்டிய சிறுமி

பலாத்காரம் செய்த ஆசிரியரை அடையாளம் காட்டிய சிறுமி

திருவண்ணாமலை அடுத்த சேத்துப்பட்டு அருகே மனைவி நடத்தும் பள்ளியில் நாலரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

தன்னை பலாத்காரம் செய்தது யார் என்று குரூப் போட்டோவை வைத்து சிறுமி அடையாளம் காட்டினார்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கங்கை சூடாமணி கிராமத்தில் ஸ்ரீ சாந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 1 முதல் 12ம் வகுப்பு வரை இங்கு வகுப்புகள் நடைபெறுகின்றன. இதில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியை பிரபாவதி என்பவர் நடத்தி வருகிறார். இவரது கணவர் காமராஜ், சேத்துப்பட்டு அருகே உள்ள உலகம்பட்டு அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

இவர் தனது மனைவி நடத்தும் பள்ளிக்கு அடிக்கடி சென்று வருவார். கடந்த மாதம் 31ந் தேதி காமராஜ், அந்த பள்ளியில் யு.கே.ஜி படிக்கும் நாலரை வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து ஸ்டோர் ரூமிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.

வீட்டுக்கு சென்ற சிறுமி பெற்றோர்களிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். சாதாரண வயிற்று வலிதான் என நினைத்து பெற்றோர்கள், மகளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று மருந்து, மாத்திரைகளை வாங்கி கொடுத்தனர். மறுநாளும் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை நடந்தது. இதன் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை.

5 நாட்களுக்கு பிறகு கடந்த 6ந் தேதி பள்ளிக்கு சென்ற அந்த சிறுமிக்கு ஆசிரியர் காமராஜ், சாக்லேட் கொடுத்து அழைத்துச் சென்று மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறுமிக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டது.

என்னவென்று கேட்டதற்கு சிறுமியால் தனக்கு நடந்ததை சொல்ல தெரியவில்லை. இதனால் போளுரில் உள்ள ஒரு தனியார் டாக்டரிடம் காட்டி முதல் உதவி பெற்று பிறகு அந்த சிறுமியை அவர்களது பெற்றோர்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் சிகிச்சை அளித்த போது சிறுமி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது.

உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் சைல்ட் லைனுக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து திருவண்ணாமலை சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளர் அசோக் குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.

இது சம்மந்தமாக போளுர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? என சிறுமிக்கு சொல்ல தெரியாததால் அந்த சிறுமியை போலீசார் ஸ்ரீ சாந்தா வித்யாலயா பள்ளிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த நேரத்தில் பள்ளியின் தாளாளர் பிரபாவதி தனது கணவர் காமராஜ் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றிருந்தார்.

பள்ளியில் இருந்த குரூப் படங்கள் ஒவ்வொன்றாக அந்த சிறுமியிடம் போலீசார் காட்டினர். படத்தில் இருந்த ஆசிரியர் காமராஜை அந்த சிறுமி அடையாளம் காட்டினார்.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஏற்பாட்டின் படி திருச்செந்தூர் அருகே உள்ள எட்டயபுரம் போலீசார் காமராஜை மடக்கி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காமராஜை அழைத்து வர போளுர் போலீசார் எட்டயபுரம் சென்றுள்ளனர்.

தகவல் கிடைத்ததும் அரசு பள்ளி ஆசியராக உள்ள காமராஜை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

மாணவ-மாணவியர்களுக்கு குருவாக விளங்க கூடிய ஆசிரியர், ஒன்றும் அறியாத வயதை உடைய சிறுமியை ஈவு இரக்கமின்றி தனது இச்சைக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!