டிஎன்பிஎஸ்சி எழுத 1மணி நேரம் முன்னதாக வர அழைப்பு
திருவண்ணாமலையில் பவுர்ணமி அன்று டிஎன்பிஎஸ்சி (tnpsc) தேர்வு வருவதால் தேர்வாளர்கள் காலை 8-30 மணிக்கே வரும்படி கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் (டிஎன்பிஎஸ்சி-tnpsc) தொகுதி-VIIB பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-III பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு 10.09.2022 நடக்கிறது. இதே போல் தொகுதி-VIII பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-IV பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு 11.09.2022 அன்று நடைபெற உள்ளது.
இந்த தேர்வுகள் காலை 9.30 மணி தொடங்கி 12.30 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையிலும் இருவேளைகளிலும் நடக்கிறது. இந்த தேர்வுகள் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பவுர்ணமி 9ந் தேதி(நாளை) மாலை 6.23 மணிக்கு தொடங்கி மறுநாள் 10ந் தேதி மாலை 4.35 மணி வரை உள்ளதால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வர ஏராளமான பக்தர்கள் வருவார்கள். எனவே tnpsc தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
பவுர்ணமி நாளில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்பதாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காகவும் டிஎன்பிஎஸ்சி (tnpsc) தேர்வாளர்கள் முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.