Homeசெய்திகள்திருவண்ணாமலையில் 4 பள்ளி,எந்த ஊரிலும் இல்லை-பிச்சாண்டி

திருவண்ணாமலையில் 4 பள்ளி,எந்த ஊரிலும் இல்லை-பிச்சாண்டி

தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில்தான் 4 அரசு பள்ளிகள் உள்ளதாக தெரிவித்த பிச்சாண்டி, சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ‘நல்லதே பேசுவோம் தலை நிமிர்ந்து நடப்போம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பா.ஜெயக்குமாரி வரவேற்புரையாற்றினார். இரா.வெங்கடேசன், க.வெங்கட்ராமன், இசை ஆசிரியர் தி.பாரதி, ஆசிரியர் தண்டபாணி, ரஜினி மகேஷ் த.தட்சிணாமூர்த்தி ர.சக்திகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது,

சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றும் விதமாகவும், அதுவும் நம்முடைய ஊரில் இப்படிப்பட்ட தியாகிகளெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரலாற்றை சொல்ல சொல்ல தான் அதன் அருமை புரியும்.

தருமபுரியில் ஒரு பள்ளிதான்

சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தர்மபுரி அரசு பள்ளிக்கு ஆய்வுக்காக சென்றிருந்தேன். அந்த ஊரில் இருப்பது ஒரே ஒரு அரசு பள்ளி தான். அந்த ஒரே பள்ளியில் 5000 மாணவ, மாணவிகள் படித்தனர். ஆனால் திருவண்ணாமலையில் இரண்டு அரசு பள்ளிகள், இரண்டு நகராட்சி பள்ளிகள் என மொத்தம் 4 பள்ளிகள் உள்ளன. எந்த ஊரிலும் இந்த அளவுக்கு பள்ளிகள் இல்லை.

தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் ஏழை, எளிய மக்களுக்காக இந்த 4 பள்ளிகளும் கருணாநிதி முதல்வராக இருந்த போது அமைச்சராக இருந்த ப.உ.சண்முகம் உருவாக்கினார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், நகரமன்ற தலைவராகவும் இருந்த முருகையன் ரூ.70 ஆயிரம் பணம் அரசுக்கு கட்டியதன் காரணமாக சண்முகா பள்ளி வந்தது.

மாணவ- மாணவிகள் எதிர்காலத்தில் நல்ல கல்வியை கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகள் எல்லாம் துவக்கப்பட்டன. எந்த மாநிலத்திலும், எந்த ஊரிலும் இல்லாத அளவுக்கு 4 பள்ளிகள் உருவாக்கப்பட்டன. தியாகி அண்ணாமலை பிள்ளை சிறைச்சாலைக்கு எல்லாம் சென்று நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர். அவர் பெயரில் இந்த பள்ளியை ப.உ.சண்முகம் கொண்டு வந்தார்.

சேர்க்கை குறைவாக உள்ளது

தியாகி அண்ணாமலை பிள்ளை பள்ளியில் முதல்வர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக மாணவ- மாணவிகள் கூடுதலாக சேர்ந்துள்ளனர் இன்னும் அதிகமாக சேர வேண்டும். இங்கிருக்கும் கட்டிடங்கள் எல்லாம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது கட்டிக் கொடுத்தோம். ஆனால் சேர்க்கை குறைவாக உள்ளது அந்த நிலை மாற வேண்டும்.

அமெரிக்காவில் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாக ஆக முடியாது. ஆனால் தனது பேச்சாற்றல் மூலம் மக்களை கவர்ந்து ஒபாமா ஜனாதிபதியாகி காட்டினார். அதே போல் தான் நம்முடைய பிரதமரும், பேச்சாற்றல் மூலமாகத்தான் பதவிக்கு வந்திருக்கிறார். கருணாநிதி, அண்ணா போன்றவர்கள் எல்லாம் பேச்சாற்றல் மூலம் ஒரு ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் நடத்திக் காட்டினர். பேச்சின் மூலம் அவர்கள் மக்களை கவர்ந்தனர். பேச்சுக்கலையை கற்றால் எதிர்காலத்தில் ஒரு பெரிய அரசியல் தலைவராக வரலாம், மாற்றங்களை உருவாக்க கூடியவராக திகழலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் சுதந்திர போராட்ட தியாகிகளின் வீர தீர செயல்களை விளக்கி கூறினர். வ.உ.சிதம்பரனார் குறித்து ச.சி.பரிதிபா பிரகாசமும், பாரதியார் குறித்து மு.வைஷ்ணவியும், தியாகி விஸ்வநாததாஸ் குறித்து செ.திவ்யாஸ்ரீயும், காந்தியடிகள் குறித்து பா.காயத்ரியும், ஜவஹர்லால் நேரு குறித்து வெ.சரண்யாவும், திருப்பூர் குமரன் குறித்து சி.புவனாவும், ம.பொ.சி குறித்து இல.நந்தனாவும், மருதுசகோதரர்கள் குறித்து கே.வெ.பிரவின் பாலாவும், தியாகி அண்ணாமலை பிள்ளை குறித்து இல.சஞ்சனாவும், தியாகி திருநாவுக்கரசு முதலியார் குறித்து செ.அர்ச்சனாவும், தியாகி நாராயணசாமி ரெட்டியர் குறித்து மு.அனுவும் பேசினார்கள்.

அவர்களுக்கு கு.பிச்சாண்டி மற்றும் வெற்றி தமிழர் பேரவை தலைவர் பா.கார்த்திவேல்மாறன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.

நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டி.வி.எம்.நேரு, கோல்டன் ஸ்பேர் பார்ட்ஸ் உரிமையாளர் எஸ்.சுந்தரபாண்டியன் எஸ்.டி. கூரியர் உரிமையாளர் ந.வேல்முருகன், நந்தினி பதிப்பக உரிமையாளர் ந.சண்முகம், உண்ணாமலை திருமண மண்டப உரிமையாளர் ஆர்.சக்திமுருகன், வின்வின் பர்னிச்சர் உரிமையாளர் பி.வெங்கடேசன் எஸ்.ரபீக்பாஷா, தமிழாசிரியர் வி.சதீஷ்குமார், விலங்கியல் ஆசிரியர் ஆர்.தாமோதரன், ஆசிரியர் சு.வேலாயுதம், சு.சிவபிரகாசம், அஜ்மல் (எ) முத்தமிழன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆசிரியர் ஏ.ஜான்வெலிங்டன் நன்றி கூறினார்.

திருவண்ணாமலையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாணவிகள் சேர்க்கை தடைபட்டுள்ளது. அதே சமயம் தியாகி அண்ணாமலை பிள்ளை பள்ளியில் வகுப்பறைகள் இருந்தும் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை துணை சபாநாயகர் பிச்சாண்டி சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!