Homeசெய்திகள்திருவண்ணாமலையில் ரூ.20 கோடியில் புதிய மார்க்கெட்

திருவண்ணாமலையில் ரூ.20 கோடியில் புதிய மார்க்கெட்

திருவண்ணாமலையில் ரூ.20 கோடியில் புதிய மார்க்கெட்

திருவண்ணாமலை காந்தி நகரில் ரூ.20 கோடியில் புதிய மார்க்கெட் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தரைதள கடைகளுக்கு போட்டா போட்டி நிலவியது.

திருவண்ணாமலை தேரடி தெருவில் ஜோதி மார்க்கெட் எனப்படுகிற பூ மார்க்கெட்டும், காய்கறி மார்க்கெட்டும் அமைந்துள்ளது. இந்த 2 மார்க்கெட்டிலும் இட நெருக்கடியின் காரணமாக வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் அவதிப்படக்கூடிய நிலை இருந்து வருகிறது. இது மட்டுமின்றி தேரடி தெரு, கிரிவல பாதையாகவும், முக்கிய கடைகள் அமைந்திருக்கிற பகுதியாகவும் விளங்குவதால் அடிக்கடி நெரிசல் ஏற்படும் பகுதியாகவும் உள்ளது.

மழைக்காலங்களில் ஜோதி மார்க்கெட்டும், காய்கறி மார்க்கெட் சேரும் சகதியுமாக மாறி மக்கள் நடந்து போக முடியாத அளவிற்கு சுகாதார சீர்கேடுடன் விளங்கும் நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக பழமையான இந்த மார்க்கெட்டுகளுக்கு பதில் புதிய மார்க்கெட் அமைத்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

திருவண்ணாமலையில் ரூ.20 கோடியில் புதிய மார்க்கெட்
புதியதாக கட்டப்பட உள்ள காய்கறி மார்க்கெட்டின் மாதிரி தோற்றம். இதில் முதலில் உள்ள மாடலை அமைச்சர் டிக் செய்துள்ளாராம்.

திருவண்ணாமலை நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட், இரண்டு மாடி கார் பார்க்கிங் ஆகியவற்றை கொண்டு வர அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கைளை எடுத்து வருகிறார். இதில் டான்காப் ஆலை செயல்பட்டு வந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியாக விளங்கும் காந்தி நகரில் உள்ள காலி மைதானத்தில் புதிதாக மார்க்கெட் ஒன்று நகராட்சி சார்பில் அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தை சென்ற மாதம் திருவண்ணாமலைக்கு வந்திருந்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவை, அமைச்சர் எ.வ.வேலு அழைத்து சென்று காட்டினார். உடனடியாக மார்க்கெட் அமைக்க பிளான் ரெடி செய்து அனுப்புங்கள். அனுமதி தருகிறேன் என அப்போது நேரு சொல்லி விட்டு சென்றார்.

இதையடுத்து அந்த இடத்தில் புதிதாக மார்க்கெட் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கருத்து கேட்டு கூட்டம் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் ரூ.20 கோடியில் புதிய மார்க்கெட்

நகர மன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜாங்கம், ஆணையாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காய்கறி, பூ மற்றும் பழ வியாபாரிகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். தரை தளத்திலே தங்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட வேண்டுமென காய்கறி வியாபாரிகளும், பூ வியாபாரிகளும், பழ வியாபாரிகளும் கோரிக்கை வைத்தனர். பழக்கடைகள் மொத்தம் 176 இருப்பதாக தெரிவித்த பழக்கடை வியாபாரிகள் சங்க நிர்வாகி பழம் வாங்க வேண்டும் என்றால் மேல் மாடிக்கு வந்து வாங்க மாட்டார்கள், எனவே எங்களுக்கு கீழ் தளத்திலே புதிய தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதே போல் காய்கறி வியாபாரிகளும், தங்களுக்கு கீழ் தளத்திலேயே கடைகள் ஒதுக்க வேண்டும் என்றனர். இதன் காரணமாக கீழ் தளத்தில் கடைகள் ஒதுக்க கேட்டு போட்டா போட்டி நிலவியது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பூ வியாபாரிகள், தற்போது இருக்க கூடிய இடத்திலேயே இருந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்கள் சார்பில் பேசிய வியாபாரிகள் சங்கத் தலைவர் டி.எம்.சண்முகம், பூ வியாபாரிகளான எங்களுக்கு ஜோதி மார்க்கெட்டே போதும். தற்போது அங்கு 145 கடைகள் உள்ளன. எங்களுக்கு ஒரே குறை பார்க்கிங் வசதி இல்லாதது தான். எனவே பார்க்கிங் வசதி மட்டும் நகராட்சி செய்து கொடுத்து விட்டால் நாங்கள் அங்கேயே இருந்து விடுகிறோம். சிறு, சிறு வேலைகளையும் நாங்களே செய்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் ரூ.20 கோடியில் புதிய மார்க்கெட்

கடைசியாக பேசிய நகரமன்றத் தலைவர், வியாபாரிகள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அமைச்சர் எ.வ.வேலு மூலமாக அரசுக்கு தெரிவிக்கப்படும். புதிய மார்க்கெட் காய்கறி மார்க்கெட்டாக விளங்கும். இறைச்சி கடைகளுக்கும், மீன் கடைகளுக்கும் மார்க்கெட் என்பது இல்லை. இதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பூ வியாபாரிகளுக்கு இங்கேயே கடைகள் ஒதுக்கலாமா? அல்லது வேறு இடம் தேவைப்படுகிறதா? என்பதெல்லாம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும், பழ கடைகள் குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.

காந்தி நகரில் சுமார் ரூ.20 கோடியில் அமைய உள்ள புதிய மார்க்கெட்டில் முதல் கட்டமாக தரை தளத்தில் 128 கடைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது இதில் 20×10 என்ற அளவில் 19 கடைகளும், 10×10 என்ற அளவில் மற்ற கடைகளும் அமைக்கப்பட உள்ளது. இதேபோல் மேல் தளத்திலும் 128 கடைகள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!