Homeஅரசியல்பெ.சு.திருவேங்கடத்தின் இறுதி ஊர்வல காட்சிகள்

பெ.சு.திருவேங்கடத்தின் இறுதி ஊர்வல காட்சிகள்

பெ.சு.திருவேங்கடத்தின் இறுதி ஊர்வல காட்சிகள்

உடல்நலக் குறைவால் காலமான பெ.சு.திருவேங்கடத்தின் உடல் அடக்கம் நேற்று நடந்தது. பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

திமுகவின் மூத்த முன்னோடி என்பதால் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக சார்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன் அஞ்சலி செலுத்தினார்.

பெ.சு.திருவேங்கடத்தின் இறுதி ஊர்வல காட்சிகள்

நேற்று பெரியகிளாம்பாடி இடுகாட்டில் பெ.சு.திருவேங்கடத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, திமுகவின் தூணாகவும், நம்மையெல்லாம் வழி நடத்தக்கூடிய வழிகாட்டியாகவும், திராவிடக் கழகத்தை உருவாக்கிய சிற்பியாவும் விளங்கி பெரியார், அண்ணா, கலைஞர் மனதில் நிலைத்து நின்றவர். அவர் நம்மையெல்லாம் விட்டு பிரிந்து சென்றது பெரும் இழப்பாக இருக்கிறது. பொறுமை, நல்ல விழிப்புத் திறன், மக்களுக்காக தோள் கொடுக்கிற ஒரு போராளி என அவரை போற்றலாம் என குறிப்பிட்டார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அண்ணாதுரை எம்.பி, இரா.ஸ்ரீதரன் உள்பட பலர் பேசினார்கள்.

“பிதாமகன்,பீஷ்மர்,பெரியவர்”

திருவண்ணாமலை மாவட்ட திமுக தொண்டர்களால் பிதாமகன், பீஷ்மர், பெரியவர் என பாராட்டப்பட்டவர் பெரிய கிளாம்பாடி சுப்பராயன் திருவேங்கடமான பெ.சு.திருவேங்கடம். கருணாநிதி மீது பற்றும்,பாசமும், அன்பும் கொண்டவர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அடையாளமான ப..உ.சண்முகத்தால் வளர்க்கப்பட்டவர். திமுகவை விட்டு எம்.ஜி.ஆர் சென்ற போது ப..உ.சவும் உடன் சென்றார் ஆனால் ப..உ.சவுடன் செல்ல மறுத்து தனக்கு ஒரே தலைவர் கருணாநிதி தான் என திமுகவிலேயே உறுதியாக இருந்தவர் திருவேங்கடம்.

திமுகவின் ஆரம்ப கால உறுப்பினர். தனது 21 வது வயதில் பெரிய கிளாம்பாடி ஊராட்சி மன்ற தலைவராகவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் விளங்கியவர். தனது 30வது வயதில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும், 35 வது வயதில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும் பதவி வகித்தவர். அப்போது ஒவ்வொரு கிராமங்களிலும் பள்ளி, சாலைகளை அமைத்து தந்து மக்களோடு, மக்களாக நெருக்கமாக பழகி சேவை செய்தார்.

42 வது வயதில் எம்.எல்.ஏ

1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அலை வீசிய போதும் கலசப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று 42வது வயதில் சட்டமன்ற உறுப்பினரானார். 1980, 1989, 1996 ஆகிய வருடங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கலசபாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். கலசப்பாக்கம் தொகுதியில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர்.

சட்டமன்றத்தில் விவசாயிகள் குறித்து பேச வேண்டுமென்றால் கூப்பிடு திருவேங்கடத்தை என கருணாநிதியால் அழைக்கப்படுபவர். அந்த அளவிற்கு விவசாயிகள் பிரச்சினை புரிந்தவர். பல்வேறு ஊர்களில் திமுகவின் அமைப்பு தேர்தலை நடத்திக் காட்டியவர். திமுகவில் சட்ட திட்டங்களை திருத்த வேண்டும் என்றாலும் அல்லது அமைப்பில் சீர்திருத்தம், மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றாலும் பெ.சு.திருவேங்கடத்தை கருணாநிதி இணைத்துக் கொள்வார். அந்த அளவிற்கு தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பவர்.

பெ.சு.திருவேங்கடத்தின் இறுதி ஊர்வல காட்சிகள்

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்றதை அடுத்து அமைக்கப்பட்ட மாவட்ட நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் 6 பேர் கொண்ட குழுவில் பெ.சு.திருவேங்கடத்தையும் கருணாநிதி சேர்த்திருந்தார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் அலை வீசிய போதும் திமுகவிலேயே இருந்து உழைத்த திருவேங்கடம் ஆரம்ப காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் பஞ்சர் ஒட்டும் பொருட்கள், காற்றடிக்கும் பம்பு ஆகியவற்றை உடன் எடுத்துக் கொண்டு சைக்கிளில் கிராமம், கிராமமாக சென்று பிரச்சாரம் செய்தவர்.

1996ஆம் ஆண்டு வெற்றி பெற்ற போது அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது நிலவிய சூழ்நிலையின் காரணமாக அந்த பதவி கிடைக்காமல் போனது.

புகழ் நிலைத்திருக்கும்

2006, 2011, 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தலில் கலசப்பாக்கம் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தொடர்ச்சியாக அந்த தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு தோல்வியை தழுவியதால் திமுகவினர் உற்சாகம் இழந்து இருந்தனர். இந்நிலையில் திருவேங்கடம், ஸ்டாலினை நேரடியாக சந்தித்து கலசப்பாக்கம் தொகுதியில் திமுக போட்டியிட செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது மட்டுமின்றி, அவரது மகனுக்கும் சீட்டு வழங்கியது திமுக தலைமை. வயதானாலும் கூட கிராமமாக சென்று உதயசூரியனுக்கு வாக்குகளை சேகரித்து மகனை வெற்றி பெறச் செய்தார் திருவேங்கடம்.

அவர் கை காட்டுபவர் தான் கலசப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெறுவார் என்ற நிலை இருந்தது. திமுக என்ற இயக்கத்திற்காக கடைசி வரை வாழ்ந்து மறைந்திருக்கும் பெ.சு. திருவேங்கடத்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கோபாலகிருஷ்ணன்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!