தீக்குளிப்பு முயற்சியை தடுத்திட அலுவலக வாயில்களை மூட கலெக்டர் உத்தரவிட்டார்.
அலுவலக வாயில்களை மூட கலெக்டர் அதிரடி உத்தரவு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது கலெக்டரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிலர் தங்கள் மீது மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்கின்றனர். இவர்களால் போலீசுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
தீக்குளிப்பு முயற்சிகளை தடுக்க கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் கடுமையாக சோதனை செய்தும், சிலர் வேறு வழிகளில் உள்ளே நுழைந்து மண்ணெண்ணெய் ஊற்றிக் கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அசம்பாவிதங்கள் ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் போலீசார் தீ தடுப்பு உபகரணங்களோடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிகழ்வுகளும் உண்டு.
கடந்த திங்கட்கிழமை அன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் முருகேஷ், கொடியசைத்து துவக்கி வைத்து அந்த வாகனத்துக்குள் சென்று பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வாகனத்துக்கு அருகில் பெண் ஒருவர் உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு அருகில் நடைபெற்ற இச்சம்பவத்தினால் கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். அன்றைய தினமே இன்னொருவரும் தீக்குளிக்க முயன்றார்.
தீக்குளிப்பு முயற்சி சம்பவங்கள் தொடர்கதையாகி இருப்பதால் இதை தடுக்க கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுடன் ஆலோசனை நடத்தினார். இன்று அவர்கள் 2 பேரும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நுழைய வாயில்களுக்கு சென்று பார்வையிட்டனர்.
கலெக்டர் அலுவலகத்திற்கு நுழைய மொத்தம் 6 வழிகள் இருப்பதால் பிரதான வழியை மட்டும் திறந்து வைத்து விட்டு மற்ற வழிகளை திங்கட்கிழமைகளில் மூடி வைக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அதே போல் கலெக்டர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள வழியை நிரந்தரமாக மூடவும் அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி சேர்ந்த அண்ணன் தம்பிகளான ராஜேந்திரன், சேகர் ஆகியோர் கலெக்டர் கார் அருகில் தங்கள் உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து அவர்களிடமிருந்த மண்ணெண்ணெய் கேன்களை பறிக்க முயன்றனர். அப்போது மண்ணெண்ணெய் சிதறி போலீஸ்காரர்கள் மீதும், மாவட்ட வருவாய் அதிகாரி காரின் மீதும் பட்டது. தரையிலும் மண்ணெண்ணெய் சிதறி கிடந்தது. அவர்களிடமிருந்து கேனை பறித்த போலீசார் அவர்கள் மீது மண்ணெண்ணெயின் வீரியம் குறைய தண்ணீரை ஊற்றினர்.
தற்கொலைக்கு முயன்றது குறித்து ராஜேந்திரனும், சேகரும் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
தானிப்பாடியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரது மனைவி அலமேலுவிடமிருந்து ஒரு ஏக்கர் 76 சென்ட் நிலத்தை கிரயம் பெற்றோம். அதில் 50 சென்ட் நிலம் எங்களுடையது என்பது பிறகு தெரிய வந்தது. அலமேலு பெயரில் தவறுதலாக கொடுக்கப்பட்ட பட்டாவை வைத்துக் கொண்டு அவர் நாங்கள் பூர்விகமாக அனுபவித்து வந்த நிலத்தையே எங்களை ஏமாற்றி கிரயம் கொடுத்திருக்கிறார். இதைப்பற்றி கேட்டபோது டாஸ்மாக் விற்பனையாளராக உள்ள அலமேலுவின் பேரன் வேடியப்பன், அவருடைய தம்பி சேகர் ஆகியோர் கட்டப் பஞ்சாயத்துகாரர்களை அழைத்து வந்து கொலை செய்து விடுவோம் என எங்களை மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
தீக்குளிப்பு முயற்சி சம்பவங்களை தடுப்பது குறித்து கலெக்டரும், எஸ்.பியும் ஆய்வு செய்து விட்டு சென்ற சிறிது நேரத்திலேயே கலெக்டர் கார் அருகில், போலீசாரின் முன்னிலையில் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து ராஜேந்திரன், சேகர் ஆகிய 2 பேரையும், திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்து ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் பெரும்பான்மையாக பெண் போலீசாரே ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு அங்கு கழிவறை வசதியோ, குடிதண்ணீர் வசதியோ இல்லாமல் உள்ளது. சென்ற திங்கட்கிழமை நீண்ட நேரம் வெயிலில் நின்று கொண்டு பாதுகாப்பு பணியாற்றிய பெண் போலீசார் ஒருவர் மயக்கமடைந்து விழுந்தார். எனவே பெண் போலீசார் பயன்படுத்தவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும், கழிவறை வசதியும், குடிதண்ணீர் வசதியும் செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.