திமுக மூத்த நிர்வாகி பெ.சு.திருவேங்கடம், உடல் நலக் குறைவால் காலமானார். எ.வ.வேலு, பிச்சாண்டி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பெ.சு.திருவேங்கடம் மறைவு-எ.வ.வேலு, பிச்சாண்டி நேரில் அஞ்சலி
திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் 7 முறை போட்டியிட்டு 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெ.சு.திருவேங்கடம். வயது 88. 1962 ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத் தலைவராகவும், 1970ஆம் ஆண்டு துரிஞ்சாபுரம் ஒன்றிய பெருந்தலைவராகவும் பதவி வகித்தவர். துணைவியாரின் பெயர் சகுந்தலா. இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
பெ.சு.திருவேங்கடத்தின் மகன் பெ.சு.தி.சரவணன், தற்போது கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
திமுகவில் சொத்துகாப்பு குழுச் செயலாளராக இருந்து வந்த பெ.சு.திருவேங்கடம், உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு நேற்று (12ந் தேதி) இரவு 11.30 மணியளவில் காலமானார்.
துரிஞ்சாபுரம் ஒன்றியம், பெரிய கிளாம்பாடியில் உள்ள அவரது வீட்டில் உடல் எடுத்து வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. பெ.சு.திருவேங்கடம் மரணம் அடைந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
2017ஆண்டு, திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதியால், அண்ணா விருந்து வழங்கி கவுரவிக்கப்பட்டவர் பெ.சு.திருவேங்கடம்.
பெ.சு.திருவேங்கடம் உடலுக்கு அண்ணாதுரை எம்.பி, முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் மற்றும் கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஏராளமான திமுகவினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் நாளை(14ந் தேதி) பகல் 12 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெ.சு.திருவேங்கடத்தின் மறைவையொட்டி இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற இருந்த ஆய்வு கூட்டமும், அமைச்சர் எ.வ.வேலுவின் கிரிவலப்பாதை மேம்பாடு குறித்த ஆய்வு நிகழ்ச்சியும் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.