திமுகவினர் இனி ஸ்டாலினின் தனி புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என திருவண்ணாமலை மாவட்ட திமுக தடை விதித்துள்ளது.
ஸ்டாலின் தனி புகைப்படம் பயன்படுத்த மாவட்ட திமுக தடை
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையிலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் 1545 தொடக்கப் பள்ளிகளில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சியில் 17 பள்ளிகளிலும், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள 46 பள்ளிகளிலும் மற்றும் திருவத்திபுரம் நகராட்சியில் 7 பள்ளிகளிலும் என மொத்தம் 67 பள்ளிகளில் 3,517 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில் உலகத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு காலை உணவு திட்டத்தை தமிழ்நாட்டு முதலமைச்சர்தான் கொண்டு வருகிறார். இதில் யாருக்கும் பங்கில்லை. முதலமைச்சரை நான் பி.டி.தியாகராயர், காமராஜர், எம்.ஜி.ஆர், கலைஞர் ஆகிய நால்வரின் மொத்த உருவமாக பார்க்கிறேன் என ஒரே போடு போட்டார். மேலும் இதையெல்லாம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் என நாசூக்காக தெரிவித்தார்.
காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முன்னோடி திட்டம் என திமுகவினர் பாராட்டி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். மேலும் சத்துணவு திட்டத்தினால் எம்ஜிஆர் புகழ் ஒங்கியது போல், ஸ்டாலினுக்கு காலை உணவு திட்டம் பெயர் தேடி கொடுக்கும் என திமுகவினர் நம்பிக்கையில் உள்ளனர்.
இந்நிலையில் ஸ்டாலினின் தனி புகைப்படத்தை பயன்படுத்தாமல் காலை உணவு திட்ட படத்தை பயன்படுத்த வேண்டும் என திமுகவினருக்கு திருவண்ணாமலை மாவட்ட திமுக உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. தெற்கு மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார். சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட அவைத் தலைவர் கே.ஆர்.சீதாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இதில் அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் கழக சொத்து பாதுகாப்புக் குழு செயலாளரும், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும், கழகத்தின் மூத்த முன்னோடியுமான பெ.சு.திருவேங்கடம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
காலை சிற்றுண்டி திட்டத்தை தந்து, திராவிட மாடல் ஆட்சியை அளித்திடுவதற்காகவும், பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றை முடிக்கும் வரை மாதம் ரூபாய் 1000 வழங்கும் அற்புத திட்டத்தை தந்ததற்காகவும் கழகத் தலைவர் தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கழக நிர்வாகிகளும், தோழர்களும் இனிவரும் காலங்களில் மு.க.ஸ்டாலினின் தனி புகைப்படத்தை பயன்படுத்தாமல், மாணவர்களுக்கு அவர் காலை உணவு ஊட்டும் புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேறியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்து முடிந்த ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழகத் தேர்தல்களைப் போல நடைபெறவுள்ள மாவட்ட கழக தேர்தலையும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும், சிறப்பாகவும் நடத்தி முடித்திட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஒ.ஜோதி, தலைமை செயற்கு உறுப்பினர்கள் அ.ராஜேந்திரன், இரா.ஸ்ரீதரன், ஆர்.வேல்முருகன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைசெயலாளர் வ.அன்பழகன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மருத்துவரணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் கு.கருணாநிதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.வி.சேகரன், மாவட்ட துணை செயலாளர் பாரதி ராமஜெயம், ஆராஞ்சி.ஆறுமுகம் உள்பட சிறப்பு அழைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வடக்கு மாவட்ட துணை செயலாளர் க.லோகநாதன் நன்றி கூறினார்.