2 யானை பலம் கிடைத்திருக்கிறது – கலெக்டர் உற்சாகம்
2 யானை பலம் கிடைத்திருப்பதால் சுலபமாக நிர்வாகம் செய்ய முடிகிறது, யாருடைய தலையீடும் இல்லை என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ஆவூர் கிராமத்தில் இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 610 பயனாளிகளுக்கு ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
முதலமைச்சராக இருந்த கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக மனுநீதி நாள் திட்டத்தை துவக்கி வைத்தார். நமது மாவட்டம் மாநிலத்திலேயே முதல் மாவட்டமாக வரக்கூடிய அளவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட நிர்வாகமும் செயல்பட்டு கொண்டிருக்கிது.
சிறந்த முதல்வர் என்ற நிலையை ஸ்டாலின் பெற காரணம் அரசு அலுவலர்கள் வேகமாக செயல்படுவதால் தான்.
இந்த ஒன்றரை ஆண்டுகாலத்திலே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்ற நிலையை ஸ்டாலின் பெற்றிருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவர்களின் ஆணையேற்று அரசு அலுவலர்கள் வேகமாக செயல்படுவதால் தான். இன்றைக்கு இந்த அரசு மக்களின் அரசாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஆவூர் உயர்நிலைப்பள்ளிக்கு இடம் ஒதுக்கித் தந்து நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-
நிர்வாகம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் சுகாதாரமும், பள்ளி கல்வித்துறையும் முக்கியமாகும். இதேபோல் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவும் முக்கியம்.சத்துணவு சரியில்லை என்றால் முதலில் எச்சரிப்போம், பிறகு சஸ்பெண்ட் செய்து விடுவோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் பாழடைந்த 487 பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கல்வி பயில மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இடிக்கப்பட்டுள்ள பள்ளிகள் அத்தனைக்கும் புதிய கட்டிடம் ஒரே நேரத்தில் நிதி ஒதுக்கி செய்ய இயலாது என்பதால் 24 பள்ளிகளுக்கு புது கட்டிடம் கட்ட அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
விடுமுறையை பயன்படுத்தி 302 பள்ளி கட்டிடங்களை சீரமைக்கும் பணி நாளை துவக்கம்
இப்போது உள்ள பள்ளி கட்டிடங்களை சீரமைக்க உள்ளோம்.302 பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கப்பட உள்ளது. நாளையே பணிகள் துவங்க உள்ளது பள்ளிகளுக்கு 15 நாள் லீவு என்பதால் இந்த நேரத்திலேயே இப்பணிகளை செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நானும் தினமும் இப்பணிகளை ஆய்வு செய்ய உள்ளேன். இந்த மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு தேவையான முக்கியமான பத்து கோரிக்கைகளை என்னிடம் அளித்துள்ளார்கள். சட்டமன்ற துணைத் தலைவர் சிட்கோ வேண்டுமென கேட்டுள்ளார். இதற்கான நிலத்தை 100 ஏக்கர் என்றாலும் எடுத்து தருவதாக கூறியிருக்கிறார்.
தெற்கு பகுதிகளில் தொழில் வளர்ச்சி இல்லை.
செய்யாறில் அமைந்துள்ள சிப்காட்டால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்பெற்றுள்ளது. உள்ளூர் ஆட்கள் 28 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் தெற்கு பகுதியாக உள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம் ஆகிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியே இல்லை. விவசாயத்தை நம்பி உள்ளோம். மழை பெய்தால் தான் தண்ணீர் கிடைக்கும் சுழல் உள்ளது. எனவே தொழில் வளர்ச்சி ஏற்பட்டால் தான் இப்பகுதி வளர்ச்சி அடையும்.
கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் சிட்கோ அமைந்தால் பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். எனவே தொழிற்சாலைகள் அமைந்தால் தான் நாம் வேலைக்கு செல்ல முடியும். சிப்காட், சிட்கோ போன்றவை அமையும் போது உள்ளூர் ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விதி உள்ளது. எனவே உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைக்கும்.
அரசு வேலை வழங்க அதிகாரமில்லை. சத்துணவு வேலை என்றாலும் அரசின் உத்தரவு, வழிகாட்டுதல் வேண்டும்.
திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் வேலை கேட்டு நிறைய பேர் மனு அளிக்கின்றனர். வேலை வழங்கக் கூடிய அதிகாரம் கலெக்டருக்கு இல்லை. அதிகாரத்தை தந்தால் வேலை கேட்டு வருபவர்களுக்கு சந்தோஷமாக நாளையே ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவி கொடுத்து விட முடியும். ஆனால் அதிகாரம் இல்லை. இது மக்களுக்கு தெரியவில்லை. கலெக்டர் நினைத்தால் ஏதாவது ஒரு வேலை போட்டு கொடுத்து விடுவார் என நினைக்கின்றனர். சத்துணவு வேலை என்றாலும் அரசிடம் இருந்து உத்தரவும், வழிகாட்டுதலும் வர வேண்டி உள்ளது.
நிறைய அரசியல்வாதிகள் சட்ட சிக்கல்களை தெரிந்து கொள்ளாமல் செய்யுங்கள் என்றால் செய்யுங்களேன் என்று கூறுகின்றனர்.
அதிகாரிகளுக்கு ரெஸ்ட் என்பது கிடையாது இந்த மாவட்டத்தை எனது சொந்தம் மாவட்டமாக கருதி செயல்பட்டு வருகிறேன். துறை செயலாளராக சென்றாலும் இந்த மாவட்டம் முக்கியமான மாவட்டமாக எனக்கு இருக்கும். துணை சபாநாயகர் மூத்த அரசியல்வாதி. அரசு திட்டங்கள் ஏ டூ இசட் தெரிந்தவர். அவரது கோரிக்கைகளை முடிந்ததை செய்வேன். சிலவற்றில் சட்ட சிக்கல் இருக்கிறது என்று சொன்னால் புரிந்து கொள்வார். இது நிறைய அரசியல்வாதிகளுக்கு தெரியாது. செய்யுங்கள் என்றால் செய்யுங்களேன் என சொல்லுவார்கள்.
நமக்கு பொதுப்பணித்துறை அமைச்சர், சட்டமன்ற துணைத் தலைவர் என்ற இரண்டு யானை பலம் கிடைத்துள்ளது. இதனால் நிர்வாகம் சுலபமாக செய்ய முடிகிறது. யாருடைய தலையீடும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
முகாமுக்கு கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பூ.அய்யாகண்ணு,; ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சக்கரை அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜப்பார் நன்றி கூறினார்.
முகாமில் அட்மா குழு தலைவர் சோமாசிபாடி சிவக்குமார், கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.சூர்யா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.என்.பலகிஸ் ஜான்பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை அடுத்து வேட்டவலம் துணை மின் நிலையத்தில் ரூ.1கோடியே 95 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய உயர் அழுத்த மின் மாற்றியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி துவக்கி வைத்தார். இதன் மூலம் 600 எண்ணிக்கையில் வீட்டு புதிய மின் இணைப்புகள் மற்றும் 500 எண்ணிக்கையில் விவசாய மின் இணைப்புகள் புதியதாக கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.