Homeசெய்திகள்கடம்பையில் 50 ஏக்கரில் தொழிற்பேட்டை –பிச்சாண்டி மனு

கடம்பையில் 50 ஏக்கரில் தொழிற்பேட்டை –பிச்சாண்டி மனு

கடம்பையில் 50 ஏக்கரில் தொழிற்பேட்டை –பிச்சாண்டி மனு

நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் உள்பட 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் பிச்சாண்டி அளித்தார்.

இத்திட்டம் நிறைவேறினால் 70 ஆண்டு கோரிக்கை நிறைவடையும் என தென்பெண்ணை பாலாறு – நந்தன் கால்வாய் இணைப்பு குழு தெரிவித்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக உள்ள 10 பிரச்சனைகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுவாக அளிக்கும்படி முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் மனுக்களை அளித்து வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், துணை சபாநாயகருமான கு.பிச்சாண்டி நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷ்சை சந்தித்து தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி மனு அளித்தார்.

மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள 10 கோரிக்கைகள் வருமாறு,

தென்பெண்ணையாறு-செய்யாற்றுடன் நந்தன் கால்வாய் இணைப்பு
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கோரிக்கை மனு
1. தென்பெண்ணையாற்றை செய்யாற்றுடன் இணைத்து அதனை நந்தன்
கால்வாய் திட்டத்தில் இணைக்கும் திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.
2. கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் ஏழை, எளிய
மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் புதியதாக அரசு கலைக்
கல்லூரியை தொகுதிக்கு வழங்கிட வேண்டும்.
3. அனைத்து கிராமங்களுக்கும் காவேரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் ஒகேனக்கல் குடிநீர் கொண்டுவர ஆவன செய்ய வேண்டும்.
4. வேட்டவலத்தில் புறவழி சாலை அமைத்து தர வேண்டும்.
5. கீழ்பென்னாத்தூரில் புதியதாக போக்குவரத்து பணிமனை அமைத்து தர வேண்டும்.
6. கீழ்பென்னாத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும்.

7. கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம், கடம்பை ஊராட்சியிலுள்ள 50 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தி அங்கு சிட்கோ, சிப்காட் தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும் 
8. செல்லங்குப்பம்- நா.கெங்கம்பட்டுக்கு இடையே துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும்.
9. துரிஞ்சாபுரம், நாயுடுமங்கலம் பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும். 
10. தி.வலசை - சு.வாளவெட்டி செல்லும் நெடுஞ்சாலையில் துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு 10 கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி பிச்சாண்டி மனு அளித்துள்ளார்.

இவரை தொடர்ந்து மற்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளனர்.

70 ஆண்டு கோரிக்கை நிறைவடையும்

முதல் கட்டமாக நிறைவேற்றப்பட உள்ள சாத்தனூர் அணை- ஓலை ஆறு இணைப்பு திட்டத்திற்கு விரைவாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசை பிச்சாண்டி வலியுறுத்த வேண்டும் என தென்பெண்ணை-பாலாறு-நந்தன் கால்வாய் இணைப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தெண்பென்ணையாறு-செய்யாற்றுடன் நந்தன் கால்வாய் இணைப்பு
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கோரிக்கை மனு
திருவண்ணாமலையில் சமீபத்தில் நடைபெற்ற நந்தன் கால்வாய் இணைப்பு குழு கூட்டம்

இது சம்மந்தமாக அந்த குழுவின் தலைவர் மாதப்பூண்டி அன்பழகன், பொதுச் செயலாளர் சோ.அறிவழகன் ஆகியோர் கூறியதாவது,

சாத்தனூர் அணை தென்பெண்ணை ஆற்றில் இருந்து, செய்யாறு ஆறு வழியாக பாலாறு இணைப்பு கால்வாய் வெட்டி இணைப்பு கால்வாயிலிருந்து சமுத்திரம் ஏரி, ஓலை ஆறு வரை புதிய கால்வாய் அமைத்து ஓலை ஆற்றின் மூலம் நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வர அரசு ஆய்வு செய்தது.

சுமார் ரூ. 229 கோடி மதிப்பிட்டில் முதல் கட்டமாக சாத்தனூர் அணை ஓலை ஆறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் முலம் கடந்த 70 ஆண்டுகள் கோரிக்கை நிறைவடையும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இத்திட்டத்திற்கு நிதி துறை அனுமதி தேவை. இத்திட்டம் நிறைவேறினால் செங்கம், திருவண்ணாமலை தாலுக்காவில் புதியதாக 22 ஏரிகளுக்கும், 36 நந்தன் கால்வாய் பாசன ஏரிகளும் பயனடையும். நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பல நூறு கிராம மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி அடையும்.

எனவே இந்த திட்டம் விரைவாக நிறைவேற்ற தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!