Homeஆன்மீகம்அஷ்டலிங்கத்திற்கான கும்பாபிஷேக பணிகள் துவக்கம்

அஷ்டலிங்கத்திற்கான கும்பாபிஷேக பணிகள் துவக்கம்

அஷ்டலிங்கத்திற்கான கும்பாபிஷேக பணிகள் துவக்கம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் (Ashtalingam) உள்பட 10 லிங்கத்திற்கான கும்பாபிஷேக பணிகள் இன்று துவங்கியது.

கயிலாய மலையில் கூட லிங்க வடிவ மலை உள்ளது. ஆனால் திருவண்ணாமலையில் மலையே லிங்கமாகக் கருதி வழிபடப்படுகிறது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடிச் சிறப்பித்த இம் மலையை ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றினால் சிவ பதவியும், திங்கட்கிழமைகளில் சுற்றினால் இந்திர பதவியும், செவ்வாய்க்கிழமைகளில் சுற்றினால் கடன் வறுமை நீங்கும், சுபிட்சம் கிடைக்கும், புதன்கிழமைகளில் சுற்றினால், கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் கிடைக்கும், வியாழக்கிழமைகளில் சுற்றினால் ஞானிகளுக்கு ஒப்பான நிலை கிடைக்கும், வெள்ளிக்கிழமைகளில் சுற்றினால் விஷ்ணு பதம் கிடைக்கும், சனிக்கிழமைகளில் சுற்றினால் நவக்கிரகங்களை சுற்றிய பலன் கிடைக்கும், அமாவாசையில் சுற்றினால் கவலைகள் போகும். பவுர்ணமியில் சுற்றினால் ஊழ்வினைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதனால்தான் தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அண்ணாமலையைச் சுற்றி வந்தால் சிக்கல்கள் இன்றி வாழ்க்கையை சுலபமாகக் கடந்து விடலாம் என்ற நம்பிக்கையில் பவுர்ணமி, தீபத்திருவிழா நாட்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

இந்திரலிங்கம், அக்னிலிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான்யலிங்கம் ஆகிய அஷ்டலிங்கங்களும் (Ashtalingam) மற்றும் சூரியலிங்கமும், சந்திரலிங்கம் என 10 லிங்கங்களும் தனி சன்னதிகளாக அண்ணாமலையார் கோயிலின் உப கோயிலாக கிரிவலப்பாதையில் அமைந்திருக்கின்றன. மலையே சிவபெருமானாக கருதுவதால் அஷ்ட லிங்கங்களில் உள்ள நந்திகள் மலையைப் பார்த்த வண்ணம் இருப்பது சிறப்பாகும்.

இந்த லிங்கங்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசு, 1000 கோயில்களுக்கு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்திட ரூ.500 கோடியை ஒதுக்கியுள்ளது. இதனால் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்து வருகிறது.

அந்த வகையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கங்கள் (Ashtalingam) மற்றும் சூரியலிங்கமும், சந்திரலிங்கத்திற்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதற்கான கும்பாபிஷேக திருப்பணி துவக்க பூஜை இன்று காலை 10 மணிக்கு திருவண்ணாமலை தேரடித் தெருவில் உள்ள முதல் லிங்கமான இந்திரலிங்கத்தில் நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்கள் பி.டி.ரமேஷ், கீர்த்திவாசன் ஆகியோர் திருப்பணி பூஜைகளை நடத்தினர். இந்திரலிங்க சன்னதி ஈசான்ய மூலையில் புனித நீர் தெளிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து திருப்பணி துவங்கியதை குறிக்கும் வண்ணம் அங்குள்ள சுவற்றில் சுத்தியால் அடிக்கப்பட்டது.

பூஜையில் கோயில் இணை ஆணையாளர் கே.பி.அசோக்குமார் மற்றும் கோயில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து கோயில் அலுவலர்கள் தெரிவிக்கையில், புரட்டாசி மாதம் நல்ல காரியங்கள் செய்யக் கூடாது என்பதற்காக இம்மாத கடைசி முகூர்த்த தினத்தில் அஷ்டலிங்க திருப்பணி பூஜைகள் துவக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு லிங்க சன்னதியையும் அளவீடு செய்து கும்பாபிஷேக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும். ஏறக்குறைய ரூ.5 கோடி செலவாகலாம். கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குவதற்கு முன்னதாக கும்பாபிஷேகம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. என்றனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!