ராஜகோபுரம் பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை ராஜகோபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு, பூஜை பொருள் விற்பனை கடைகளுக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை பஜார் உள்ளிட்ட கிரிவலப்பாதையில் பக்தர்கள், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தற்காலிக கொட்டகைகள், நடை பாதை கடைகள் போன்றவை கடந்த மாதம் அதிரடியாக அகற்றப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட கூடாது என்பதில் மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளது. கிரிவல பாதையில் கடை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. பக்தர்களுக்கு இடைஞ்சலாக நடைபாதையில் இருக்கக் கூடாது என்று தான் சொல்கிறோம். எந்த காலத்திலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துவோம். ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அரசியல் தலையீடு இருந்தால் கண்டு கொள்ளாதீர்கள். ஆக்கிரமிப்பை அகற்றுவதால் பத்து ஓட்டுக்கள் குறையுமே என்று என்னிடம் கூறினார்கள். ஓட்டு குறைந்தாலும் பரவாயில்லை. யாரும் காரி துப்பாமல் இருந்தால் சரிதான் என ஆய்வு கூட்டம் ஒன்றில் பேசும் போது அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது, இதனால் திருவண்ணாமலையை நாடி செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர் என மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் அதிருப்தி தெரிவித்தன் காரணமாக என்றைக்கும் இல்லாத அளவு ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு உள்ளது குறித்து தனக்கு கடிதம் மற்றும் தொலைபேசி வழியாக புகார்கள் வந்ததாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோயிலுக்கு செல்பவர்களுக்கு தேங்காய், பழம் முக்கியம். எனவே அந்த கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என ஆய்வு கூட்டத்தின் போது அமைச்சர் எ.வ.வேலு கூறியிருந்தார்.

ராஜகோபுரம் பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

இதையடுத்து அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அருகில் அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ராஜகோபுரம்(Rajagopuram) அருகில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்காக செயல்பட்டு வரும் 80 கடைகளை தற்காலிகமாக வடசன்னதி ஒத்தவாடை தெருவில் அமைக்க வலியுறுத்தினார். ராஜகோபுரம் முன்பகுதியில் அமைந்துள்ள காலி இடத்தில் பூஜை பொருள் விற்பனை கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யவும், மீதி இடத்தில் கார் பார்க்கிங் செய்ய இடம் ஒதுக்கவும், இப்பணிகளை உடனடியாக சம்மந்தப்பட்ட துறைகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும் தென் சன்னதி ஒத்தவாடை தெருவில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக 1200 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் குளியலறை மற்றும் கழிவறைகளை நவீன வசதிகளுடன் கூடியதாக மாற்றவும், 1600 பக்தர்கள் குளிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்திடவும், அப்பகுதியில் பக்கதர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களை அமைக்கவும் உத்தரவிட்டார். தீயணைப்பு வாகனம் எளிதில் சென்று வரும் வகையில் நுழைவுப்பகுதியை அகலப்படுத்திட அறிவுரை வழங்கினார்.

அவருடன் சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சி.என்.அண்ணாதுரை எம்.பி, முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், எ.வ.வே.கம்பன், கோயில் இணை ஆணையர் அசோக்குமார், கோட்டாட்சியர் வெற்றிவேல், திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் முருகேசன், நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன், நெடுஞ்சாலை துறை கண்காணிப்ப பொறியாளர் பழனிவேல் கோட்ட பொறியாளர் க.முரளி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் இல.சரவணன் நகர மன்றத்துணைத்தலைவர் ராஜாங்கம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.