கிரிவலப் பாதை கடைகளை அகற்ற பிச்சாண்டி எதிர்ப்பு
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கடைகள் அற்றப்பட்டதற்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலு சாமியார்களிடம் தான் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஊருக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக காட்டமாக தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கிரிவலப்பாதையை தூய்மையாக பராமரித்தல் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது,
திருவண்ணாமலைக்கு ஆன்மீக பெருமக்கள் வருவதால் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகளில் வியாபாரம் அதிகரிக்கிறது. பஸ், ஆட்டோ, வேன் என மோட்டார் வாகனங்களின் பயன்பாடுகளும் அதிகரிக்கிறது. மேலும் தேங்காய், பூ, கற்பூரம் விற்பனையை நம்பி பல குடும்பங்கள் பிழைப்பு நடத்துகின்றன, எனவே திருவண்ணாமலையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆன்மீக பெருமக்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
திருவண்ணாமலைக்கு பவுர்ணமி, தீபத்திருநாள் இல்லாது மற்ற நாட்களில் நீதிபதி போன்றவர்கள் இரவு கிரிவலம் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்கள் மட்டுமின்றி, எனக்கு கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் பல கருத்துக்கள் வருகின்றன.
கிரிவலப் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளக் கூடாதா?, நடைபாதையில் நடக்கவே முடியவில்லை. பலர் படுத்து தூங்குகின்றனர். கொட்டகை அமைத்தும், உணவு கூடங்கள் வைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்றெல்லாம் கூறுகின்றனர். உங்கள் காலத்தில் இதை முறைப்படுத்தவில்லை என்றால் எந்த காலத்தில் நடக்கும் என்று கடிதம், போன் மூலம் கேட்கின்றனர்.
கிரிவல பாதையில் இட்லி கடை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. பக்தர்களுக்கு இடைஞ்சலாக நடைபாதையில் இருக்கக் கூடாது என்று தான் சொல்கிறோம். எந்த காலத்திலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும். இதேபோல் சிலை செய்பவர்களும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு புகை மண்டலத்தை ஏற்படுத்துகின்றனர் இதனாலும் பாதிப்பு ஏற்படுகிறது.
கிரிவலப் பாதையில் மின்விளக்குகளுக்கு செலுத்தப்படும் மின்சார கட்டணத்தால் ஊராட்சிகளின் வருமானம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அதன் தலைவர்கள் என்னை சந்தித்து தெரிவித்தனர். இதையடுத்து அந்த மின்விளக்குகள் எல்லாம் இந்து சமய அறநிலையத்துறை வசம் ஒப்படைத்து பராமரிப்பு பணிகளையும் , மின் கட்டணத்தை செலுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை என்றாலே சாமியார் இருக்கும் ஊர்தான். அவர்களையெல்லாம் அப்புறப்படுத்துவது என்பது அரசின் நோக்கம் அல்ல. சாமியார்கள் என்ற பெயரில் தவறானவர்கள் உள்ளே நுழைந்து விடக்கூடாது. எனவே போதை சாமியார்களை கண்டறிந்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். யாராக இருந்தாலும் காவல்துறையிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும். ஈசானியத்தில் எல்லையை மீறி பிணங்களை புதைப்பதாக கூறுகின்றனர் எனவே எல்லைகளை கணக்கீடு செய்து வேலி அமைத்திட வேண்டும்.
அரசியல் தலையீடு- கண்டு கொள்ளாதீர்கள்
ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அரசியல் தலையீடு இருந்தால் கண்டு கொள்ளாதீர்கள். ஆக்கிரமிப்பை அகற்றுவதால் பத்து ஓட்டுக்கள் குறையுமே என்று என்னிடம் கூறினார்கள். ஓட்டு குறைந்தாலும் பரவாயில்லை. யாரும் காரி துப்பாமல் இருந்தால் சரிதான் என்று அவர்களுக்கு பதில் அளித்தேன். நாலு பேரின் சுயநலத்துக்காக பொது நலம் பாதிக்கப்பட கூடாது. எனவே ஆக்கிரமிப்பு அகற்றுவதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை.
கோயிலுக்கு செல்பவர்களுக்கு தேங்காய், பழம் முக்கியம். எனவே அந்த கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும். கிரிவலப்பாதையில் தூய்மைப் பணியை கண்காணிக்க அதிகாரிகள் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வாரமிருமுறை (புதன் கிழமை மற்றும் சனிக்கிழமை) தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளில் தூய்மை பணி மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியினை மேற்கொள்ள வேண்டும். ஒரு முறை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யாமல் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பிறகு பேசிய சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கிரிவலப்பாதையில் கடைகள் அகற்றப்பட்டதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
அவர் பேசியதாவது,
கிரிவலப் பாதையில் தனியாக செல்லும் பெண்களிடம் நகைகளை, கும்பல் பறித்துக் கொண்டு சென்று விடுகிறது. சாமியார்களிடமே கொள்ளையடித்துக் கொண்டு சென்று விடுகின்றனர். சாமியார்களுக்கென்று தங்குவதற்கு ஒரு இடம் இல்லை. எம்.எல்.ஏ நிதியிலிருந்து கட்டப்பட்ட ஒரு இடத்திலும் மின்சார வசதி செய்து தரப்படவில்லை. இதனால்தான் அவர்கள் கூடாரம் அமைத்தும், குடிசை போட்டும் ரிஷிகேஷில் உள்ளது போல் தங்குகின்றனர்.
ஆள் பற்றாக்குறையின் காரணமாக கிரிவலப் பாதையில் போதிய அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை. ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவு மக்கள் இங்கு வந்து கிரிவலம் செல்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு யார் தருவது?
கடை வைத்திருப்பவர்களுக்கு யார் வருகிறார்கள், போகிறார்கள் என்று தெரியும். கடை இருந்தால் தான் திருடர்களும் பயப்படுகிறார்கள். கடைகளே இல்லாமல் இருந்தால் கொள்ளை கும்பல் எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கின்றனர். கடைகள் இல்லை என்றால் பக்தர்களுக்கு 14 கிலோ மீட்டர் எந்த பாதுகாப்பும் இல்லாமல் போய்விடும்.
கடை வைத்திருப்பவர்களுக்கு யார் வருகிறார்கள், போகிறார்கள் என்று தெரியும். கடை இருந்தால் தான் திருடர்களும் பயப்படுகிறார்கள். கடைகளே இல்லாமல் இருந்தால் கொள்ளை கும்பல் எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கின்றனர். கடைகள் இல்லை என்றால் பக்தர்களுக்கு 14 கிலோ மீட்டர் எந்த பாதுகாப்பும் இல்லாமல் போய்விடும்.
பவுர்ணமி நாட்களில் மட்டும் தான் கழிவறைகளை திறக்கின்றனர். மற்ற நாட்களில் திறப்பதில்லை. கிரிவலப் பாதை முழுவதும் கோயில் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. அதே போல் கோயில்களும் அவர்களுக்கு கீழே தான் வருகிறது. இதனால் அவர்கள் போதிய அளவு ஆட்களை நியமித்து மக்களுக்கு வசதிகளை செய்து தர வேண்டும்.
வெளியூரிலிருந்து ஒரு நாள் வருபவர்கள் சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். காலம் முழுதும் இருப்பவர்கள் கடைக்காரர்கள் தான். எனவே கடைகளை அகற்றுவது என்பது கஷ்டமாக உள்ளது. பெங்களுரில் இருந்து மேல்மருவத்தூர் செல்பவர்கள், சபரிமலை செல்பவர்கள் எல்லாம் கடையில் பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் ஊருக்குள் வருகின்றனர். இல்லை என்றால் ஊருக்குள் வராமல் நேரடியாகவே சென்று விடுவார்கள். எனவே கடைகள் வைத்துக்கொள்ள இடத்தை தயார் செய்து கொடுத்து அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.
திருநேர் அண்ணாமலை அருகே சாமியார்களுக்கு என்று கட்டப்பட்ட கட்டிடம் மூடியே உள்ளது. அந்தக் கட்டிடம் ஆதீனங்கள் வந்தால் தங்குவது என அதிகாரிகள் கூறுகின்றனர் ஆனால் ஆதீனங்கள் யாரும் வருவதில்லை. எனவே அங்கு சாமியார்களை தங்க வைக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,
கடைகளை அப்புறப்படுத்துவது என்பது நோக்கம் இல்லை. நடைபாதையில் கடைகள் இருக்கக் கூடாது. நடைபாதையை தாண்டி வைத்துக் கொள்ளலாம். ஆனால் நிரந்தரமாக வைத்துக் கொள்ள முடியாது. இதனால் கடையும் இருக்கும், நடைபாதையும் இருக்கும், ரோடும் இருக்கும்.
சாமியார்களிடம் பணம் கொள்ளை போனதாக நான் கேள்விப்படவில்லை. சாமியார்களால்தான் கொள்ளை நடக்கிறது என்பது எனது அபிப்ராயம். அதேபோல் அவர்களிடம் கஞ்சா நடமாட்டம் இருப்பதால்தான் ஊருக்கு கெட்ட பெயர் என்பதும் எனது அபிப்பிராயம். அவர்களை பார்ப்பதற்கு ஆன்மீக பெருமக்கள் வரவில்லை. அண்ணாமலையாரை பார்ப்பதற்காகவும், கிரிவலம் செல்வதற்காகவும் வருகிறார்கள்.
சாமியார்கள் யார்?
சாமியார்களிடம் பணம் கொள்ளை போனதாக நான் கேள்விப்படவில்லை. சாமியார்களால்தான் கொள்ளை நடக்கிறது என்பது எனது அபிப்ராயம். அதேபோல் அவர்களிடம் கஞ்சா நடமாட்டம் இருப்பதால்தான் ஊருக்கு கெட்ட பெயர் என்பதும் எனது அபிப்பிராயம். அவர்களை பார்ப்பதற்கு ஆன்மீக பெருமக்கள் வரவில்லை. அண்ணாமலையாரை பார்ப்பதற்காகவும், கிரிவலம் செல்வதற்காகவும் வருகிறார்கள். எனவே மனிதாபிமான அடிப்படையில் சாமியார்களுக்கு உதவிகளை செய்யலாம். அதற்காக அவர்கள் நினைத்த இடத்தில் தங்க முடியாது. அவர்களுக்கான இடங்களை தேர்வு செய்து ஒதுக்கிய பிறகு இரவில் அங்கு வந்து தான் தங்க வேண்டும்.
வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு இங்கு வந்தவர்கள் தான் பாதிக்கு மேற்பட்டவர்கள். ஆன்மீக ஊரில் கடைசி காலத்தை தள்ளலாம் என வந்தவர்களின் எண்ணிக்கை குறைவு தான். எனவே சாமியார்களை முறைப்படுத்தி, அவர்களுக்கு அடையாள அட்டைகளை தந்து போலீசார் கண்காணிக்க வேண்டும். திருவண்ணாமலைக்கு யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வந்து போய்விட முடியாது இதுவே ஊரின் மதிப்பை குறைத்து விடும். எனவே புது சாமியார்கள் வந்தால் அடையாள அட்டை இன்றி தங்க அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருஷே;, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், கார்த்தி வேல்மாறன், எ.வ.வே.கம்பன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தரராஜன், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோயில் இணை ஆணையாளர் அசோக்குமார், திருவண்ணாமலை ஒன்றியக் குழுத் தலைவர் கலைவாணி கலைமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள்;, உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.