திருவண்ணாமலை அருகே திருடப்பட்ட நெல் அறுவடை இயந்திரத்தை 70 சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் கண்டுபிடித்தனர்.
திருவண்ணாமலை அடுத்த குண்ணியந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஷ். பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் உள்ளது. சம்பவத்தன்று நெல் அறுவடைக்கு சென்று திரும்பிய வாகனத்தை, வள்ளிவாகையில் உள்ள தனது உறவினரின் நிலத்தின் அருகில் ரர்ஜேஷ் நிறுத்தி வைத்துள்ளார்.
மறுநாள் காலை வந்து பார்த்த போது நெல் அறுவடை இயந்திரத்தை காணாமல் திடுக்கிட்டார். அக்கம்-பக்கத்தில் விசாரித்ததில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பல இடங்களில் தேடியும் மாயமாக மறைந்த நெல் அறுவடை இயந்திரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து ராஜேஷ், மங்கலம் போலீசில் புகார் செய்தார். இது சம்மந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் காணாமல் போன நெல் அறுவடை இயந்திரத்தை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கினர்.
அப்பகுதியிலும், அவலூர்பேட்டை செல்லும் பிரதான சாலையிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது திருடு போன வாகனத்தை சிலர் திருவண்ணாமலைக்கு ஓட்டிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை நகரிலும், புறவழிச்சாலைகளிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் அந்த வாகனம் கள்ளக்குறிச்சி பக்கமாக சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் கணியாமூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருடு போன நெல் அறுவடை இயந்திரத்தை கண்டுபிடித்து மீட்டனர். இந்த வாகனத்தின் மதிப்பு ரூ.20 லட்சமாகும். இது சம்மந்தமாக வாகனத்தை திருடி விற்க திட்டமிட்டு திருச்சியில் பதுங்கியிருந்த 3 வாலிபர்களை திருச்சிக்கு சென்று போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் பெயர்,விவரம் வருமாறு,
திருவண்ணாமலை அடுத்த கஸ்தாம்பாடியைச் சேர்ந்த சங்கர் மகன் விஜி (வயது 23), மாதலம்பாடியைச் சேர்ந்த பலராமனின் மகன் விஜய்(22), கிளாம்பாடியைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் சிவகுமார் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். கூலி வேலை செய்து வந்த இவர்கள் முதன்முதலாக திருட்டு தொழிலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 70க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் உதவியை கொண்டு திருடப்பட்ட நெல் அறுவடை இயந்திரத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.