திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்த கலெக்டர், கெட்ட பெயரை உருவாக்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்காக 9159616263 என்ற வாட்ஸ்அப் எண் கொண்ட நோட்டீஸ்களை, நேற்று மாலை மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து நேர காப்பகம், பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் பொது மக்கள் அறியும் வண்ணம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து ஒட்டி பொது மக்களுக்கு போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள்.
கெட்ட பெயரை உருவாக்காதீர்கள்
பிறகு 2 பேரும், அதிகாரிகளுடன் முக்கிய வீதிகளில் நடந்து சென்று ஆக்கிரமிப்பு உள்ளதா? என ஆய்வு செய்தனர். பேகோபுரம் அருகில் நிறுத்தப்படும் வாடகை வேன்களால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவததை பார்த்து வேன் டிரைவரை அழைத்து கலெக்டர் பேசினார். கலெக்டர், எஸ்.பிக்கு கெட்ட பெயரை உருவாக்காதீர்கள், உள்ளுர் மக்கள் பொறுப்பாக இல்லையென்றால் எப்படி? கோயில்களை சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைப்பு தாருங்கள், நாளை முதல் வேன்களை, அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் நிறுத்துங்கள் என அவரிடம் கூறினார்.
இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் பிறகு காரில் கிரிவலப்பாதைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது போதை தலைக்கேறிய சாமியார் ஒருவர் தள்ளாடிக் கொண்டே கலெக்டரிடம் பேச அருகில் செல்ல முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். கிரிவலப்பாதையில் உள்ள போலீஸ் பூத்களுக்கு விளக்கு வசதி இல்லாமல் இருப்பது குறித்து கலெக்டரின் கவனத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் எடுத்துச் சென்றார். இதையடுத்து போலீஸ் பூத்களுக்கு எல்.இ.டி லைட் அமைத்து தர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து விட்டு செல்பவர்களால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நிரந்தரமாக சாலையோரங்களில் கடைகள், கூரைகள் அமைத்தும், கழிவு நீர் கால்வாய் மீது கடைகள் வைத்தும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றனர். ஒரு முறை அகற்றினால் மீண்டும் ஆக்கிரமிப்புகளில் ஈடுபடும் மனநிலையில் மக்கள் உள்ளனர்.
இதனைத் தடுக்கும் விதமாக 14 கி.மீ தூரம் உடைய கிரிவலப்பாதையை 15 நாட்களுக்கொருமுறை காவல்துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து கண்காணிப்பு
மேலும் கிரிவலப்பாதையில் பழைய ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக அதிகாரிகள் அடங்கிய 10 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு குழு என்ற முறையில் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. சித்ரா பவுர்ணமிக்கு 22 லட்சம் பக்தர்கள், பவுர்ணமிக்கு 5 லட்சம் பக்தர்கள் என வருகை புரிவதால் கிரிவலப்பாதையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
எந்த வித பாரபட்சமும் இன்றி ஆக்கிரமிப்புகள் முற்றிலும் ஒழிக்கப்படும்.
ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டருடன் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்டப்பொறியாளர் முரளி, கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், நகராட்சி பொறியாளர் நீலேஸ்வரன், ஊராட்சி உதவி இயக்குநர் சரண்யாதேவி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் சென்றிருந்தனர்.