சென்னை அரிமா சங்கம் முயற்சியின் காரணமாக திருவண்ணாமலையில் முதன்முறையாக கண்பார்வையற்ற 150 பேர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை:பார்வையற்ற 150 பேர் கிரிவலம் சென்றனர்
மாற்று திறனாளிகளில் பார்வையற்று பிறந்து விட்டால் தன்னுடைய உருவம் எப்படிபட்டது என தெரியாமலும், இந்த உலகை பார்க்க முடியாமலும் போய் விடும் கொடுமையை அனுபவிக்க வேண்டியது உள்ளது. தன்னம்பிக்கை ஒன்றையே மூலதனமாக கொண்டு வாழ்ந்து வரும் இவர்களுக்கு அரசும், தொண்டு நிறுவனங்களும் உதவிகளை செய்து வருகின்றன. இதில் சென்னை அரிமா சங்கம், பல ஆண்டுகளாக கண் பார்வையற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
உதவிகளை செய்தாலும், அவர்களுக்கென்று உள்ள ஆசையையும் நிறைவேற்றிட சென்னை அரிமா சங்கம் முன் வந்தது. பெரும்பாலானவர்களின் ஆசை, திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும், கிரிவலம் செல்ல வேண்டும் என்பதாக இருந்தது. இதையடுத்து விருப்பம் உள்ளவர்களை சென்னையில் ஒருங்கிணைக்க செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்து பெண்கள் உள்பட 150 கண் பார்வையற்றவர்கள் திருவண்ணாமலைக்கு செல்வதற்காக வந்திருந்தனர். அவர்களை 3 பஸ்கள் மூலமாக திருவண்ணாமலைக்கு சென்னை அரிமா சங்க நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் திருவண்ணாமலை தேரடித் தெருவில் உள்ள சாதுக்கள் அன்னசத்திரத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு 150 பேரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பிறகு கிரிவலம் சென்றனர்.
அவர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் 30க்கும் மேற்பட்ட சென்னை அரிமா சங்க நிர்வாகிகளும், தன்னார்வலர்களும், திருவண்ணாமலை சண்முகா கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்களும் உதவிகளை செய்தனர்.
திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி, இத்தலத்திற்கு வர வேண்டும் என்ற எங்களது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய அரிமா சங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
புண்ணிய தலத்தில் காலடி வைத்துள்ளது மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தன்னம்பிக்கையும், இறைவன் மீது நம்பிக்கையையும் கொண்டு வாழ்ந்து வருகிறோம், எங்களால் இறைவனை பார்க்க முடியாவிட்டாலும், இறைவனின் பார்வை எங்கள் மீது விழுந்தால் போதும்
புண்ணிய தலத்தில் காலடி வைத்துள்ளது மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தன்னம்பிக்கையும், இறைவன் மீது நம்பிக்கையையும் கொண்டு வாழ்ந்து வருகிறோம், எங்களால் இறைவனை பார்க்க முடியாவிட்டாலும், இறைவனின் பார்வை எங்கள் மீது விழுந்தால் போதும் என நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
இறைவனின் தரிசனம், பார்வையற்றவர்களின் மனதில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் என்பதற்காகவே அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலத்திற்கும் அழைத்துச் சென்றதாக சென்னை அரிமா சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.