Homeஆன்மீகம்தொண்டரீஸ்வரர், காமாட்சியம்மன், கிரிவலப்பாதை ஆஞ்சநேயர்

தொண்டரீஸ்வரர், காமாட்சியம்மன், கிரிவலப்பாதை ஆஞ்சநேயர்

திருவண்ணாமலையில் தொண்டரீஸ்வரர், காமாட்சியம்மன், கிரிவலப்பாதை ஆஞ்சநேயர் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் பழமை வாய்ந்த கோயில்கள் பல உள்ளன. இது மட்டுமன்றி புதிய கோயில்களும் கட்டப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றன.அண்ணாமலையார் கோயிலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்நகரில் முன்னோர்கள் சிறந்த தெய்வீகச் சூழ்நிலையை உருவாக்கி வைத்துள்ளனர்.

இதன் காரணமாக பிரதான சாலைகளில் தெய்வச் சந்நிதிகள், மண்டபங்கள், குளங்கள் என காணப்படுகின்றன. இவைகளோடு கிரிவலப்பாதையையும் சேர்த்து 98 கோயில்கள், மண்டபங்கள், ஆசிரமங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையை தவிர்த்து சுற்றுப்பகுதிகளில் எண்ணற்ற கோயில்கள் அமைய பெற்றுள்ளன. இதில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களும் அடங்கும்.

அந்த வகையில் அமைய பெற்றதுதான் திருவண்ணாமலை வடமாத்தாதி தெருவில்(ஸ்டேட் வங்கி அருகில்) உள்ள தொண்டரீஸ்வரர் கோயிலாகும். இந்த கோயில் 800 வருடங்களுக்கு முன்பு அமைய பெற்றது. தொண்டர்களுக்கெல்லாம் தொண்டனாகி பணிபுரிந்ததனாலும்,தேவதாசிகள் முதன்முதலில் இங்குதான் அரங்கேற்றத்தை துவங்குவர் என்பதினாலும் தொண்டரீஸ்வரர் என அழைக்கபடுகிறது. மலையை பார்த்த அமைப்பில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலுக்கு கடைசியாக 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது புதியதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி கடந்த 2ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கியது. 3ந் தேதி முதல்கால பூஜையும், நேற்று 2ம் கால பூஜையும், இன்று அதிகாலை 3-30 மணிக்கு 3ம் கால பூஜை நடைபெற்றது. பிறகு கலசங்கள் புறப்பாடு நடந்தது. இதைத் தொடர்ந்து ராஜகோபுரத்திற்கும், மூலவர் விமானத்திற்கும் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

காமாட்சியம்மன் கோயில்

இதே போல் திருவண்ணாமலை திருமஞ்சன கோபுரத் தெருவில் உள்ள காமாட்சியம்மன் கோயிலுக்கு கடைசியாக 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த வருடம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் பிப்ரவரி 14ந் தேதி தொடங்கியது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித கலச நீர்ரை எடுத்துச் சென்று கோயிலின் ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து துர்க்கையம்மன், சண்டிகேசுவரர், காலபைரவர், விநாயகர், சண்முகர், நவகிரகங்கள் சன்னதியில் புனித நீர் தெளிக்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காமாட்சியம்மன் கோயிலின் சிறப்பு

சிவபெருமானிடம் இடப்பாகம் தர காஞ்சிபுரத்தில் தவம் செய்த உமாதேவியிடம், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் சென்று தவம் புரியும்படி சிவனின் கட்டளையை ஏற்று திருவண்ணாமலை வடவீதி சுப்பிரமணியர் கோயிலுக்கு அருகில் ஒற்றை காலில் கையில் சிவலிங்கத்தை ஏந்தி தவம் புரிந்தார். கடும் தவத்தின் காரணமாக சிவபெருமான் காட்சியளித்து தன் உருவில் பாதியை தந்து கலந்தருளினார். அந்த இடம் ஆதி காமாட்சியம்மன் கோயிலாக காட்சியளிக்கிறது.

திருமஞ்சன கோபுரத் தெருவில் உள்ள காமாட்சியம்மன், விஸ்வ பிராமண சமுதாயத்தினர் தெய்வமாக விளங்கி வருகிறது. இக் கோயில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என சொல்லப்படுகிறது. இக் கோயிலின் மூலவரான காமாட்சியம்மனுக்கு வலது புறத்தில் ஏகாம்பரேஸ்வரர் அமர்ந்திருப்பது தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது. இவர்களை மனதார வேண்டினால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. புரட்டாசி மாதம் விஸ்வகர்ம ஜெயந்தி விழாவும், 10 நவராத்திரி விழாவும் இக்கோயிலில் விசேஷமாக நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயில் அமைந்திருக்கும் தெரு, காமாட்சியம்மன் கோயில் தெரு என அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திருமூலாரண்யத்தின் ஸ்ரீ ஆதிசிவலிங்காச்சார்ய குரு பீடத்தின் 65வது குருமகா சன்னிதானம் சிவராஜ ஞானாச்சார்ய குரு சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவர் ஆர்.தாமோதரன், செயலாளர் ஜி.சம்பத்குமார், பொருளாளர் எஸ்.பிரபாகரன், ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.கோபிநாத் மற்றும் உபயதாரர்கள், விஸ்வகர்ம சமூகத்தினர் செய்திருந்தனர்.

கிரிவலப்பாதை ஆஞ்சநேயர்


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருநேர் அண்ணாமலை கோயில் அருகில் வீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்திருக்கிறது. இது 200 வருடங்கள் பழமையான கோயிலாக கருதப்படுகிறது. ஆரம்ப காலத்தில் சுயம்புவாக பாறையில் உருவாகிய இக்கோயிலுக்கு சிறிய மண்டபம் கட்டப்பட்டது. பிறகு சிறிது சிறிதாக விஸ்தரிக்கப்பட்டது. கிரிவலப்பாதையில் இருப்பதும், வடக்கு பார்த்து இருப்பதும் இக்கோயிலின் சிறப்பம்சமாகும். வேண்டியதை நிறைவேற்றிடும் வீரஆஞ்சநேயர் வீற்றிருக்கும் இக்கோயிலுக்கு 26 வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 

இந்நிலையில் இன்று காலை இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் கலசங்களுக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். ராமர், லட்சுமணர், சீதை, பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர், கருடாழ்வார் ஆகிய சன்னதிகளுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலையில் ஒரே நாளில் நடைபெற்ற 3 புகழ் பெற்ற கோயில்களின் கும்பாபிஷேகம் பக்தர்களை ஆனந்தமடையச் செய்துள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!