திருவண்ணாமலையில் வாடகை பாக்கி செலுத்தாத 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அப்போது அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சியின் மக்கள் தொகை 2 லட்சத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கிறது. மொத்தம் உள்ள 39 வார்டுகளில் வசித்து வரும் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டிய நிலையில் நிதியின்மையால் நகராட்சி தள்ளாடி வருகிறது. இதுமட்டுமன்றி ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்கள், பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் பொறுப்பும் நகராட்சிக்கு இருந்து வருகிறது.
இதற்கான நிதிகளை வர்த்தக நிறுவனங்கள்¸ திருமண மண்டபங்கள்¸ தங்கும் விடுதிகள்¸ திரையரங்குகள்¸ ஓட்டல்கள் இவைகளிடமிருந்து பெறப்படும் வரி மூலமாகவும்¸ வாகனங்கள் நிறுத்துமிடம்¸ கடைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் மூலமாகவும்¸ குடிநீர் வரி, சொத்து வரி மூலமாகவும் நகராட்சி திரட்டி வருகிறது. ஆனாலும் அரசியல் தலையீடு போன்ற சில பிரச்சனைகளால் இந்த வரிகளை முழுமையாக வசூலிக்க முடியாமல் நகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
வரி வசூலாகாத நிலையில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு¸ நிறுவனங்களுக்கு சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலமாக நகராட்சி வரி வசூலை செய்து வருகிறது. ஆனாலும் ரூ.40 கோடிக்கு வரி பாக்கி இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமாக மொத்தம் 388 கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் மத்திய பஸ் நிலையம், ஜோதி மார்க்கெட்டில் அமைந்துள்ளன. இந்த கடைகளுக்கான வாடகை பாக்கி ரூ.11 கோடியே 14 லட்சத்து 71, நகராட்சிக்கு வரவேண்டியதிருந்தது. இதில் 97 லட்சத்து 99ஆயிரத்தை மட்டுமே நகராட்சி வசூல் செய்திருக்கிறது. மீதி ரூ.10 கோடியே 16 லட்சத்து 72 ஆயிரம் நிலுவையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் வாடகை பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளில் நகராட்சி அதிகாரிகள் இறங்கியுள்ளனர். வாடகை பாக்கியை செலுத்தாத மத்திய பஸ் நிலையத்தில் உள்ள 2 கடைகளுக்கும், கீழ்நாத்தூரில் உள்ள ஒரு கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இன்று ஜோதி மார்க்கெட்டில் உள்ள பூ விற்பனை கடைகளுக்கு சீல் வைக்க நகராட்சி அதிகாரிகள் சென்றனர்.

அப்போது அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடையின் ஷட்டரை இழுத்து மூட அதிகாரிகள் முயன்றனர். இதை வியாபாரிகள் தடுத்தனர். அரசு பணியை தடுத்தால் போலீசை வரவழைத்து நடவடிக்கை எடுப்போம் என அதிகாரிகள் எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து வியாபாரிகள் தரப்பில் வாடகை பாக்கியை செலுத்த கால அவகாசம் கேட்கப்பட்டது. பல முறை கேட்டும் வாடகையை செலுத்தாமல் இருக்கிறீர்கள். எனவே அவகாசம் வழங்க முடியாது என தெரிவித்த நகராட்சி அதிகாரிகள் ரூ.5 லட்சத்திற்கு மேல் வாடகை பாக்கி உள்ள 2 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

பாக்கி வைத்துள்ள நகராட்சி கடை வாடகைதாரர்கள் உடனே பாக்கி தொகையை செலுத்தி சீல் வைப்பு போன்ற நடவடிக்கையை தவிர்த்திட வேண்டுமென அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.