ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் டாடா நிறுவனத்தில் 1000 பெண்களுக்கு வேலை
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (tata electronics company)1000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட திருவண்ணாமலையில் 20ந் தேதி முகாமை நடத்த உள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
பெண்களுக்கான வேலை
திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 20-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
1000 பெண் பணியாளர்கள்
இம்முகாமில் ஒசூரைச் சேர்ந்த டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (tata electronics company) பங்கேற்க உள்ளது. இந்நிறுவனம் சுமார் 1000 பெண் பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
தகுதி
இதில் பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண் பணியார்களை முகாம் நாளன்று தேர்வு நடத்தி தேர்வு செய்யவுள்ளது. முகாம் நாளன்று நிறுவனம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வெற்றிகரமாக பயிற்சியை முடித்தவர்களுக்கு பணியாணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்
முதலாமாண்டில் ரூ.15000 (பதினைந்தாயிரம்) சம்பளமும், விடுதி வசதி, நிறுவனத்தில் சேர்ந்து ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பும் மற்றும் சட்டப்படியான பிற சலுகைகளும் உண்டு என தெரிவித்துள்ளது.
நடைபெறும் இடம்
இதுகுறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் 04175-233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆர்வமும் விருப்பமும் உள்ள பெண்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.