தீபத்திருவிழாவிற்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை காண 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவர்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கலெக்டர் கூறினார்.
தரிசனத்திற்கு இணையதள மூலம் சிறப்பு பதிவு முறை கொண்டு வரப்படும் எனவும், கோயில் மற்றும் பஜாரில் 12 இடங்களில் எல்இடி மெகா திரை மூலம் தீபத்திருவிழாவை காண ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்துறை அலுவலகத்தில் நேற்று (28.10.2022) கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு குறித்த அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது,
6ந் தேதி மகாதீபம்
திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 24.11.2022 அன்று துர்க்கையம்மன் உற்சவத்துடன் துவங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறவுள்ளது. 27.11.2022 முதல் 06.12.2022 வரை 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் முதல் நாள் திருவிழா 27.11.2022 கொடியேற்றத்துடன் தொடங்கி 06.12.2022 அன்று 10ஆம் நாள் உலகமே எதிர்நோக்கும் மகாதீப தரிசனம் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.
எல்இடி மெகா திரை
இந்த முறை 40 இலட்சம் பக்தர்கள் வருகை தருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பக்தர்களுக்கான தரிசன வசதிகளாக பரணி தீபத்திருவிழா நேரடி ஒளிபரப்பு எல்இடி மெகா திரை மூலம் (LED MEGA SCREEN) மூலம் திருக்கோயில் வளாகத்தில் பழைய அலுவலகம் அருகில், மகிழ மரம் அருகில், திருக்கல்யாண மண்டபத்தின் அருகில், பெரிய நந்தி அருகில் மற்றும் வடக்கு கட்டை கோபுரம் அருகில் உள்ள கலையங்கத்திலும் ஒளிபரப்பு செய்யப்படும்.
தேர்களை சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தி சான்று அளிக்க வேண்டும்.
முனீஸ்வரர் கோயில்
கிழக்கு இராஜகோபுரம், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம், மேற்கு பேகோபுரம், தெற்கு திருமஞ்சன கோபுரம், பெரிய நந்தி, கலையரங்கம், மகிழமரம், உள்துறை அலுவலகம், பெரிய தேர், முனீஸ்வரர் கோயில், காந்தி சிலை என 12 இடங்களில் மகாதீபம் நிகழ்வினை எல்இடி மெகா திரை மூலம் (LED MEGA SCREEN) மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்,
பிரதான வசதிகள்
பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய கிளிகோபுரம் உட்புறங்களில், சுவாமி அம்மன் சன்னதிகளிலும் வரிசையில் செல்ல பிரதான வசதிகள் (S.S) பைப் மற்றும் இரும்பு பைப் மூலம் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. அதோ போல் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய புரவி மண்டபத்திலிருந்து கிளிகோபுரம் வரை நெரிசலிலை தவிர்த்து வரிசையாக செல்ல இரும்பு தடுப்புகள் (பேரிகாட்) 120 எண்ணிக்கையில் அமைக்கப்படும்,
அதி நவீன கருவிகள்
பரணி தீபம், மகாதீபத்தினை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கிழக்கு ராஜகோபுரம் வழியாக பொது தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படும் பக்தர்களுக்கு குடிநீர், மின்விளக்கு, கழிவறை வசதி, உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். காவல் துறையின் மூலம் தெற்கு இராஜ கோபுரம், வடக்கு இராஜ கோபுரம் பகுதிகளில் அதிநவீன கருவிகள் கொண்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
கிரிவலப்பாதை கண்காணிப்பு
நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தினக்கூலி ஒப்பந்த பணியாளர்களை கொண்டு சுத்தம் மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படும். கிரிவலப்பாதை முழுவதும் மின் கேமரா மூலம் பக்தர்கள் வருகை கண்காணிக்கப்படும்.
சிறப்பு பதிவு முறை
தற்போது பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் பேருந்துகளை நிறுத்துவதற்கு எதுவாக 13 தற்காலிக பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தப்படும், விழாவிற்கு செலவாகும் மின்சார கட்டணங்களை இந்து சமய அறநிலைய துறை ஏற்றுக் கொள்ளும். தரிசனத்திற்கு திருக்கோயில் இணையதள மூலம் சிறப்பு பதிவு முறை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டிபன், கோயில் இணை ஆணையர் அசோக்குமார், நேர்முக உதவியாளர் வீ.வெற்றிவேல் மற்றும் அரசு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.