திருவண்ணாமலை பாஜக தலைவர் மாற்றப்பட்டதன் பின்னணி
நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே திருவண்ணாமலை மாவட்ட பாஜக தலைவர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு மாறி பம்பரமாக பணியாற்றியவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவராக ஆர்.ஜீவானந்தம் இருந்து வந்தார். 2020 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜீவானந்தத்தின் பதவி காலம் 2023 ஜனவரி மாதம் முடிகிறது. இதற்கிடையில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பதவிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், அக்ரி.சந்திரசேகர், வேட்டவலம் சிவசங்கர், தண்டராம்பட்டு வடிவேலு, நாயுடு மங்கலம் சுந்தர்ராஜன் போன்றவர்களெல்லாம் தலைவர் பதவியை கேட்டவர்களில் முக்கியமானவர்கள். ஆர். ஜீவானந்தமும் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

அப்போது கட்சியினரை அரவணைத்து கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், ஆறு மாதம் பார்ப்போம் இல்லையென்றால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை களையெடுப்போம் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்ததாகவும் பேசப்படுகிறது.
ஜீவானந்தம் நியமனம் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் முக்கிய நிர்வாகிகள் ஒதுங்கினர். அவர்களை ஜீவானந்தம் சமாதானப்படுத்தி கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தார். ஆனாலும் அதிருப்தி மறையவில்லை. கட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் அவருக்கும், நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் பதவியை அதிமுகவிலிருந்து பாஜவிற்கு மாறிய கே.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கி மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்
ஆர்.ஜீவானந்தம் வடக்கு மாவட்ட பார்வையாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கே. ஆர்.பாலசுப்பிரமணியம் பாஜகவில் ஓபிசி அணியின் மாநில துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார்.
இந்த பதவிக்கு வந்த சில நாட்களிலேயே அவர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியதையும், மத்திய பாஜக அரசின் சாதனைகளை பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் கொண்டு சேர்த்ததையும் கட்சி தலைமை கவனத்தில் கொண்டு அவருக்கு பதவியை வழங்கியிருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.