அனுமதியின்றி பேனரா? 1 ஆண்டு ஜெயில்-கலெக்டர் எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தால் 1 வருடம் சிறை தண்டனை வழங்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், பேனர்கள், விளம்பர பதாகைகள், டிஜிட்டல் பலகைகள் வைத்தல் வரன்முறை செய்தல் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில், நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் எவ்வித அனுமதியுமின்றி அரசியல் கட்சிக் கூட்டம், தனியார் அமைப்புகளால் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், திருமணங்கள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள், இறப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிகளவில் சாலை ஒரங்கள், முக்கிய சாலைகளில் பாதசாரிகள், வாகனம் ஒட்டுபவர்களின் கவனம் சிதறும் வகையில் அமைக்கப்படும் பேனர்கள், விளம்பர பதாகைகள், டிஜிட்டல் பலகைகள் காரணமாக போக்குவரத்திற்கு இடையூறுகள், விபத்து உள்ளிட்ட பல்வேறு விரும்பதகாத நிகழ்வுகள் ஏற்படுகிறது. குறிப்பாக தற்காலிக பேனர்கள் எவ்வித அனுமதியும் பெறப்படாமல் வைக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் ஆணைகள், சென்னை உயர்நீதி மன்றத்தில் அளிக்கப்பட்ட பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையில் பேனர்கள், விளம்பர பதாகைகள், டிஜிட்டல் பலகைகள் வைப்பதை முறைப்படுத்த விதிமுறைகள் மற்றும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் பேனர்கள், விளம்பர பதாகைகள், டிஜிட்டல் பலகைகள் வைக்க தொடர்புடைய காவல் நிலைய ஆய்வாளரிடம் தடையின்மை சான்று பெற்று, பின்னர் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையினை செலுத்தி சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.
எனவே, அரசியல் கட்சியினர், தனியார் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்க கண்டிப்பாக உரிய அனுமதி பெற வேண்டும் எனவும், முறையான அனுமதியின்றியும், விதிமீறல் காணப்பட்டாலும் காவல் துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதுடன் ஒரு வருடத்திற்கு சிறைத் தண்டனை அல்லது ரூ.5000 வரை அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக அளிக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.கணேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் வீ.வெற்றிவேல் (திருவண்ணாமலை), திருமதி. மா.தனலட்சுமி (ஆரணி), மந்தாகினி (செய்யாறு), திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் இரா.முருகேசன், உதவி இயக்குநர்கள் சரண்யாதேவி (திருவண்ணாமலை), சுரேஷ்குமார் (செய்யாறு), வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.