படிக்காததால் சட்டம்-ஒழங்கு பிரச்சனை போய் குற்றம்(crime)அதிகரித்து விட்டதாக கலெக்டர் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடர முடியாத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது.
35 வயதில் படிக்க முடியுமா?
பிளஸ் 2 க்கு பிறகு என்ன படிக்கலாம் என்பது குறித்து நகர்ப்புறத்தில் விழிப்புணர்வு உள்ளது. வேலைக்கு போவதற்காகவும், படிப்பு வரவில்லை என்ற காரணத்துக்காகவும் மாணவிகள் மேற்கொண்டு படிக்க வைக்கப்படாமல் உள்ளனர். நான் பண பலத்தில் இங்கு கலெக்டராக உட்காரவில்லை, படித்திருப்பதால் தான் உட்கார்ந்திருக்கிறேன். 35 வயதில் வேலைக்கு போக முடியும், ஆனால் படிக்க முடியுமா?
எதிர்காலம் கஷ்டம்
15, 20 வயதில் வேலைக்கு அனுப்பினால் ரூ.10 ஆயிரம் கிடைக்கும். 30 வயதிலும் அதே சம்பளம் தான் கிடைக்கும். அதற்கு பதில் டிகிரி படிக்க வைத்தால் நல்ல வேலை கிடைக்கும். 22, 23 வயதில் ரூ.50 ஆயிரம், ரூ.60 ஆயிரம் என சம்பாதிக்கலாம். 30 வயதில் ரூ. 1 லட்சம் சம்பாதிக்கலாம். குறுகிய காலத்தில் பணம் கிடைக்கும் என்று வேலைக்கு அனுப்புவதால் எதிர்காலம் கஷ்டமாகி விடுகிறது.
சங்கடமாக உள்ளது
13 வயதில் பெண்கள் வயதுக்கு வந்தவுடன் திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது. தானிப்பாடி மருத்துவமனைக்கு ஆய்வு சென்றபோது 18 வயது பெண் ஒருவர் குழந்தை பெற்றிருந்தார். அப்படி என்றால் அவர் 16 வயது 17 வயதில் திருமணம் செய்திருப்பார். கணவனுக்கு 19 வயது இருக்கும். இவர்களால் எப்படி குழந்தையை கவனிக்க முடியும்? பொருளாதாரம் எப்படி உயரும்? கடைசி வரை கூலி வேலைக்கு தான் போக வேண்டும். இந்த மாவட்டத்தில் இதையெல்லாம் பார்ப்பதற்கு சங்கடமாக உள்ளது. 21ம் நூற்றாண்டில் படிப்புக்கு முக்கியத்துவம் தராது வேதனையாக உள்ளது.
கிரைம் (Crime) அதிகரிப்பு
மேல் கொண்டு படிக்க குழந்தைக்கு விருப்பம் இருந்தாலும் பெற்றோர்கள் படிக்க வைக்காமல் நிறுத்தி விடுகின்றனர். ஒரு மூத்த அதிகாரியிடம் பேசும் போது தான் கலெக்டராக இருந்தபோது சட்டம் – ஒழுங்கு பிரச்சனை அதிகமாக இருந்ததாக சொன்னார். இப்போது கிரைம் (Crime) தான் அதிகமாக நடக்கிறது. திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. வெட்டு, குத்து குறைந்து விட்டது. மக்கள் படிக்க ஆரம்பித்து விட்டதால் இது குறைந்து விட்டது. எனவே படிப்புதான் வாழ்க்கையை உயர்த்தும்.
ரூ.1000 முக்கியம்
தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதுமைப் பெண் திட்டம் மாணவிகளுக்கு முக்கியமானதாகவும், ஊக்கம் தருவதாகவும் இருக்கும். பிளஸ் டூ முடித்து கல்லூரிக்கு சென்றால் அரசு மாதம் ரூ.1000 தருகிறது. நாங்கள் படிக்கும்போது மெஸ் பில் ரூ.350, ரூ. 400 என வரும். இதை கஷ்டப்பட்டு கட்டுவோம். கடைசி வருடம் படிக்கும் போது ரூ.1200 வந்துவிடும். எனவே அரசு மாதந்தோறும் தரும் ரூ.1000 எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தை திருமணம்
இந்த மாவட்டத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு 253 பெண்கள் உயர்கல்வி சேராமல் உள்ளனர். 10 பேருக்கு திருமணம் நடந்துள்ளது இது எவ்வளவு பெரிய தவறு. உயர்கல்விக்கு பணம் கட்ட முடியாமல் உள்ளவர்களுக்கு சென்ற ஆண்டு 7, 8 பேருக்கும், இந்த ஆண்டு 15 பேருக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்கியுள்ளோம். மிக மிக ஏழ்மையான குடும்பம் என்றால் ரூ. 50 ஆயிரம் வரை தருகிறோம். மேலும் கல்வி கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு படித்து அரசு பணியிலும், நல்ல நிலையிலும் வந்தால்தான் சமுதாயம் உயரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி
இதனைத் தொடர்ந்து தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் மேற்கு ஆரணி, தெள்ளார், பெரணமல்லூர், கலசபாக்கம், சேத்பட் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் இராமலிங்கம், விரிவுரையாளர்கள் பி.கமலி, உமாபிரியா, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் தனகீர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.