தீபதிருவிழா- தேர்கள் சோதனை ஓட்டம்-கலெக்டர் உத்தரவு
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கப்பட உள்ள நிலையில் அனைத்து தேர்களையும் 2 முறை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்திட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பக்தர்கள் வேதனை
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பங்கேற்க முடியாமல் பக்தர்கள் வேதனையில் இருந்து வந்தனர். மேலும் மாடவீதிகளில் சாமி ஊர்வலங்களும், பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறவில்லை.
கோர்ட்டு உத்தரவு
கடந்த ஆண்டு நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவில் கோர்ட்டு உத்தரவின் படி 13 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கட்டுப்பாடு இருக்காது
இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து விட்ட நிலையில் கோயில்களில் வழக்கம் போல் பக்தர்களோடு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்ற ஆண்டை போன்று இந்த வருடம் கட்டுப்பாடுகள் ஏதும் இருக்காது என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கலெக்டர் அதிரடி
இந்த வருடம் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் அனைத்து தேர்களையும் ஓடவிட்டு சான்றிதழ் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொடியேற்றம்
உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த வருடம் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மலையில் மகா தீபம்
தீபத் திருவிழாவின் 7வது நாள் பஞ்சமூர்த்திகளின் தேரோட்டமும் அதைத் தொடர்ந்து 10 வது நாளான டிசம்பர் 6ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட இருக்கிறது.
அனைத்து அதிகாரிகள்
தீபத் திருவிழாவை சிறப்பாக நடத்திடுவது சம்மந்தமாக அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்றது.
கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை, காவல்துறை, வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2 முறை வெள்ளோட்டம்
இந்த கூட்டத்தில் பேசிய கலெக்டர் முருகேஷ் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்கள் வீதி உலா நடைபெறாமல் இருந்தது. இதனால் இந்த வருடம் அண்ணாமலையார் தேரான பெரிய தேர் உள்பட 5 தேர்களையும் 2 முறை வெள்ளோட்டம் விடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மலையேற டோக்கன்
தேருக்கான சான்றை நவம்பர் 15ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்த கலெக்டர் முருகேஷ், மகா தீபத்தன்று 2000 பேர் மலையேறுவதற்கான டோக்கன்களை காலை 6 மணிக்கே வழங்கும்படியும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.