ரூ.25 கோடியில் சமுத்திரம் ஏரியில் தீவு, படகு வீடு
365 ஏக்கர் பரப்பு கொண்ட சமுத்திரம் ஏரியில் தீவு மற்றும் படகு வீடு அமைப்பதற்கு அனுமதி அளிக்க அமைச்சர் மெய்யநாதன் ஏரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சமுத்திரம் ஏரி அழகுபடுத்துதல்
திருவண்ணாமலை சமுத்திரம் ஏரி அழகுப்படுத்த கரையை பலப்படுத்துதல், நடைபாதை, அணுகுசாலை, பூங்கா, நீர்பிடிப்பு பகுதியில் தீவு மற்றும் படகு குழாம் (boat house) ஆகியவை அமைக்கும் பணியினை சுற்றுசூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.ஏ.மெய்யநாதன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ரூ.25.54 கோடி மதிப்பில் திட்டம்
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சமுத்திரம் ஏரியில் படகு குழாம் மற்றும் பூங்கா அமைத்து சமுத்திரம் ஏரியினை அழகுபடுத்தவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர், தொடர்புடைய துறை அலுவலர்களுடன் நேரில் ஆய்வு செய்து சமுத்திரம் ஏரியின் கரையினை பலப்படுத்தி நடைபாதை அமைக்கவும், பூங்கா, விளையாட்டு திடல், வாகனம் நிறுத்துமிடம், பொதுமக்கள் தங்குமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அணுகுசாலை, ஏரி பாதுகாப்பிற்கு இரும்பு வேலி அமைத்தல் ஆகிய வசதிகளுடன் சமுத்திரம் ஏரியின் உபரிநீர் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கவும் வழிவகை செய்து ரூ.25.54 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் துறை வாயிலாக செயல்படுத்த அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சுற்றுசூழல் அமைச்சர்
இதற்கு அனுமதி அளிக்கும் வகையில் திருவண்ணாமலைக்கு இன்று விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க வருகை தந்திருந்த சுற்றுசூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.ஏ.மெய்யநாதன் அந்த ஏரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அவருடன் சட்டமன்ற துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட கவுன்சிலர் இல.சரவணன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.வெற்றிவேல், நீர் வள ஆதாரத் துறை உதவி செயற் பொறியாளர் திரு.சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் சென்றிருந்தனர்.
365 ஏக்கர் பரப்பு
சமுத்திரம் ஏரி கரையின் நீளம் 1.75 கிமீ, முழுகொள்ளவு 78.75 மிக.அடி, ஏரியின் பரப்பு 365 ஏக்கர் மற்றும் நீர் தேங்கும் உயரம் 4.60மீ ஆகும். சமுத்திரம் ஏரிக்கு அய்யம்பாளையம் ஏரியின் உபரி நீர் மற்றும் திருவண்ணாமலை மலையில் இருந்து வரும் நீர் இந்த ஏரியின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. திருவண்ணாமலை நகரத்தின் குடிநீர் மற்றும் நிலநீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்குகிறது.

படகு குழாம்
சுற்றுலாத்துறை மூலம் கோவளம் அருகில் அமைக்கப்பட்டுள்ள முட்டுக்காடு படகுக் குழாம் (boat house) நீர் விளையாட்டு மையமாக விளங்கி வருகிறது. இங்கு தண்ணீரை கிழித்துக் கொண்டு செல்லும் வகையில் பல வகை படகுகளில் பொதுமக்கள் சவாரி செய்யலாம். குழந்தைகள் செல்லும் வகையில் சிறிய அளவிலான படகுகளும் உள்ளன. மேலும் கார் பார்க்கிங், உணவகங்கள் அமைய பெற்றுள்ளன. படகு சவாரியை கண்டு களிக்கும் வகையில் இருக்கை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. முட்டுக்காடு கடலில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாம் ஆகும். திருவண்ணாமலையில் ஏரி என்பதால் சிறிய அளவிலான போட் ஹவுஸ் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.