தீபாவளி(diwali) பரிசை அமைச்சர் எ.வ.வேலு, பல மடங்காக உயர்த்தி வழங்கியதால் திருவண்ணாமலை திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமூக பெருவிழா
தீபாவளி(diwali)பண்டிகை உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாளாக விளங்கி வருகிறது. ஒரு சமூக பெருவிழாவாக தீபாவளி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கடந்த 2 வருடங்களாக வாட்டி வதைத்த கொரோனாவால் பண்டிகைகள் களை இழந்து இருந்தன. இம்முறை கொரோனா நோய் கட்டுக்குள் வந்து பழைய நிலை திரும்பி இருப்பதால் பண்டிகைகளை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
தலைமை உத்தரவு
முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிடும் நிலையில் திமுக தலைவர் வாழ்த்து கூறாதது ஏன்? என்று பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கேள்வி எழுப்பி வருகின்றன. வாழ்த்து கூறாவிட்டாலும், தீபாவளியை திமுகவில் பெரும்பாலோனார் கொண்டாடுவதால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி திமுக மாவட்ட செயலாளர்களுக்கு குறிப்பாக வெயிட்டான துறையின் அமைச்சராகவும் மற்றும் மாவட்ட செயலாளராக உள்ளவர்களுக்கும் கட்சி தலைமை உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
ரூ.1 லட்சம் பரிசு
இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் திமுக நிர்வாகிகளுக்கு ரூ.1 லட்சம் வரை தீபாவளி பரிசு வழங்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அமைச்சராகவும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ள எ.வ.வேலுவும் திமுக நிர்வாகிகளுக்கு ரூ.1 லட்சம் வரை தீபாவளி பரிசு வழங்கி திக்கு முக்காட வைத்துள்ளார்.
ஆயிரக்கணக்கானோர்
கிளை செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் போன்றவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், திமுகவில் உள்ள அணி துணை அமைப்பாளர்களுக்கு ரூ.50 ஆயிரமும், நகரம், ஒன்றியம், பேரூராட்சி செயலாளர்களுக்கு ரூ.1லட்சமும் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர்களுக்கு இந்த தீபாவளி பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
பொங்கல்தான் பண்டிகை
அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி திமுக அல்ல என தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். வடநாட்டவர் கொண்டாடும் பண்டிகையான தீபாவளியை தான் கொண்டாடப் போவதில்லை, நீங்கள் கொண்டாடுவதை தடுக்க போவதில்லை. தமிழர்களின் பண்டிகையான தைப்பொங்கல்தான் தனக்கு பண்டிகை என குறிப்பிட்டார்.
திமுக நிர்வாகிகளுக்கு சென்ற முறை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் முக்கிய நிர்வாகிகளுக்கு பல மடங்கு உயர்த்தி தீபாவளி தொகை வழங்கப்பட்டிருப்பது அவர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
அதே நேரம் அதிமுகவில், அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு எந்த வித பரிசும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.