நாளை உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் -கலெக்டர் தகவல்
உள்ளாட்சி தினத்தை யொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகளிலும், நகராட்சிகளிலும் நாளை கிராம சபை (village council meeting) கூட்டத்தை நடத்தப்படும் என கலெக்டர் தெரிவித்திருக்கிறார்.
சிறப்பு நாட்கள்
ஜனவரி 26 குடியரசு நாள், மே 1 தொழிலாளர் நாள், ஆகஸ்டு 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, மார்ச் 22 உலக நீர் நாள் மற்றும் நவம்பர் 1 உள்ளாட்சி நாள் ஆகிய 6 சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை (village council meeting)கூட்டத்தை நடத்திட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி உள்ளாட்சிகள் தினமான நாளை (நவம்பர் 1ந் தேதி) கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
860 ஊராட்சி
உள்ளாட்சிகள் தினமான 1.11.2022 அன்று காலை 11.00 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. அனைத்து பொது மக்களும் இக் கிராம சபை கூட்டங்களில் பங்கு பெற்று கூட்டத்தில் வைக்கப்படும் பொருட்கள் குறித்து விவாதிக்கலாம்.
முதல்வருக்கு நன்றி
உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தல். கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, பள்ளி மேலாண்மை குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
வடகிழக்கு பருவமழை
ஜல்ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம் (Peoples’s Plan Campaign) வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணைய வழி வீட்டு வரி, சொத்துவரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உருவாக்குதல், நிதிசெலவின அறிக்கை, மக்கள் நிலை ஆய்வு, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மக்கள் நிலை ஆய்வுப் பட்டியல். ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும்
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
6 கிராம சபை
ஆண்டு தோறும் 4 முறை நடைபெற்ற கிராம சபை கூட்டங்கள் இனி கூடுதலாக உலக நீர் நாள், உள்ளாட்சி நாள் ஆகிய தினங்களை சேர்த்து 6 முறை நடத்தப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் நாளை உள்ளாட்சி நாளை யொட்டி கூடுதலாக கிராம சபை நடைபெறுகிறது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் வரி
இதே போல் மாநகராட்சி, நகராட்சிகளில் மட்டுமே இருந்து வந்த ஆன்லைன் மூலம் வீட்டு வரி, சொத்துவரி செலுத்தும் நடைமுறை நாளை முதல் ஊராட்சிகளிலும் அமுல்படுத்தப்படுகிறது. இது சம்மந்தமாகவும் கிராம சபை கூட்டங்களில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
கிராம சபை கூட்டங்களை போல நகர உள்ளாட்சி மன்றங்களில் பகுதி சபை கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
நகரமன்ற தலைவர்
அதன்படி திருவண்ணாமலை நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் முதன்முறையாக பகுதி சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு 1 வது வார்டு செட்டிகுளம் மேட்டில் நடைபெறும் கூட்டத்தில் நகர மன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன் பங்கேற்கிறார்.