செங்கத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் ஒன்றரை லட்சம் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் சிக்கியது. இதை தொடர்ந்து பெண் பி.டி.ஓ-விடம் விசாரணை நடைபெற்றது.
திருவண்ணாமலை அடுத்த செங்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம வளர்ச்சி (scheme) பி.டி.ஓ-வாக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி. இவர் ஏற்கனவே துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஸ்கீம் பி.டி.ஓ வாகவும், ரெகுலர் பி.டி.ஓ வாகவும் பணிபுரிந்தார். பிறகு திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சில நாட்கள் பணியில் இருந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஸ்கீம் பி.டி.ஓ-வாக பதவி ஏற்றார்.
இந்நிலையில் இன்று அவர் ஊராட்சி மன்ற தலைவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ஊராட்சி மன்ற தலைவர்களிடம் அவர் தீபாவளி பண்டிக்கைக்காக வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் பறந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையிலான போலீசார் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஸ்கீம் பிடிஓ விஜயலட்சுமி தனது அறையில் சில ஊராட்சி மன்ற தலைவருடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த அறையில் விஜிலென்ஸ் போலீசார் நுழைந்து கதவுகளை மூடிக்கொண்டு சோதனையிட்டனர்.
இதில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்த பணத்திற்கு கணக்கு இருப்பதாக பிடிஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த அறையில் இருந்த சால்வை உள்ளிட்ட பரிசு பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
இது சம்பந்தமாக பி.டி.ஓ விஜயலட்சுமியிடமும், அந்த அறையில் இருந்த ஊராட்சி மன்ற தலைவர்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்து அவர்கள் திரும்பிச் சென்றனர். நாளையும் விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் தமிழகம் முழுவதும் 27 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 803 கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிகப்பட்சமாக திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ரூ.75 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.
செங்கம் பி.டி.ஓ ஆபீசில் நடத்தப்பட்ட இந்த விஜிலென்ஸ் (vigilance) சோதனையால் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.