அண்ணாமலையார் கோயிலில் 2 மணி நேரத்தில் தரிசனம்?
பவுர்ணமி அன்று அண்ணாமலையார் கோயிலில் 2 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமி நாளன்று பக்தர்கள், ஏறக்குறைய 7 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. மேலும் பல பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமலேயே ஏமாற்றத்துடன் செல்லும் நிலையும் உள்ளது.
பல மணி நேரம் காத்திருப்பு
சென்ற மாத பவுர்ணமி அன்று நீண்ட வரிசையில் பல மணி நேரம் நின்றிருந்த பக்தர்களை பற்றி கோயில் நிர்வாகம் கவலைப்படாமல் கோயிலுக்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்களின் தரிசனத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தது. கருவறைக்குள் சிறப்பு தரிசனத்திற்காக உட்கார வைக்கப்பட்டவர்களால் வரிசையில் நின்ற பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் போனது.
சென்ற பவுர்ணமியன்று கலெக்டர் முருகேஷ், கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த போது பக்தர்கள் பல மணி நேரம் குடிநீர், கழிவறை வசதியின்றி கால் கடுக்க நின்றிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடுகளை செய்தனர்.
காலை 11 மணிக்கு வந்த நபர் ஒருவர், மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய முடியாமல் வரிசையில் நின்றிருப்பது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்த கலெக்டர், பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏதுவாக அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு உள்ள பகுதியை அகலப்படுத்திட உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்த பவுர்ணமிக்கு அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத பவுர்ணமி, நாளை மறுநாள் 7ந் தேதி மாலை 4.44 மணிக்கு தொடங்கி 8ம் தேதி மாலை 4.48 மணி வரை உள்ளது. எனவே திங்கட்கிழமை இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள்.
மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனமும் செய்வார்கள் என்பதால் இதற்கான முன்னேற்பாடுகள் செய்வது குறித்து கலெக்டர் முருகேஷ், இன்று காலை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பனுடன், அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று ஆய்வு செய்தார்.
2 மணி நேரத்தில் தரிசனம்?
வரிசையில் நிற்கும் பக்தர்கள் அதிகப்பட்சம் 2 மணி நேரத்திற்குள் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்தும், கோயில் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
மேலும் கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடுகள் குறித்தும் பார்வையிட்டார். கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் அமைப்பதற்கான இடம், பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்புவதற்கான வழிகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
குடிநீர், கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்தும் கலெக்டர் ஆலோசித்தார்.
கொரோனா தொற்றால் 2 வருடம் நடைபெறாமல் இருந்த தேரோட்டத்தை சிறப்பாக நடத்திடவும், தேரின் உறுதித் தன்மையை பரிசோதித்திடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட கலெக்டர் முருகேஷ், தேர்கள் பராமரிப்பு பணியையும் பார்வையிட்டார். பிறகு பெரிய தேரோன அண்ணாமலையார் தேரின் மேல் ஏறி ஆய்வு செய்தார்.