கிரிவலப்பாதையை ஆக்கிரமித்து கடை வைத்தால் கைது செய்யப்படுவார்கள், குப்பை இருந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கிரிவலப்பாதையில் உள்ள கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சத்தலைவர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது,
கோயிலையும், கிரிவலப்பாதை சுற்றிள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்திருப்பது நம் அனைவரின் கடமை. கோயிலை சுற்றியுள்ள மக்களும் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள மக்களுக்கும் இதில் கூடுதல் பொறுப்புள்ளது.
கடந்த இரண்டு வருடம் கொரோனா பெருந்தொற்று விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. இந்த ஆண்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சாமி தரிசனம் செய்ய நிறைய பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வர தொடங்கியுள்ளனர்.
கிரிவலப்பாதையில் கடைத்திருப்பவர்கள் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு இடையுறாக நடைபதையிலோ, பொது இடங்களிலோ கடைகளை வைக்க கூடாது. ஒலிபெருக்கி வைத்து வியாபரம் செயக்கூடாது. கிரிவலப்பாதையில் அனுமதிக்கபட்ட இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்க வேண்டும், குப்பை கூடைகளை வைத்திருக்க வேண்டும்.
அன்னதானம் செய்யும் இடங்களில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், கிரிவலம் வரும் பக்தர்களுக்கு பிளாஸ்டிக்கை பயன்படுத்தி பொருட்களை வழங்க கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பேசினார்.
அவர் பேசியதாவது,
கைது செய்யப்படுவார்கள்
கிரிவலப்பாதையை ஆக்கிரமித்து கடை வைத்திருந்தாலோ, நடைபாதையில் கடை வைத்திருந்தாலோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள். ஏற்கனவே ஒருமுறை எச்சரிக்கை செய்து விட்டுவிட்டோம். இந்த முறை நிச்சயமாக கைது செய்யப்படுவார்கள்.
கடைக்கு முன் குப்பை இருந்தால் அந்த கடை உரிமையாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். குப்பை தொட்டி வைத்திருக்கிறேன், கடைக்கு வருபவர்கள் அதில் போடவில்லை என்பதை ஏற்க மாட்டோம். கடைக்கு சீல் வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து கடைதாரர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
கோயில் இடத்தில் கடை
அடிஅண்ணாமலை ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவரும், திமுக பிரமுகரான பாபு பேசுகையில், கிரிவலப்பாதையில் ஏராளமான கோயில் நிலங்கள் காலியாக உள்ளன. எனவே அந்த இடத்தில் மிக குறைந்த வாடகையில் ஷெட் அமைத்து கடைகளை வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இது சம்மந்தமாக ஏற்கனவே அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆனால் இதை ஏற்காத கலெக்டர், கிரிவலம் எதற்கு வருகிறார்கள் என அவரிடம் கேள்வி கேட்டார். கடவுளை வணங்குவதற்கும், மன அமைதிக்கும் வருவதாக பாபு பதிலளித்தார். மன அமைதிக்கு வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, ஓம்நமச்சிவாயா என்ற பாடலை தவிர கிரிவலப்பாதையில் எந்த சத்தமும் இருக்க கூடாது.
காய்கறி, பொம்மை, பழம் வாங்கவா கிரிவலப்பாதைக்கு வருகிறார்கள்? இவை எல்லாம் அவர்களது ஊரிலே கிடைக்கிறது. கிரிவலப்பாதையை வியாபார ஸ்தலமாக்குவதா? என கலெக்டர் முருகேஷ் காட்டமாக பதிலளித்தார்.
அப்போது மக்காளச் சோளம் வியாபாரம் செய்யும் மாரிமுத்து என்பவர் அய்யா, நாங்களெல்லாம் ஏழை, பாழைங்க, கடை வைக்க அனுமதி தாருங்கள் என கேட்டார். பட்டா இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என கலெக்டர் கூறியதற்கு பட்டா இல்லைங்க என மாரிமுத்து சொன்னதால் கலெக்டர் டென்ஷனானார். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கூட்டத்திலிருந்து வெளியேற்றினர்.
தொடர்ந்து பேசிய கலெக்டர், காத்து வாங்குவதற்காகவும், டீ குடித்துக் கொண்டே ஊர் கதை பேசுவதற்கும் பக்தர்கள் கிரிவலம் வருவதில்லை. டீ கடைகளில் கண்ணை பறிக்கும் விளம்பர போர்டுகளை வைக்க கூடாது.
ஒரே நாளில் சம்பாதித்து விடலாம் என எண்ணி குடிதண்ணீர் ரூ.40க்கும், ரூ.50க்கும் ஸ்டார் ஓட்டல் ரேஞ்சுக்கு விற்கப்படுகிறது. இதற்காக ஒரு குழு அமைத்திருக்கிறோம். அவர்கள் பக்தர்கள் மாதிரி சென்று வாட்டர் கேனை வாங்குவார்கள். அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் இரா.முருகேசன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குநர்
சரண்யாதேவி, செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரங்கள் மழை பெய்தால் சுத்தமாகி விடும் என்கிறார்கள். ஆனால் புறா எச்சில்களாலும், தூசி படர்ந்தும் மோசமாக உள்ளது. எனவே ஸ்கை பைப் மூலம் கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்காக தீயணைப்பு வாகனம் இந்த வாரம் வர உள்ளது என்று கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசும் போது குறிப்பிட்டார்.