சிவனின் வடிவமான திருவண்ணாமலை மலை மீது ஏறுவது பாவச் செயல் என சொல்லப்படுகிறது.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 27ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 6ந் தேதி 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகாதீபத்தை தரிசிப்பது தனி சிறப்பாகும். இத்தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைமீது ஏறி மகாதீபத்தை தரிசிப்பார்கள்.
அண்ணாமலை மீது ஏறி மகாதீபத்தை தரிசிக்க மீது, கடந்த காலங்களில் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு 2,500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாகவும், இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, மகாதீபத்திற்கு முதல்நாள் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவனின் வடிவமான திருவண்ணாமலை மலை மீது ஏறுவது பாவச் செயல் என்ற பதிவு சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதில் சொல்லப்பட்டிருக்கிற தகவல்கள் வருமாறு:-
மலையேற அனுமதி பெறுவது குறித்து கேட்கின்றனர். தவறாக எண்ண வேண்டாம். இப்படி ஒரு கேள்வி வந்ததால் அது பற்றிய புராணக் கருத்தைத் தெரிவிக்கிறோம். பலருக்கும் தெரிந்திருக்கலாம்.
தானே தோன்றும் ஜோதி
மற்ற சாதாரண மலைகள் போல் ‘அண்ணாமலை’ கிடையாது. சாட்சாத் சிவலிங்க ஸ்வரூபம். இதைப் பூஜிக்கலாம், வலம் வரலாம், கண்களால் ஆனந்தமாக தரிசிக்கலாம், பலவகைகளில் கொண்டாடலாம், கைகளாலும் தொடக்கூடாது. கால்களாலும் ஏறக் கூடாது, மரபுப்படி மகா தீபம் ஏற்றுபவர்களைத் தவிர. அந்த மகா தீபமே பழங்காலத்தில் யாராலும் ஏற்றப்படாமல் தானே தோன்றும் ஜோதியாகவே இருந்து, காலத்தால் தற்போதைய நிலை வழக்கில் உள்ளது.
தேவர்களோ, மூவர்களோ, ரிஷிகளோ, நாயன்மார்களோ எவரும் அருணகிரி (திருவண்ணாமலை மலை) மீது ஏறியது கிடையாது. ஸ்ரீ பராசக்தியான உண்ணாமலை அம்பிகையே கீழிருந்து தான் தீப தரிசனம் செய்துள்ளார். இந்த மலையை ஸ்பர்சித்து தான் ஸ்ரீ அம்பிகையானவள் ஐந்தொழில் களையும் விளையாட்டாகச் செய்கிறாள்.
இம்மலையைத் தொடும் சக்தியும், யோக்யதையும் அவளுக்கு மட்டுமே உண்டு. வேறு எவருக்கும் இல்லை. தீப கைங்கர்யம் செய்பவர்கள் அச்சமயத்தில் மட்டும் அப்பணியைச் செய்யலாம். வேறு நாட்களில் அவர்களுமே மலை ஏறக்கூடாது. மலைக்கு மகா கும்பாபிஷேகம் முதலிய பூஜை நாட்களில் சிவாசார்யார்கள் ஏறுவது மரபு. வேறு நாட்களில் அவர்களுமே மலை ஏறக்கூடாது.
மலை மீது காலால் ஏறாமல், தாண்டிச் சென்றதற்கே மகா பலசாலிகளான சூரியனும், வாலியும் உயிரற்றவர் போல் கீழே விழுந்து, பின்னர் இறைவன் உயிர்ப்பிச்சை இட்டதால் பிழைத்தார்கள்.
நெருங்க முடியாத மலை
எவராலும் அண்ண முடியாமல் (நெருங்க முடியாமல்) இருந்ததால்தான் ‘அண்ணாமலை’ என்ற பெருமை மிக்க பெயரே ஏற்பட்டது.
அப்படிப்பட்ட மகா பராக்ரமம் கொண்ட மலையை எத்தனையோ ஜன்மங்களில் செய்த புண்ணியங்களினால் நாம் அருகில் இருந்து, கண்ணாலாவது பார்க்கிறோம். அதற்கே நாம் சுவாமிக்குப் பட்ட கடனைத் திருப்பி அடைக்கவே முடியாது.
இந்நிலையில், உலகிலேயே மிகப் பெரிய சிவலிங்கமான இந்த அண்ணாமலையில் கால் பட ஏறுவது அறியாமையின் உச்சம் மட்டுமல்ல, அண்ணாமலைக்குச் செய்யப்படும் அவமரியாதை இது, என்பதை மெய்யடியார் பெருமக்கள் உணர்வார்கள்.
காரணம், முப்பத்து முக்கோடி தேவர்களும் எப்போதும் வலம் வந்து வழிபடுவதாக் கூறும் பல புராணங்களில் ஒரு இடத்தில் கூட, ஒருவர் மலை ஏறி வழிபட்டார் என்று கூறப்படவில்லை. மலையின் மாண்பு அத்தகையது.
இவ்வளவு ஏன் தனக்கு மற்றொரு உவமை இல்லாத பரமாத்மாவான ஸ்ரீ அருணாசல மகாபிரபுவே வருடத்திற்கு இருமுறை ‘வலம்’ தான் வருகிறார். புராணத்திலும் அப்படியே தான் உள்ளது.
மலை ஏறி வரும் அனைத்து அன்பர்களும் ஸ்ரீ அண்ணாமலை மீது பேரன்பு கொண்டவர்களே! அதில் ஐயமில்லை. ஆனால் அன்பின் வெளிப்பாடு என்பது ‘மலைமீது ஏறுவது’ என்பது ‘இந்த’ மலைக்குக் கிடையாது.
ஏறி வழிபடுவதற்காகவே பல மலைகள் உள்ளன. ஆனால் இம்மலை அந்த நியதிகள், பிரார்த்தனைகள் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட பரம்பொருள் வடிவம் என்பதை மற்ற அடியார்களுக்கும் உணர்த்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.
கீழிருந்து தரிசிப்பதாலேயே குறைவற்ற பூரண அனுகிரகத்தை எளிதில் அடைவதை விட்டு, கிரியின் மீது ஏறி, ஏன் பிராச்சித்தமே செய்ய முடியாத பெரும் பாவத்தைச் செய்ய வேண்டும்?
நிர்வாகம் நடைமுறை என்பது வேறு. அதில் எடுக்கப்படும் நிலைப்பாடுகள், காலசூழ்நிலை மற்றும் பக்தர்களின் வசதி, பாதுகாப்பிற்கு ஏற்ப அமையும். ஆனால் மெய்யன்பர்கள் தான் இவ்விஷயத்தைச் சரியாக உணர்ந்து, அவரவர்க்கு வினைப்பயன் சேராமலும், ஸ்ரீ அண்ணாமலையின் ஈடிணையற்ற மகத்துவத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் நடந்து கொண்டு வழிபட வேண்டும்.
‘அருணாசல சிவ’
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவனின் வடிவமான மலை மீது பக்தர்கள் ஏறிச் சென்றதால், மலையை காலால் மிதித்ததால் ஏற்பட்ட தோஷத்தை போக்க தீபத்திருவிழா முடிந்ததும் மலை மீது புனித நீர் தெளித்து மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.