சிறுமி கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆளான நபர் கொலை செய்யப்பட்டதாக நாடகமாடியதை போலீசார் கண்டுபிடித்து அவர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள கீழ்பாலானந்தல் கிராமத்தில் 30.10.2022 அன்று முனியப்பன் என்பவரின் நிலத்திலுள்ள வைக்கோல் போர் எரிவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது வைக்கோல் போர் முழுவதும் எரிந்திருந்தது. அதன் அருகே மண்ணெண்ணெய் கேனையும், சிறிது தொலைவில் பைக் ஒன்றும், செல்போன் இருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். மேலும் ரத்தக் கறையும் காணப்பட்டது. இதையடுத்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. எந்த தடயமும் சிக்கவில்லை.
இதையடுத்து அந்த பைக்கின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பைக் திருவண்ணாமலை வட்டம் கோபாலபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(வயது 34) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
மணிகண்டன், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 2013ம் ஆண்டு மேல்பாலானந்தல் பரமசிவம் என்பவரது மகள் பச்சையம்மாளை (வயது 4), பள்ளியில் இருந்து கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் சம்மந்தப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.
இந்த வழக்கில் மணிகண்டனுக்கு திருவண்ணாமலை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது. இவ்வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. போலீசார் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்காததால் மணிகண்டனை விடுதலை செய்த நீதிபதிகள், போலீசாரின் விசாரணை சரியில்லை என கூறி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து சிபிஐ விசாரணை நடைபெற்று இறுதி நிலையில் உள்ளது. இந்த வழக்கில் தனக்கு தண்டனை கிடைத்து விடும் என பயந்து மணிகண்டன் தான் கொலை செய்யப்பட்டு விட்டதாக நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆரணியில் வீடு எடுத்து தங்கியிருந்த மணிகண்டனை கைது செய்தனர்.
மணிகண்டனின் உடலில் இருந்து இரத்தத்தை எடுத்து, வைக்கோல் போர் எரிந்த இடத்தில் தெளிக்க உதவிய திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக (Ward Boy) வேலை செய்யும் பாண்டி என்கிற பாண்டியராஜனை (25) போலீசார் கைது செய்தனர். இவர் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், ஊரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
மேலும் மணிகண்டனுக்கு உடந்தையாக இருந்த திருவண்ணாமலை வட்டம் அரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்தி என்கிற சத்தியராஜ் (26), ஆரணியில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து மணிகண்டனை தலைமறைவாக தங்க வைத்த அவரது தங்கையின் கணவர், வந்தவாசி வட்டம் பெரிய கொழப்பலூரைச் சேர்ந்த சரத் குமார் (27) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சிறுமி கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆளானவர், கொலை செய்யப்பட்டாக கபட நாடகம் ஆடி சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.