திருவண்ணாமலை கோயிலில் 3மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதியில்லை
திருவண்ணாமலை கோயிலில் வருகிற 7ந் தேதி அன்னாபிஷேகத்தை முன்னிட்டு 3 மணி நேரம் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வருகிற 7ந் தேதி திங்கட்கிழமை அன்னாபிஷேகம் நடைபெறும் நாளில் கோவிலில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்று அன்னாபிஷேகம் ஆகும். ஐப்பசி மாதம் பெரும்பாலான சிவன் கோவிலில் பௌர்ணமி நாளிலும், அண்ணாமலையார் கோயிலில் ஆகம விதிகளின் படி ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திர நாளிலும் இந்த அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அன்னாபிஷேக விழா நடக்கிறது. அன்றைய தினம் அண்ணாமலையார் கோயிலில் சாதம் தயார் செய்யப்பட்டு அதில் வெண்ணெய் கலந்து மடப்பல்லியில் இருந்து எடுத்து வரப்பட்டு அலங்காரம் நடைபெறும்.
அந்த சமயத்தில் கோயில் வளாகத்தில் கூட்டத்தை தவிர்க்க தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அன்னாபிஷேகமான வரும் 7ந் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவதாண்டவம் ஆடிய சனி பிரதோஷம்
சிவன் கோயில்களில் நடைபெறும் முக்கிய வழிபாடுகளில் ஒன்று பிரதோஷ வழிபாடு ஆகும். ஒவ்வொரு தமிழ் மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரியோதசி திதி நாளில் பிரதோஷம் நடைபெறும்.
தின பிரதோஷம், சுக்லபட்ச பிரதோஷம், கிருஷ்ணபட்ச பிரதோஷம், சனி பிரதோஷம் என பிரதோஷ வகைகள் இருந்தாலும் சனி பிரதோஷம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏனென்றால் சிவபெருமான், ஆலகால விஷத்தை உண்டு உலக உயிர்களை காத்து நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவதாண்டவம் ஆடியது சனி பிரதோஷம் அன்றுதான்.
நாளை (5-11-2022) வளர்பிறை சனி பிரதோஷ நாளில் மாலை 4.30 மணிக்கு மேல் அண்ணாமலையார் கோயிலில் பெரிய நந்தி என்று அழைக்கப்படும் இந்திர நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கும்.
இதே போல் கோயில் வளாகத்தில் உள்ள வேதநந்தி, பிரம்ம நந்தி உள்பட அனைத்து நந்திகளுக்கும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடக்கிறது. அதே சமயம் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோயில்கள் மற்றும் அடி அண்ணாமலை ஆதி அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெறும்.
பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்
ஐப்பசி மாத பவுர்ணமி 7ந் தேதி திங்கட்கிழமை மாலை 4.44 மணிக்கு தொடங்கி மறுநாள் 8ந் தேதி செவ்வாய்கிழமை மாலை 4-48 மணி வரை உள்ளது. எனவே திங்கட்கிழமை இரவு திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தரிசனத்திற்கு முன்னுரிமையில்லை
அதிகளவில் பக்தர்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாகவும் 07.11.2022 மற்றும் 08.11.2022 ஆகிய இரண்டு நாட்களுக்கு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
மேற்படி பவுர்ணமி தினத்தன்று எவ்வித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.