டிசம்பர் 6 மகாதீபம் என்பதால் அதிகபட்ச பாதுகாப்பு
டிசம்பர் 6ந் தேதி மகாதீபம் (Mahadeepam) வருவதால் திருவண்ணாமலையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நகரிலும், கிரிவலப்பாதையிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
2வது ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த 2வது ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அதிகாரி பிரியதர்ஷினி மற்றும் கோட்டாட்சியர்கள், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது,
மாடவீதிகளில் தேரோட்டம்
இந்த வருடம் தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்கு முன்பு எப்படி நடத்தப்பட்டதோ அதே போல் இந்த வருடம் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. மாடவீதிகளில் தேரோட்டம் நடக்க உள்ளது.
தீபத் திருவிழாவை காண 9 தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் வந்து இறங்கும் பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்புகிற அளவுக்கு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். இதற்காக 8ந் தேதி பவுர்ணமி அன்று முன்னோட்டம் பார்க்க வேண்டும்.
திருப்பதி போல் வசதி
கிரிவலம் வருவதற்கு மட்டுமே பக்தர்கள் வருவதில்லை கோயிலுக்கும் தரிசனம் செய்ய அதிக அளவில் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை இந்து சமய அறநிலைத்துறை செய்து தர வேண்டும்.
வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு கழிவறை மற்றும் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. திருப்பதி போல் கழிவறைக்கு சென்று விட்டு மீண்டும் வரிசையில் வந்து சேருகிற வசதி இங்கு இல்லை.
எனவே இது போன்ற வசதிகளை பக்தர்களுக்கு நிரந்தரமாக செய்து தர வேண்டும். குறிப்பிட்ட தேதியில் மட்டும்தான் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் வருவதில்லை, எல்லா நாட்களிலும் இப்போது வருகிறார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிக அளவில் வருகிறது.
அறநிலைதுறையின் பொறுப்பு
பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவது நமது கடமை. பரந்த நோக்கத்தோடு வசதிகளை செய்து தர வேண்டியது இந்து சமய அறநிலை துறையின் பொறுப்பாகும்.
காலை 11 மணிக்கு வரிசையில் நின்ற ஒருவரால், மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 6 மணி வரை அவர் பாதி தூரம் தான் கடந்திருக்கிறார்.
கருவறையில் சில பக்தர்களை உட்கார வைக்கின்றனர், சில பக்தர்களை சீக்கிரம் அனுப்பி விடுகின்றனர். உட்கார வைக்கப்படும் பக்தர்களால் கூட்டம் தேங்கி விடுகிறது. எனவே கருவறை பகுதியை அகலப்படுத்த சொல்லியிருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பேசியதாவது,
12ஆயிரம் போலீசார்
இந்த வருடம் தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 12ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர்.
தேவர் ஜெயந்திக்கு 8000 போலீசார் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் தமிழ்நாட்டிலே அதிகப்பட்சமாக திருவண்ணாமலைக்கு 12 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர்.
டிசம்பர் 6 மகாதீபம் (Mahadeepam) என்பதால் அதிகபட்ச போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. ஏனென்றால் அன்றைய தினம் உணர்ச்சிகரமான (sensitive) நாளாகும். அண்ணாமலையார் கோயில், மாடவீதி, கிரிவலம் ஆகிய மூன்று பகுதிகளாக பிரித்து கேமராக்கள் பொறுத்தப்பட உள்ளது.
200 மீட்டருக்கு ஒரு கேமரா
அண்ணாமலையார் கோயிலுக்குள் தற்போது 100 கேமராக்கள் உள்ளன. மேலும் 50 கேமராக்கள் தேவைப்படுகிறது. இதே போல் கிரிவலப் பாதையிலும் 100 கேமராக்கள் இருந்தாலும் 100 மீட்டர் அல்லது 200 மீட்டருக்கு ஒரு கேமரா தேவைப்படுகிறது.
இந்த கேமராக்களில் ஒரு சாப்ட்வேர் அமைக்கப்பட்டு அதன் மூலம் எவ்வளவு கூட்டங்கள் செல்கிறது என்பது பதிவு செய்யப்படும். அதே போல் குற்றவாளிகள் சென்றாலும் அந்த கேமரா அடையாளம் காட்டிவிடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அன்றைய தினம் திருவண்ணாமலை மகாதீபத்திற்கு (Mahadeepam) எந்த வருடமும் இல்லாத அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதற்கு ஆகும் செலவினங்களை பற்றி கவலைப்பட வேண்டாம் என கூறிய மாவட்ட ஆட்சித் தலைவர், தீபத்திருவிழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுஅளவில் செய்யுமாறு காவல்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
1500 பேருக்கு மட்டுமே அனுமதி?
கடந்த முறை தீபத்திருவிழாவில் பரணி தீபத்திற்கு கட்டளை, உபயதாரர்கள் 4 ஆயிரம் பேரும், ஆன்லைன் டிக்கெட் மூலம் 500 பேரும், மகாதீபத்திற்கு கட்டளை, உபயதாரர்கள் 6 ஆயிரம் பேரும், ஆன்லைன் டிக்கெட் மூலம் 1500 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
எனவே இந்த வருடமும் இதே அளவு கூட்டத்தை கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டதற்கு இதுபற்றி பிறகு ஆலோசித்து முடிவெடுத்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பதிலளித்தார்.
தீபத்திருவிழாவிற்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு