தீபவிழா சமயத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நடை இரவு 8-30 மணிக்கே சாத்தப்படும் என்ற அறிவிப்புக்கு விசுவ இந்து பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது.
சாதாரண மக்கள் தரிசனம் செய்ய விடாமல் தடுத்து திரும்ப அனுப்பட்டதாகவும் குற்றசாட்டு கூறப்பட்டுள்ளது.
நடை திறக்கும் நேரம்
வரலாற்று சிறப்பு மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வழக்கமாக அதிகாலை 5 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், பிற்பகல் 3-30 மணி மணியிலிருந்து இரவு 9-30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். இந்நேரத்தில் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் மதியம் நடைசாத்தப்படாது. அதே போல் இரவும் நடைசாத்தப்படும் நேரம் அதிகரிக்கப்படும்.
பக்தர்கள் அதிர்ச்சி
கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இனி கோயிலின் நடை இரவு 8-30 மணிக்கே சாத்தப்படும் எனவும், பக்தர்கள் இரவு 8-30 மணிக்கெல்லாம் கோயிலிலிருந்து வெளியேறிவிட வேண்டும் எனவும் கோயில் ஒலிபெருக்கியில் அடிக்கடி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தீபவிழா முதல்நாளான நேற்று இரவு 8-30 மணிக்கு கோபுர நுழைவு வாயில்கள் மூடப்பட்டன. திருமஞ்சன கோபுரம் மட்டும் திறக்கப்பட்டு அதன் வழியாக கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் வெளியே அனுப்பப்பட்டனர்.
விசுவ இந்து பரிஷத் கண்டனம்
அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தின் இச்செயலுக்கு திருவண்ணாமலை விசுவ இந்து பரிஷத் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது சம்மந்தமாக விசுவ இந்து பரிஷத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட செயல் தலைவர் எஸ்.மணிகண்டன், மாவட்ட செயலாளர் ஆர்.ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஜி.ராமமூர்த்தி, மாவட்ட பஜ்ரங்கதள் அமைப்பைச் சேர்ந்த எம்.சதீஷ் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
உலக பிரசித்தி பெற்ற தமிழக கோயில்களில் திருவண்ணாமலையும். ஒன்று என்பது தாங்கள் அறிவீர்கள். இங்கு ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் பரவல் காரணமாக சுவாமி திருவீதி உலா கோயில் வளாகத்தில் நடைபெற்றது. மேலும் கோவிலுக்குள் வெகு குறைந்த பக்தர்களே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டும், சுவாமி திருவீதிஉலா தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் வருத்தப்பட்டதும் நடந்தேறியது. தீப திருநாளில் வெளியூர் பக்தர்கள் வரவும் தடை செய்யப்பட்டிருந்தது.
போலீஸ் கட்டுப்பாட்டில் கோயில்
இந்த வருடம் பழைய படி உற்சவம் வெகு சிறப்பாக துவங்கியுள்ளது. மேலும் 27-11-2022 முதல் 7-12-2022 வரை 11 நாட்களும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள், ஒவ்வொரு வருடமும் தீப திருநாள் மற்றும் அதற்கு முந்தைய தினமும் திருவண்ணாமலை நகரம் மற்றும் கோயில் முழுவதும் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல் துறையின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஆனால் இந்த வருடம் முதல் திருவிழாவில் கொடியேற்றம் முதலே பெரும்பாலான பக்தர்கள் கோயிலுக்குள் வந்து சுவாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்து திரும்ப அனுப்பட்டனர்.
வழக்கமாக இரவு சுவாமி திருவீதிஉலா புறப்பாட்டுக்கு பின்பு தான் கோவில் நடை சார்த்தப்படும். ஆனால் நேற்று 27-11-2022 இரவு காவல்துறை சார்பாக கோவில் வளகாத்தில் ஒலி பெருக்கி மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் திருவிழா சமயத்தில் இரவு 8.30 மணிக்கெல்லாம் கோவில் நடை அடைக்கப்படும் உள்ளே பக்தர்கள் அனுமதிக்கபடமாட்டார்கள் என தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தில் வெவ்வேறு பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுவாமி புறப்பாடு காணவரும் உள்ளூர் பக்தர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை
மேலும் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் சாதாரண காவலர்கள் வரை தங்கள் பணி சமயத்திலும், கோவில் உள்ளே அரசியல் கட்சி மற்றும் பெரிய பொறுப்புகளில் உள்ள அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை சிறப்பான (சன்னதியின் எதிர் திசையில் உள்ளே அழைத்து செல்லப்பட்டு) தரிசனம் செய்து வைத்தும், அந்த சமயத்தில் வரும் சாதாரன பொதுமக்கள், பக்தர்கள் தடை செய்யப்படுவதோடு சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தடுத்து அனுப்பப்படுகின்றனர்.
இறைவனும், நீதியும் அனைவருக்கும் சமம் என்பதை இத்தருணத்தில் தங்களுக்கு நினைவூட்ட விழைகிறோம்.
எனவே தங்கள் தலைமையின் கீழ் இம்மாவட்டத்தின் அனைத்து அரசு துறைகளும் இயங்குவதால் அறநிலைய துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் தாங்கள் தக்க உத்தரவு பிறப்பித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மனநிம்மதியோடு இறைவனை வழிபட வழிவகை செய்து இந்த வருடம் தீப திருவிழாவினை வெகு சிறப்பாக நடத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபவிழா தொடங்கியுள்ள நிலையில் அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக விசுவ இந்து பரிஷத் தெரிவித்துள்ள குற்றசாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்தி…
தரிசனத்திற்கு பக்தர்கள் தவிப்பு-கோயிலுக்கு சென்று கலெக்டர் ஆய்வு